இலக்கியம்

ஈரோடு புத்தகத் திருவிழா: வாசகர் கருத்து

செய்திப்பிரிவு

புத்தகத் தேர்வுக்கே ஒரு நாள் வேண்டும்!

எவ்வளவு வேலையிருந்தாலும், ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கென நான் இரண்டு நாட்களை ஒதுக்கிவிடுவது வழக்கம். முதல் நாள் முழுக்க அனைத்து அரங்குகளையும் விடுதலின்றிப் பார்வையிட்டு, ஒவ்வொரு துறையும் எவ்வளவு வளர்ந்துள்ளது என்பதை அறிந்துகொண்டு, வாங்க விரும்பும் புத்தகங்களைத் தேர்வு செய்வேன். இரண்டாவது நாளில், புத்தகப் பட்டியலுடன் நேரடியாக, சம்பந்தப்பட்ட அரங்குகளுக்கே சென்று புத்தங்களை வாங்கி வந்துவிடுவேன்.

ஹாரிபாட்டர் நூலை எழுதிய எழுத்தாளருக்குச் சொந்தமாக ஒரு தீவே இருக்கிறது; அங்கு செல்ல சொந்த விமானமும் வைத்திருக்கிறார். ஆனால், இங்கு எழுத்தாளர்கள் வாழ்க்கையை ஓட்ட ஒரு தொழிலை வைத்துக்கொண்டு, உபதொழிலாகத்தான் படைப்புகளை உருவாக்க முடிகிறது. காரணம், நம்முடைய மக்கள்தொகையோடு ஒப்பிட்டால் புத்தகம் வாங்குவோர் எண்ணிக்கை மிக, மிக குறைவாக உள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்குப் புத்தகக் காட்சிகளெல்லாம் பேருதவி புரிகின்றன.

- டாக்டர் சதாசிவம்

ஐந்தாம் வகுப்பில் ஆரம்பித்தேன்!

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது முதன்முறையாகப் புத்தகத் திருவிழாவுக்கு வந்தேன். அதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் வந்துவிடுகிறேன். வாங்கிய புத்தகங்களைக் கொண்டு வீட்டில் சிறிய நூலகத்தை ஏற்படுத்தியுள்ளேன். இந்த நூலகத்தில் ஆண்டுதோறும் புதிய புத்தகங்களை வாங்கிச் சேர்ப்பதோடு, அனைத்துப் புத்தகங்களையும் பல முறை படித்துவிட்டேன். இந்த ஆண்டு திருவிழாவுக்காக முன்பே பணம் சேர்த்துவைத்துவிட்டேன். அறிவியல் தொடர்பான புத்தகங்களை அதிகம் வாங்க விரும்புகிறேன்.

ரா.சி.ரித்விகா, பிளஸ் 1 மாணவி,

SCROLL FOR NEXT