சாதிச் சங்க மாநாடுகளில் பெரியார்!
ஒரு முக்கியமான காரியத்தில் இறங்கியிருக்கிறார் வீ.எம்.எஸ்.சுபகுணராஜன். பல்வேறு சாதிச் சங்க மாநாடுகளில் பெரியார் கலந்துகொண்டு ஆற்றிய உரைகளைத் தொகுத்து புத்தகமாகக் கொண்டுவருகிறார். “சாதிக்கு எதிரான போராட்டம் என்பது பல்வேறு தளங்களிலும் இயங்க வேண்டியது. எப்படி எல்லாத் தரப்பினருடன் உரையாட வேண்டும் என்பதற்கான உதாரணங்களில் ஒன்றாக, பெரியாரின் இந்த உரைகளைச் சொல்லலாம்” என்று சொல்கிறார் சுபகுணராஜன். கயல் கவின் பதிப்பக வெளியீடாக ஜூலையில் வருகிறது புத்தகம்!
விலை மதிக்க முடியாத காதல் பரிசு
திருநெல்வேலி, புளியங்குடியைச் சேர்ந்த புத்தகக் காதலர் ராபியா குமாரன். மே மாதம் நடந்த தனது திருமணத்தின்போது ‘மஹர்’ ஆகப் மணப்பெண்ணுக்குக் கொடுத்த ‘பரிசத்தொகை’ என்ன தெரியுமா? 100 புத்தகங்கள்! வருங்கால மனைவிக்காகத் தேடித் தேடி, எல்லா வகையான புத்தகங்களையும் வாங்கினாராம் மனிதர். “துபாயில் வேலை செய்கிறேன். புத்தகம்னா உயிர். மாணவர்கள்கிட்ட புத்தக வாசிப்பைக் கொண்டுபோய் சேர்க்கணும்னுகூடப் பல காரியங்கள் செஞ்சிருக்கேன். கல்யாணம்கிறது என்னோட சொந்த பந்தம் எல்லாம் வர்ற நிகழ்ச்சி. கூட வாழப்போறவங்களுக்கு ஒரு நல்ல பரிசைக் கொடுத்ததுபோலவும் ஆச்சு, சொந்தபந்தப் பிள்ளைகள்கிட்ட புத்தகம் தொடர்பா ஒரு ஆர்வத்தை உண்டாக்கின மாதிரியும் ஆச்சு!” என்கிறார். “சரி, வீட்டுல புத்தகங்களைப் படிக்க ஆரம்பிச்சுட்டாங்களா?” என்று கேட்டால், “அவங்க என்னோட வேகமா இருக்காங்க, படிச்சு முடிச்சுட்டாங்க. இப்ப எழுத வேற ஆரம்பிச்சுட்டாங்க!” என்று சிரிக்கிறார்!
தமிழ் எழுத்தின் ஆங்கில வாரிசு
சென்னை கிறிஸ்துவக் கல்லூரி மாணவி அ.வி. சாருமதி ஆங்கில நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார். விசேஷம் அதுவல்ல; ‘சம்மர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நாவல், ‘செலெக்டிவ் ம்யூட்டிஸம்’ எனும் உளவியல் பிரச்சினையை அணுகுகிறது. யாருடனும் பேசாமலும், பேசவும் பயப்படுகிற ஒரு பெண்ணின் உளவியல் கூறுகளை அடிப்படையாக வைத்து நாவலை எழுதியிருக்கிறார் சாருமதி.
தமிழின் தலித் இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான விழி.பா. இதயவேந்தனின் மகள் சாருமதி என்பது கூடுதல் தகவல்!
மார்க்ஸ் பெட்டகம்
கார்ல் மார்க்ஸ் பிறந்த இருநூறாம் ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தருணத்தில், ‘மார்க்ஸ் எங்கல்ஸ் தெரிவுசெய்யப்பட்ட நூல்கள்’ தொகுப்பை மீண்டும் கொண்டுவருகிறது ‘பாரதி புத்தகாலயம்’. 1983-ல் மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்தத் தொகுப்பு 12 பாகங்களைக் கொண்டது; இப்போது விற்பனையில் இல்லாதது. 34 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் வெளியாகும் இந்நூல் ஒரு மார்க்ஸிய பெட்டகம் என்று தாராளமாகச் சொல்லலாம்.
ரூ.3,000 மதிப்புள்ள இந்த நூல்களை முன்வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1,500-க்குப் பெறுவதற்கு இந்த மாத இறுதிவரை பதிவுசெய்துகொள்ளலாம். தொடர்புக்கு: 044-24332424.