சென்னைப் புத்தகக் காட்சியில் முதல்முறையாகக் காலடி எடுத்துவைத்துள்ளது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை. தொல்லியல் துறைபற்றிப் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கு (எண் 559), பழமையும் பண்டைய கலாச்சாரமும் பேசும் புத்தகங்களை உள்ளடக்கியது. குறிப்பாக, ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ள பல தகவல்களைக் கொண்டு எழுதப்பட்ட புத்தகங்கள் அரங்கில் அதிகம் உள்ளன.
இந்த அரங்கில் அணிவகுத்திருக்கும் நூல்களில் ஓலைச்சுவடியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ‘வைத்திய சாஸ்திரம்’, ‘சிற்ப சாஸ்திரம்’, ‘நாட்டிய சாஸ்திரம்’, ‘நவாஸ் சாஸ்திரம்’ நூல்களும் தமிழகத்தில் எங்கெல்லாம் தொல்லியல் களங்கள் இருக்கின்றனவோ, அவற்றைத் தொகுத்து வெளியிடப்பட்டுள்ள ‘தொல்லியல் கையேடு’ நூலும் முக்கியமானவை. பல அரிய தகவல்களை உள்ளடக்கிய அகழாய்வு தொடர்பான புத்தகங்களும் விற்பனைக்கு வந்துள்ளன. 1961 முதல் இப்போது வரை எழுதப்பட்ட சுமார் 250 தலைப்புகளிலான புத்தகங்கள் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 2011-க்கு
முன் வெளியான புத்தகங்களுக்கு மட்டும் 10% தள்ளுபடி அளிக்கிறார்கள்.