மனிதர்கள் எதன் மீது அன்பு வைக்கிறார்களோ அதை ஒருநாள் தேவையில்லை என வெறுத்து ஒதுக்கியும் விடுவார்கள். அதுதான் மனதின் இயல்பு!
ஒன்றை நேசிப்பதற்கு அதன் பயன்பாடு அல்லது எதிர்பார்ப்புதான் பெரும்பாலும் காரணமாக இருக்கிறது.
அன்பு செய்வதற்கு மட்டுமே வலியுறுத்த வேண்டியிருக்கிறது. வெறுப்போ, தானே உண்டாகி விடுகிறது. நம் ஒவ்வொருவரிடமும் நாம் நேசிப் பவர்களின் பட்டியலை விடவும் வெறுப்பவர்களின் பட்டியல் அதிகம் இருக்கிறது. வெறுப்பு வேகமாக பரவிவிடுகிறது. பலராலும் வளர்த்தெடுக்கப்படுகிறது.
அன்பு செலுத்தவே முன்னுதாரணம் தேவை. ஆனால், வெறுப்பதற்கு யாரும் கற்றுத் தர வேண்டியதே இல்லை. சமூக ஊடகங்கள் வெறுப்பை வேகமாக பரவவிடுகின்றன. சமூக பண்பாட்டுத் தளங்களில் வெளிப்படும் வெறுப்பு இன்னொரு மனிதனை சகித்துக் கொள்ள முடியாதபடி, அவனை கொல்லும் அளவு வளர்ந்து நிற்கிறது. உணவில் தொடங்கி மரணம் வரை எல்லாவற்றையும் அரசியலாக்கி வெறுப்பைத் தூண்டுகிறார்கள். விஷம் தடவப்பட்ட வார்த்தைகளை பொதுவெளியில் பரவவிடுகிறார்கள். விளைவு, சகலரின் மனதிலும் வெறுப்பின் கொடுவிஷம் கலந்துவிடுகிறது.
மனிதர்கள்
எதையும் கடைசிவரை நேசிக்க மாட்டார்கள் என்பதற்கு பிலிப்பைன்ஸ் பழங்குடிகள் சொல்லும் கதைகளில் ஒன்று உதாரணமாகயிருக்கிறது.
பழைய நார் கூடை ஒன்றை பிரயோஜனம் இல்லை என்று ஒருவன் ஆற்றில் தூக்கி எறிகிறான். தண்ணீரில் மிதந்து செல்லும் அந்தக் கூடை, ‘தான் ஒரு காலத்தில் எப்படி எல்லாம் பாதுகாக்கப்பட்டோம்? பயன்பட்டோம்? தன்னை எப்படி கழுவி துடைத்து சுத்தமாக வைத்திருந்தார்கள்? கடவுளுக்குப் படையலிடும் தானியத்தைக் கூட நாம்தானே சுமந்து சென்றோம். இன்று நம்மை தூக்கி எறிந்துவிட்டார்களே...’ என நினைத்து வருந்தியது.
கரைஒதுங்கி சேறு அப்பிய நிலையில் கிடந்தபோது, மனிதர்கள் ஏன் இப்படி நடந்து கொண்டார்கள் என அதற்குப் புரியவேயில்லை
மனத் துயரைப் போக்கிக் கொள்ள தன்னுடைய ஆற்றாமையை ஒரு பூனையிடம் வெளிப்படுத்தியது. அதைக் கேட்ட பூனை சொன்னது: ‘‘உனக்கு மட்டுமில்லை, எனக்கும் அதே கதிதான். நான் குட்டியாக இருந்தபோது தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சினார்கள். கிண்ணத்தில் பால் ஊற்றி குடிக்க சொன்னார்கள். பெரியவன் ஆனதும் எலி பிடிப்பதற்காக என்னை வைத்துக் கொண்டார்கள். இப்போது முதுமை வந்துவிட்டது. என்னை ஒருவருக்கும் பிடிக்கவில்லை. அடித்து துரத்திவிட்டார்கள். இதுதான் மனித இயல்பு” என்றது.
இதைக் கேட்டும் கூடைக்கு மன அமைதி ஏற்படவில்லை. ஆற்றங்கரையோரம் மேய வந்த பசுவிடம், தன்னை இப்படி கைவிட்டுவிட்டார்களே எனப் புலம்பியது கூடை.
அதைக் கேட்ட பசு சொன்னது:
‘‘நான் ஆண்டுக்கு ஒரு கன்றை ஈன்றேன். எனது எஜமான் வீட்டில் பால் பெருகி ஓடியது. அவர்கள் வெண்ணெய்யும் நெய்யும் விரும்பி சாப்பிட்டார்கள். என் கன்றுக்குக் கூட பால் இல்லாமல் அவர்களே பீச்சிக் கொண்டார்கள். எனக்கு மடி வற்றியது. கன்று ஈனுவதும் நின்று போனது. இப்போது என்னை அடிமாடாக விற்கப் போகிறார்கள். மனிதர்களுக்கு நன்மை செய்தால் மிஞ்சுவது அவமதிப்பு மட்டுமே” என்றது.
