புத்தகங்களைப் புரட்டும்போது அவற்றின் பக்கங்களிலிருந்து எழுகிற மெல்லிய வாசனை நம் எல்லோருக்கும் பிடித்தமானதுதான். ஆனால், பக்கங்களைப் புரட்டி முகர்ந்து பார்த்துப் புத்தகம் வாங்கிய வாசகரை எனக்குத் தெரியும். அவர் ஒரு எழுத்தாளரும்கூட. சென்ற ஆண்டு காலமான எழுத்தாளர் ஐராவதம் சுவாமிநாதன்தான் அவர். ஐராவதம் என் நண்பர். எங்கள் நட்புக்கு வயது நாற்பது.
எழுபதுகளின் இறுதியில் நான் சென்னை ரங்கநாதன் தெருவாசியாக இருந்தேன். விடுமுறை நாட்களில் ஐராவதம் என்னை பழைய புத்தகக் கடைக்கு அழைத்துச்செல்வார். சென்னையில் பழைய புத்தகக் கடைக்காரர்கள் பலரை அவர் தெரிந்து வைத்திருந்தார்.
பெரும்பாலும் சாலையோரக் கடைகள். அபூர்வமான ஆசிரியர்களை மட்டுமன்றி பழைய புத்தகங்களின் வாசனையையும் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் ஐராவதம்.
தி. ஜானகிராமனின் பழைய பதிப்பு நாவல்களின் வாசனையை நுகரும்போது அந்த நாவல்களில் புழங்குகிற கதாபாத்திரங்களின் காலத்தின் வாசனையை உணரலாம் என்பார். மட்கிப்போன மகிழம்பூ வாசனை, தாமரைப்பூ வாசனை, மழை வரும்முன் வீசும் மண்வாசனை, சாக்லெட் வாசனை இப்படி எவ்வளவோ வாசனைகளை புத்தகங்களில் காண்பித்துச் சொன்னவர் ஐராவதம்.
அப்போதெல்லாம் பெண்கள் தலையில் தாழம்பூ சூடிக்கொள்வார்கள். தாழம்பூவுக் கென்று ஒரு தனிவாசனை உண்டு. வருஷங்கள் பல கடந்து தாழம்பூவின் நிறம் குன்றி பழுப்பேறிய பிறகும் அதன் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கும். ஒருநாள் ஐராவதம் அவர் வீட்டில் “இதோ பார்த்தீரா?” என்று காண்டேகரின் காதல் நவீனம் ஒன்றின் பக்கத்திலிருந்து தாழம்பூ மடல் ஒன்றை எடுத்துக் காண்பித்தார். மெல்லிய வாசனை கருமை ஏறிய பழுப்பு.
“யாரோ ஒரு பெண் இந்த நாவலைப் படிக்கும்போது புக்மார்க் மாதிரி தன் கேசத்தில் செருகிய தாழம்பூ மடல் ஒன்றை வைத்துவிட்டாள்! இந்தப் பக்கத்தில் என்ன வாசனை! தாழம்பூவை அடையாளமாக வைத்துப் புத்தகத்தை மூடிவிட்டு எங்கு சென்றாளோ?
அவள் மீதமுள்ள நாவலைப் படித்தாளா? அவள் கூந்தலின் சீயக்காய் வாசனை கூட கொஞ்சம் வீசுகிறாப்போல் இருக்கு...” என்றார்.
“இது ரொம்ப ஓவர் சார்” என்றேன் நான். “ஆனால் இதை வைத்து ஒரு கதையே எழுதிவிடுவீர்கள்போல” என்றேன்.
“எழுதலாம்தான்! என்றார் குறுஞ்சிரிப்புடன்!
ஒருமுறை அழகியசிங்கர் ஐராவதத்தை இலக்கியச் சிந்தனை கூட்டத்துக்கு அழைத்துப் போனார். அங்கு முத்துசாமி ஐராவதத்தை பார்த்துவிட்டு “என்னய்யா இங்கெல்லாம் வர மாட்டீரே! வந்திருக்கிறீர்!” என்றாராம். அதற்கு ஐராவதம் “இவர்தான் என்னைத் தூசிதட்டி அழைத்துவந்தார்” என்றார். பழைய புத்தகங்களை தூசிதட்டி வாசிக்கும் பிம்பத்தைத் தன்மீது அப்படிப் பொருத்திக்கொண்டுவிட்டிருந்தார்!
ஹிக்கின்பாதம்ஸ் கடையில் அவருக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளரின் புத்தகம் சமீபத்தில் வெளியாகி விற்பனைக்கு இருந்தது. “சார் வாங்கலையா?” என்றேன். “வேணாம்பா. புஸ்தகம் அநியாயத்துக்குப் புதுசா இருக்கு. தொறந்தா பளீர் பளீர்னு டால் அடிக்குது. கொஞ்ச நாள் போகட்டும். பழசானதும் வாங்கலாம்” என்றார்.
“பழசானாலும் அதே புத்தகத்தைதானே வாங்கப்போகிறீர்கள்?”
“எல்லாமே அப்படித்தான்யா. பழசின் மவுசே தனி. திருக்குறள் இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னால் எழுதியது. புறநானூறு, அகநானூறு எல்லாம் அப்படியே… எனக்கு உ.வே.சா. கொடுத்துவைத்தவர்னு தோணும். பழைய தமிழ் நூல்களையெல்லாம் பழஞ்சுவடிகளில் படித்திருக்கிறார்! ஆஹா அந்தப் பனை ஓலைச்சுவடிகளின் வாசனை எப்படி இருந்திருக்கும்?”
நான் ஒருமுறை கேட்டேன்; “ஏன் சார் இந்த வாசனையெல்லாம் இயற்கையாகவே வருகிறதா? அல்லது நமது மனசு செய்துகொள்ளும் கற்பனையா?”
ஐராவதம் சொன்னார், “எல்லா வாசனையும் மனசின் கற்பிதம்தான் தெரியுமோ? இதைப் பற்றி பெரிசா ஆராய்ச்சி பண்ணி வெள்ளைக்காரன் புஸ்தகமே போட்டுட்டான்” அவன் சிக்மண்ட ஃப்ராய்டின் சிஷ்யன். இதே மாதிரி புஸ்தக வாசனை பிடிப்பவர்கள் ஒருவிதமான மனநோயாளிகள் என்கிறான் அவன்! இவர்கள் சுலபமாகக் காதல் வசப்படுகிறவர்கள், பெண் சிநேகிதத்துக்கு ஏங்குபவர்கள், வெளிப்படையாக வீரம் பேசுபவர்கள், உள்ளுக்குள் கோழைகள்! உன்னையும் என்னையும் போல!”
-கோபாலி, தொடர்புக்கு:- thanjavurkavirayar@gmail.com