இலக்கியம்

இணைய எழுத்தாளர்கள் எந்த அளவுக்குச் சாதிக்கிறார்கள்?

வெ.சந்திரமோகன்

2017 சென்னைப் புத்தகக் காட்சியின் கலக்கல் நிகழ்வு அராத்துவின் ஐந்து நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சிதான். சாரு நிவேதிதா, ஜெயமோகன் இருவரையும் ஒரே மேடையில் ஏற்றி, ஐநூறு பேருக்கு மேல் ஆட்களைத் திரட்டி, மனிதர் பின்னிவிட்டார்! இணையத்திலிருந்து ஒரு படையே வருடந்தோறும் புதுப் புதுப் புத்தகங்களோடு வந்துகொண்டிருக்கிறது. எந்த அளவுக்கு இந்தப் புத்தகங்களுக்கு வரவேற்பு இருக்கிறது? பேசினேன்.

அதிஷா

என்னைக் கேட்டால் சமூக வலைதளங்களில், குறிப்பாக ஃபேஸ்புக்கில் நிலைத்தகவல்களாக எழுதிய வற்றைத் தொகுத்துப் புத்தகமாக்குவது என்பது ஒரு 'பாவச் செயல்' என்பேன். ஏனென்றால், ஒரு புத்தகம் என்பது குறைந்தபட்ச உழைப்பையும் பொறுப்புணர்வையும் கோருவது. அன்றாடம் போகிற போக்கில் நாம் உதிர்த்துப்போவதை அப்படியே தொகுத்துப் புத்தகமாக்குவது சரியல்ல. என்னுடைய அனுபவம் என்னவென்றால், சமூக வலைதளங்களில் என்னைப் பின்தொடர்பவர்கள் கிட்டத்தட்ட 40,000 பேர் இருக்கிறார்கள். ஆனால், ஒரு புத்தகம் என்று வரும்போது இருநூறு, முந்நூறு பிரதிகள்தான் விற்கின்றன. முகநூலில் எழுத ஆரம்பித்து, தன்னை அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்த்திக்கொண்டால் பிரச்சினையில்லை. ஆனால், இங்கே பலரும் அதே இடத்திலேயே தேங்கிக் கிடக்கிறார்கள்!

நரேன் ராஜகோபாலன்

இணையத்தில் எழுதுவதற்கும், புத்தகமாகக் கொண்டுவருவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஃபேஸ்புக்கில் போகிற போக்கில் தட்டிவிடலாம். புத்தகம் என்று வரும்போது ஆதாரத் தகவல்கள், வரலாறு, பின்னணி என்று கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாக நான் எழுதியிருக்கும் 'கறுப்புக் குதிரை' புத்தகம், ஃபேஸ்புக்கில் நான் எழுதிய பதிவுகளின் தொடர்ச்சிதான். ஆனால், அந்தப் பதிவுகளைப் பல மடங்கு விரிவாக்கியே புத்தகமாக்கி இருக்கிறேன். இணைய அறிமுகமானது, என் புத்தகத்தை ஒருவரைக் கையில் எடுக்க வைக்கும். ஆனால், புத்தக உள்ளடக்கத்தின் தரமே அதை வாங்க வைக்கும்.

கருந்தேள் ராஜேஷ்

தமிழ்த் திரைப்படங்களில் தொடங்கி உலகப் படங்கள் வரை நான் இணையத்தில் எழுதிய கட்டுரைகளே என்னைப் பத்திரிகைகள் அழைத்து எழுதவைக்கக் காரணமாக அமைந்தன. இணையத்தில் அறிமுகமாகுபவர்கள் தொடர்ந்து தீவிரமாக இயங்கினால் அதற்கான இடம் நிச்சயம் இருக்கிறது என்றே நினைக்கிறேன்.

அராத்து

முதன்முதலில் ஃபேஸ்புக்கில் எழுதிய குறுங்கதைகளைப் புத்தகமாகக் கொண்டுவந்தபோது, நல்ல வரவேற்பு இருந்தது. சக பதிவர் என்பதால் கிடைத்த அனுகூலம் இது. சமீபத்தில் ஆறு புத்தகங்கள் வெளியிட்டேன். வரவேற்பு இருந்தாலும், முன்னர் இருந்த குதூகலம் இல்லை. இப்போது நான் எழுத்தாளன் ஆகிவிட்டேனே! என்னைப் போன்றவர்கள் புத்தகம் எழுதிப் பதிப்பகங்களிடம் கொடுப்பதுடன் நிறுத்திவிடுவதில்லை. விளம்பரம், வெளியீட்டு விழா ஏற்பாடு வரை செய்கிறோம். என்றாலும், இணைய எழுத்தாளர்களுக்குப் பலர் அத்தனை முக்கியத்துவம் தருவதில்லை. அது வருத்தம் தரும் விஷயம்!

மனுஷ்ய புத்திரன்

தமிழில் இணைய எழுத்தாளர்கள் நிறையப் பேரை 'உயிர்மைப் பதிப்பகம்' மூலம் கொண்டுவந்ததில் எனக்கு மகிழ்ச்சி உண்டு. ஃபேஸ்புக்கில் எழுதத் தொடங்கி சிறுகதை, நாவல் என்று தொடர்ந்து தங்களை வளர்த்தெடுத்துக்கொண்டவர்கள் பலர். அந்த வகையில் ஒருவர் எழுத்துத் திறனை வளர்த்துக்கொள்ள இணையம் ஒரு முதல் நிலைக்களமாக இருக்கிறது. இன்னொரு முக்கியமான விஷயம் இந்த இணைய எழுத்தாளர்கள் அவர்களுடைய புத்தகங்கள் வரும்போது, கூடவே அவர்கள் நண்பர்கள் வட்டாரத்தையும் புத்தகச் சந்தைக்குக் கூட்டி வருகிறார்கள். தங்கள் புத்தக விளம்பரத்தை வெளியிடுவது, புத்தகத்தைப் பற்றித் தொடர்ந்து பேசுவது, இதேபோல ஏனைய இணைய நண்பர்கள் புத்தக நிகழ்வுகளிலும் பங்கேற்பது என்று செயல்படுகிறார்கள். இது புத்தக விற்பனைக்குப் பெரிதும் பயன்படுகிறது. இவர்கள் மீதான முக்கியமான விமர்சனம் என்றால், முன்னோடி எழுத்தாளர்கள் தொடர்பான ஆழமான பார்வை சிலரிடம் இருப்பதில்லை. அதை வளர்த்தெடுத்துக்கொண்டால், அடுத்த கட்டத்தை இவர்களால் நிச்சயம் அடைய முடியும்!

வெ.சந்திரமோகன், தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

SCROLL FOR NEXT