தொடக்கத்தில் நான் கவிதை எழுதிவந்தேன். வானம்பாடி இயக்கத்தில் பங்குபெற்றேன். ‘கல்லிகை’ என்ற குறுங்காவியம் ஒன்று எழுதினேன். கவிதை எழுதுவது உணர்வுக் கொந்தளிப்பை உள்வாங்கிக்கொள்வதாக அமைகிறது. இந்த உணர்வுக் கொந்தளிப்பு, உடலைப் பெரிதும் வருத்தும். இந்தக் காரணத்தால் கவிதை எழுதுவதைக் கைவிட்டேன்.
ஏற்கெனவே நான் நிறையப் படித்திருந்தேன். அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகம் எனக்கு வாய்த்த பெரும் நிதியம். வகுப்பறையில் இருந்ததைவிட நூலகத்தில் நான் கழித்த நேரம் மிகுதி. வரலாறு, மெய்யியல், திறனாய்வு தொடர்பான நூல்களைத் தேடித் தேடிப் படித்தேன். இத்தகைய படிப்பின் ஆதாரத்தில் திறனாய்வு என்பது எனக்கு வசப்பட்டதாக இருந்தது. தமிழிலக்கியத் திறனாய்வு என்ற முறையில் இருபது நூல்கள் எழுதியிருப்பேன். மார்க்ஸியம் குறித்தும் மூன்று நூல்கள் எழுதினேன். என் சமய அனுபவம் குறித்து இரண்டு நூல்கள் எழுதினேன். ஒன்றின் பெயர் ‘கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை’, அடுத்தது ‘நானும் கடவுளும் நாற்பதாண்டுகளும்’. இவை தவிர கவிதை நூல் ஒன்று.
சங்க இலக்கியம் குறித்து எனக்குள் ஏற்பட்ட தெளிவு குறித்து இங்கு சொல்ல வேண்டும். சங்க இலக்கியம் ஒரு மாறுதல் காலம். வரலாற்றுக்கு முற்பட்ட இனக்குழுச் சமூகம் மாறி தனியுடைமை, அரசதிகாரம் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்ட உடைமைச் சமூகத்துக்கு சங்ககாலம் மாறியது. இனக்குழுச் சமூகத்தின் நற்பண்புகள் சங்கச் சான்றோருக்குள் தொடர்ந்தன. இனக்குழுச் சமூகத்தில் ஏற்றத்தாழ்வில்லை. ஆண்டான் அடிமை என்று இல்லை. இயற்கையில் கிடைத்தவற்றைப் பகிர்ந்து உண்டனர். வேட்டையாடிக் கிடைத்தவற்றையும் பகிர்ந்துகொண்டனர். இவற்றில் முதல் பங்கு கலைஞர்களுக்கும் பெண்கள், குழந்தைகளுக்கும் உரியது. இந்தச் சமூகத்தின் பங்குகள் அழியவில்லை. தமிழிலக்கிய வரலாறு முழுவதும் இப்பண்புகள் தொடர்ந்தன.
இனி என் சமயக் கருத்து பற்றிச் சொல்ல வேண்டும். மார்க்ஸ் கூறினார், மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்கப் பெருமூச்சு. அதே சமயம் ஒடுக்கப்படும் சூழலுக்கு எதிரானது. மதம் என்பது ஆன்மா அற்ற உலகின் ஆன்மா. இதயமற்ற உலகின் இதயம். இப்படி விளக்கி மதம் என்பது மக்களுக்கு அபின் என்று முடித்தார். அபின் என்ற சொல்லுக்கு இரு பொருள் உண்டு. ஒன்று, போதை தருவது. இன்னொன்று, துயரங்களுக்கு ஒரு மாற்றாக, மருந்தாக அமைவது. இந்த வாசகத்தில் சமயம் என்பது ஓர் அழிவு சக்தி என்று குறிப்பிடவில்லை. சமுதாயத்தில் ஒடுக்கப்படும் சூழலுக்கு எதிராக மக்களுக்கு ஒரு சகிப்புத்தன்மை தேவைப்படுகிறது. இதற்கு மதம் பயன்படுகிறது. ஒடுக்கப்படும் சூழல் நிலவும் காலம் முழுவதும் சமயம் உயிரோடு இருக்கும். சூழலை மாற்றினால் ஒழிய மதம் அழியாது.
