தமிழ் ஓர் இசை மொழி என்பதற்கு அசைக்க முடியாத சான்று திருப் புகழ். தம் வாழ்நாளில் பல அற்புதங் களை நிகழ்த்தியவராகக் கருதப்படும் அருண கிரிநாதரைப் பற்றிய ‘அருணகிரிப் பெருமாளே’ என்னும் ஆவணப் படத்தை, சிம்பொனி இசையின் பின்னணியில் ஒலிக்கும் திருப்புகழின் பாடல்களோடு தயாரித்து இயக்கியிருக்கிறார், பிரபலமான பின்னணிப் பாடகராக நமக்கு ஏற்கெனவே அறிமுகமான பிரதீப்குமார்.
தமிழ்ச் சூழலில் இசை சார்ந்த பல புதிய முறைகளுக்கு மேடை அளிக்கும் அமைப்பான பிரக்ருதி அறக்கட்டளையின் முயற்சியால், இந்த ஆவணப் படம் சமீபத்தில் மேக்ஸ்முல்லர் பவனில் திரையிடப்பட்டது. வெறுமனே ஆவணப் படத்தைத் திரையிடாமல், ஆவணப் படத்தில் ஒலிக்கும் சில பாடல்களை நேரடியாக மேடையில் சூசா, ஷான் ரோல்டன் துணையுடன் பிரதீப்குமார் பாடியதும், ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொன்னதும், ஒரு சராசரித் திரையிடலை, வெகுஜன ரசனைக்கு உறவுப் பாலம் அமைக்கும் நிகழ்வாக மாற்றியது.
கிடார் ஏந்திய துறவி
இந்திய செவ்வியல் இசையும் மேற் கத்திய இசையும் தெரிந்த ஓர் இசைக் கலை ஞனைத் திருப்புகழ் எந்தளவுக்கு ஈர்க்கும் என்னும் கேள்விக்கான பதிலாய் ‘அருணகிரிப் பெருமாளே’ ஆவணப் படம் விளங்குகிறது. ஏறக்குறைய 600 ஆண்டுகளுக்கு முன் ஒரு மனிதர் பயணப்பட்ட வழித்தடத்தில், சமகால இளைஞரான பிரதீப்குமார் கிடார் சகிதமாகப் போவதும், திருப்புகழ் பாடல்களில் வெளிப்படும் அர்த்தங்களைப் பலரிடம் கேட்டுத் தெளிவு பெறுவதும், பாஸ்டன் பில்ஹார்மோனிக் இசைக் கலைஞர்கள் புடைசூழத் திருப்புகழைப் பாடுவதும் என முன்னும் பின்னுமாகப் பின்னப் பட்டிருக்கும் காட்சிகளின் தொகுப்பு, ஒரு சராசரி ஆவணப் படத்திலிருந்து இதை வித்தியாசப் படுத்துகிறது.
அதேசமயம், பிரச்சார தொனி முற்றிலும் தவிர்க்கப்பட்டிருப்பதும், நேரடியான ஒலிப்பதிவும் படத்துக்குப் பலம் சேர்ப்பதுடன், படத்துடன் ரசிகன் நெருங்குவதற்கும் உதவுகிறது.
கதை சொல்லலில் கிராஃபிக்
பிரதீப்குமாரின் மனைவி கல்யாணியின் ஒருங்கிணைப்பில் ஷான் ரோல்டன், சூசா என இளம் இசைக் கலைஞர்களின் ஆதிக்கத்தால் ஆவணப் படம் புத்துணர்வால் நிரம்பியுள்ளது.
மன்னரின் நோய் தீர்க்க கிளியின் உடலில் கூடு விட்டு கூடு பாயும் அருணகிரி, பாரிஜாதம் மலரை எடுத்துவர பறக்க, உடலை அவரின் எதிரிகள் எரித்துவிடுகின்றனர்.
பாரிஜாதம் மலரை எடுத்துவந்து, மன்னரின் நோயைத் தீர்க்கும் அருணகிரிநாதர், கிளி உருவிலேயே கந்தர் அனுபூதியைப் பாடியதாகக் கருதப்படுகிறது. அருணகிரிநாதரின் வாழ்க்கை யில் நடந்த பல முக்கியச் சம்பவங்களை கிராஃபிக் வடிவில் திரையில் காட்டியிருப்பதால் புதிய காட்சி அனுபவம் கிட்டுகிறது. கஃவூன் என்னும் வாத்தியத்தை இசைத்திருப்பதோடு, கிராஃபிக் டிசைனராகவும் தன்னுடைய பங்களிப்பைச் செய்திருக்கிறார் சூசா.
கிழக்கும் மேற்கும்
திருப்புகழிலிருந்து எட்டுப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து இசையமைத்து ஆடியோ ஆல்பமாக வெளியிடப்பட்டிருக்கிறது. அதற்கான காட்சிகளைச் சேர்க்கும் எண்ணம்தான் முதலில் இருந்திருக்கிறது. அது தொடர்பான விசார ணையில் அருணகிரிநாதரைப் பற்றித் திரு வண்ணாமலையில் இருப்பவர்களுக்கேகூட அதிகம் தெரிந்திருக்கவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. திருவண்ணாமலையில் இசைப் பள்ளி நடத்திவரும் காசி விஸ்வேஸ்வரனிடம் பேசியபோதுதான் ஒரு தெளிவு பிறந்திருக்கிறது.
அருணகிரிநாதர் எழுதிய 16 ஆயிரம் பாடல்களில் ஆயிரத்தி சொச்ச பாடல்கள் தான் கிடைத்திருக்கின்றன என்று ஆதங்கப் படுவதைவிட, இத்தனை ஆண்டுகளாக இந்தப் பாடல்களை வழிவழியாகப் பாடிக் காப்பாற்றி வரும் அதிசயத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள்.
“மேற்கில் தோன்றிய பழமையான சிம்பொனி இசை வடிவத்தையும் கிழக்கில் தோன்றிய சந்தப் புகழ் வாய்ந்த திருப்புகழையும் இணைத்துத் தர முடிவு செய்தோம். கிரவுட் ஃபண்டிங் முறையிலும் எங்களின் பூர்வா நிறுவனம் சார்பாகவும் மூன்றாண்டுகள் உழைப்புக்குப் பின் இந்த ஆவணப்படம் தயாராகி உள்ளது. உலகம் முழுவதும் நடக்கும் சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்கு ஆவணப் படப் பிரிவில் இதைத் திரையிட உள்ளோம்.
தமிழகத்தில் இருக்கும் பல கோயில்களிலும் இதைத் திரையிடும் எண்ணம் இருக்கிறது” என்றார் திரையிடலுக்குப் பின் பேசிய பிரதீப்குமார்.