ஸ்பானிய மொழியில் 60களில் வெளிவந்து 80களில் நோபெல் பரிசு பெற்ற மார்க்கேஸின் தனிமையின் நூறு ஆண்டுகள் நாவல், தமிழின் அங்கமாகியிருக்கிறது.
மகோந்தா கிராமம் நகரமாக மாற நூறு ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது. சதுப்பு நிலப் பகுதியில் உருவாகும் அந்நகரையே ஓர் உலகமாக விரிக்கிறார் மார்க்கேஸ். அந்த நகரை ஹோசே அர்க்காதியோ புயேந்தியா நிர்மாணிக்கிறார். புயேந்தியா வம்சத்தின் ஏழு தலைமுறைகளால் அந்த நகரம் நிரம்புகிறது. போர், பொறாமை, கொள்ளை நோய், கோபம் என மனிதன் எதிர்கொள்ளும் சகல எதிர்மறைகளையும் எதிர்கொண்டு சிதிலமாகிறது மகோந்தா.
புயேந்தியா வம்சத்தின் முதல் நபரான ஹோசே அர்க்காதியோ புயேந்தியா முதல் கடைசி நபரான அவுரேலியானோவரை அனைவரும் தனிமையால் நிரப்பப்பட்டவர்கள். தனிமையின் சாரம் நபருக்கு நபர் மாறுபட்டிருந்தாலும் அவர்கள் தனிமையானவர்களே. கூட்டமாக இருந்தாலும் கூட்டத்தின் தன்மை அவர்கள் தோலுக்குக் கீழ் செல்வதில்லை. இந்த உள்ளார்ந்த தனிமைதான் நூறு ஆண்டுகளின் வழியே கதையாக உருக்கொள்கிறது.
இந்த நாவலின் நடையை மாய யதார்த்தம் என்றும் மாந்திரீக யதார்த்தம் என்றும் கூறுகிறார்கள். இது விமர்சகர்களின் வகைப்பாடு. எதுவாயினும் சரி, ஓர் அசலான உலகை மாயத்தனமாகப் பின்னுகிறார் மார்க்கேஸ். யதார்த்தத்தின் கீழே - உள்ளடுக்கில் ஒளிந்திருக்கும் அகவயமான உலகின் வழியே - நாவல் பயணிக்கிறது. நனவுலகின் கனவுத் தன்மைதான் இந்த நாவலின் நடை. கனவுத்தனமான நனவின் நீட்சி அல்லது கனவுக்கும் கனவுக்கும் இடையிலான நுட்பமான அசல், மொழியாக மாறியிருக்கிறது.
இந்த நுட்பமான மொழி தமிழில் சாத்தியமாகியிருக்கிறது என்றால், அதற்கு சுகுமாரன் முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டும். அவரது மொழிபெயர்ப்புத் திறனையும் படைப்பாற்றலையும் உணர்ந்தவர்களுக்கு இதனை உணர்வதில் சிக்கல் இருக்காது.
தனிமையின் நூறு ஆண்டுகள்
(மொழிபெயர்ப்பு) - நாவல்
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்
தமிழில்: சுகுமாரன்
பக்கம்: 407
விலை: ரூ. 350.
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில்
(தொ.பே.: 04652 - 278525)