இந்த அடிப்படையில்தான் சமயம் குறித்த என் கருத்துகள் அமைகின்றன. என்னதான் கடவுள் இல்லை என்று பெரியாரும் மார்க்ஸியரும் பேசினாலும் கடவுள் ஒழியவில்லை. காரணம், சமூகத்தில் ஆதிக்க சக்திகள் பெருகிவருகின்றன. மக்கள் ஒடுக்கப்படுகின்றனர். அரசதி காரமும் முதலாளிகளும் கூட்டு சேர்ந்து கொள்கின்றன. இவர்கள் மதத்தின் காவலர்கள். இந்த மதம்தான் மக்களின் கண்களை மறைக்கிறது. ஆதிக்கத்துக்கு அனுசரணையாக இருக்கிறது. இப்பொருளில் தான் ‘கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை’ என்று நூல் எழுதினேன். எனக்குள் இருக்கும் கடவுளை வெளியேற்றத் தொடர்ந்து ஆய்வுகள் செய்தேன். இறுதியாகக் கடவுள் என்பது ஒரு கருத்தாக்கம் மட்டுமே. இது கருத்தாக்கம் மட்டுமல்லாமல் ஓர் அழகிய கருத்தாக்கம். சற்று போதை தரும் கருத்தாக்கம்.
எனினும், தமிழிலக்கியத்தில் ஒரு பாதி அளவு இருக்கும் சமய இலக்கியத்தை நான் குறை சொல்ல மாட்டேன். திருவாசகப் பாடலுக்கு இடையில் மனிதத் துயரை நாம் கேட்கிறோம். ‘ஊர் இலேன், காணி இலேன், உறவு மற்றொருவர் இலேன்’ என்ற வரிகளில் மனிதனின் ஏக்கத் துயரைக் காண்கிறோம். இவனைக் குற்றம் சொல்ல முடியாது. இவனோடு சேர்ந்து நாமும்தான் துயரப்பட வேண்டும். இவ்வகையில்தான் சமய இலக்கியம் பற்றிய என் புரிதல் அமைந்திருக்கிறது. ஆழ்ந்து பார்த்தால் கடவுள் என்ற பிம்பத்தினுள் இனக்குழுச் சமூகத்தின் மேன்மையான பண்புகளின் கொள்கலமாகக் கடவுள் இருப்பதைக் காண முடியும். இந்தக் கடவுளுக்கு அழிவில்லை.
என் சிற்றிதழ் முயற்சி பற்றி இனி சொல்ல வேண்டும். சி.சு. செல்லப்பா, க.நா.சு., சிட்டி முதலானவர்களோடு எனக்குத் தொடக்கம் முதலே பழக்கம் உண்டு. வெங்கட் சாமிநாதன், பிரமிள் ஆகியோரோடும் உறவு ஏற்பட்டது. அதன் காரணமாகச் சிற்றிதழ் வட்டாரத்தில் நானும் ஒருவனானேன். இதன் காரணமாகத்தான் இலக்கியம் முதலியவை பற்றி எனக்கு விரிந்த பார்வை ஏற்பட்டது. ‘பரிமாணம்’ (1979) என்ற இதழைத் தொடங்கினேன். மார்க்ஸியம் என்பதை சோவியத் ரஷ்யா, சீனா ஆகியவற்றோடு நிறுத்திவிடக் கூடாது. மேற்குலகிலும் இந்தியாவிலும் தமிழகத்திலும் மார்க்ஸியம் புதிய பரிமாணங்களைப் பெற்றிருக்கிறது. இந்த அடிப்படையில் ‘பரிமாணம்’ என்ற இதழைத் தொடங்கினேன். பின்னர், ‘நிகழ்’ (1988) என்ற சிற்றிதழ். சோவியத் யூனியன் தகர்வை ஒட்டி மார்க்ஸியத்தின் மீது உலக அளவில் அவநம்பிக்கை ஏற்பட்டது. எங்களுக்கு அப்படி இல்லை. சோவியத் யூனியனில் தகர்ந்தது முதலாளித்துவத்தை உள்வாங்கிக்கொண்ட மார்க்ஸியம். மார்க்ஸியத்துக்கு இப்போதுதான் புதிய பரிமாணங்கள் கிடைத்துள்ளன. இந்த அடிப்படையில் ‘நிகழ்’ இதழ் வெளிவந்தது.
தமிழுக்கு 90-களில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. தமிழ் வாழ்வும் வரலாறும் கேள்விக்குரியவையாகின. இதனை ஆய்வு செய்யும் முறையிலும் தீர்வுகள் கண்டறியும் முறையிலும் ‘தமிழ் நேயம்’ (1998) இதழ் தொடங்கினேன். 67 இதழ்கள் வெளிவந்தன. தமிழியல் ஆய்வு களையும் இந்த இதழ் தாங்கி வந்தது. தமிழுக்கு மெய்யியல் உண்டா, இல்லையா என்ற கேள்விக்கு பதில் சொல்லும் முறையில் கட்டுரைகள் வெளிவந்தன.
(தொடரும்)
- கோவை ஞானி, மூத்த எழுத்தாளர், மார்க்ஸிய அறிஞர், தொடர்புக்கு: kovaignani@gmail.com