இதைக் கேட்டதும், நார்கூடைக்கு வருத்தம் அதிக மானது. ‘‘இந்த உலகத்தில் நல்லதுக்கு காலமே இல்லையா?” எனக் கேட்டது.
அதற்கு ஆறு சொன்னது: ‘‘இவ்வளவு ஏன் என்னையே எடுத்துக் கொள். குடிப்பதற்கும், விவசாயத்துக்கும் என்னைதான் நம்பி இருக்கிறார்கள். ஆனால், என் மீதுதான் குப்பையும் கழிவும் கொட்டுகிறார்கள். ஒருவேளை தண்ணீர் வற்றிப்போனால் என்னை மறந்துவிடுவார்கள். இதுதான் மனிதர்களின் நியதி!’’
இதைக் கேட்ட நார்கூடை கோபமாக கேட்டது: ‘‘இந்த மனிதர்களுக்காக நாம் ஏன் உதவ வேண்டும்?’’
‘‘அது நம் இயல்பு. மனிதர்களுக்காக நம் இயல்பை ஏன் நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்?” எனக் கேட்டன ஆறும், பசுவும், பூனையும்.
நார் கூடை வருத்தத்துடன் சொல்லியது:
‘‘அதுவும் சரி! ஆனால், நம் இயல்பை இந்த மனிதர்கள் என்றுதான் புரிந்துகொள்வார்களோ?’’
இந்த வருத்தம் நார் கூடைக்குரியது மட்டுமில்லை. வயதானவர்கள். மாற்றுத்திறனாளிகள், சிறுவர்கள். பெண்கள். கிராமியக் கலைஞர்கள். விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் தன்னை எவரும் புரிந்துகொள்ளவில்லை, ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்... என்ற ஆற்றாமையுடன்தான் வாழுகிறார்கள்.
எழுத்தாளர் ஜனநேசன் கதைச்சொல்லி இதழில் வெளியான தனது கட்டுரை ஒன்றில் சுவாரஸ்யமான விஷயம் ஒன்றினை தந்திருக்கிறார்.
வெங்கடாத்திரி என்ற பெரியவர் சொன்ன விஷயம் இது:
‘குக்க தின்னவாடு குருநாதடு
நக தின்னவாடு நாராயணடு
பந்தி தின்னவாடு பரமசிவடு
ஏனிக தின்னவாடு என்த்தபெத்தவாடோ?'
- இது என்ன புதிர் என விளக்கம் கேட்டதற்கு, வெங்கடாத்திரி சொன்ன பதில்:
‘‘குக்க தின்னவாடு குருநாதடுன்னா நாயின் குணத்தை வென்று செரித்தவன். குருநாதனாக இருக்க தகுதி பெற்றவன். நக்கதின்னவாடு நாராயணடு என்றால் நரியின் தந்திரகுணங்களை எல்லாம் வென்று சீரணித்தவன். மன் நாராயணனாவான். பந்தி தின்னவாடு பரமசிவடு என்றால் பன்றியின் உக்கிரகுணங்களை கெலித்து செரித்தவன். பரமசிவனைப் போல ஆற்றல் உள்ளவனாவான். இவர்களில் ஏனிக தின்னவாடு என்த்த பெத்தவாடோ.... என்றால் உருவத்தில் பெரிய, பழிவாங்கல் குணம் கொண்ட யானையின் குணத்தை ஜெயித்து ஏப்பம் விட்டவன். எவ்வளவு பெரிய மகானாக இருப்பானோ’’ என அர்த்தம் என்றார்.
மனிதர்கள் யானையைப் பழக்கி அதன் கால்களில் விலங்கு மாட்டி தெருவில் யாசகம் கேட்க வைப்பவர்கள். அவர்களுக்கு யானையும் ஒன்றுதான் எறும்பும் ஒன்றுதான். பழங்குடி மக்கள் தங்கள் தேவைக்கு மேல் சேர்த்து வைக்கத் தெரியாதவர்கள். அடுத்தவர் சொத்தை அபகரித்துக் கொள்ள வேண்டும் என்ற தந்திரம் அறியாதவர். ஆகவே, அவர்கள் சொல்லும் கதைகளில் எளிமையான அறமே மேலோங்கியிருக்கும்.
பழங்குடி மக்களை அழித்து காலனியமயமாக்கியதன் பின்னுள்ள வரலாற்றை, உருகுவே நாட்டை சேர்ந்த எழுத்தாளர் எடுவர்டோ கலியானோ (Eduardo Galeano) ‘மெமரி ஆஃப் ஃபயர்’ (Memory of Fire Trilogy) என மூன்று தொகுதிகளாக சிறப்பாக எழுதியிருக்கிறார்.
அழிந்து ஒழிக்கபட்டப் பழங்குடி மக்களின் நினைவுகளாக இன்று மிச்சமிருப்பது அவர்களின் கதைகளும் பாடல்களும் ஓவியங்களும்தான். கலையும் இலக்கியமுமே எப்போதும் மனித வாழ்வின் மிச்சங்களாக எஞ்சி நிற்கின்றன என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.
இணையவாசல்: >பிலிப்பைன்ஸ் தேச வாய்மொழிக் கதைகளை வாசிக்க
- கதை பேசும்... | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com