இலக்கியம்

கொச்சி பினாலே 2016-2017: கடல், காற்று, கவிதை...

மண்குதிரை

இரு பக்கமும் வண்ணச் சுவரொட்டிகள், முண்டுத்திய ஜார்ஜ் லூயீ போர்ஹே, கட்டஞ்சாயா குடிக்கும் காப்ரியேல் கார்சியோ மார்க்கேஸ், நாய்கள் துரத்தும் மாபலிச் சக்கரவர்த்தி எனச் சுவாரசியம் அளிக்கும் ஓவியத் தோரணங்கள், ஆங்காங்கு கேட்கும் பன்மொழி உரையாடல்கள் என ஒரு கொண்டாட்ட நிகழ்வுக்கு அழைத்துச் செல்கிறது ‘கொச்சி பினாலே’க்குச் (kochi biennale) செல்லும் டி.எம். முகமது சாலை.

போர்த்துக்கீசியர்கள், அரேபியர்கள், டச்சுக்காரர்கள், யூதர்கள் உள்ளிட்ட பலரும் கேரளத்தின் கோட்டையைக் (Fort kochi) கைப்பற்ற படையெடுத்து வந்தனர் என்பது வரலாறு. இந்த முறை, ஜப்பான், சிலி, துருக்கி, ஆஸ்திரேலியா, போலந்து, ஸ்லோவேனியா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஆஸ்திரியா, சீனா, ஹங்கேரி உள்ளிட்ட 31 நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் 97 பேர் அந்தக் கோட்டையைக் கைப்பற்றித் தங்கள் கலைக் கொடியை ஏற்றியிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு டிசம்பர் 12-ல் தொடங்கிய மூன்றாவது ‘கொச்சி பினாலே (kochi biennale) நவீனக் கலைக் கண்காட்சி’ கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. 108 நாட்களாக நடைபெறும் இந்தக் கண்காட்சி தெற்காசியாவின் மிகப் பிரம்மாண்டமான கலை நிகழ்வு. அஸ்பின் வால், பெப்பர் ஹவுஸ், டேவிட் ஹால், தர்பார் ஹால், கோட்டபுரம் கோட்டை, கொச்சி கிளப் உள்ளிட்ட 12 இடங்களில் கிட்டத்தட்ட 100 கருப் பொருள் காட்சி வடிவங்கள் (Installations) பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

துயரக் கடலின் அலை

குரல்கள், சப்தங்கள், பழைய செய்தித் தாள்கள், திருநீறால் ஆன ஒரு பெரிய முட்டை, பழம் பொருள்கள், ஒளிப்படச் சட்டங்கள், திரைப்படக் காட்சி, நாற்காலிகள், ஆடைகள், இறந்த உடல்களின் புகைப்படங்கள் என விதவிதமான ஊடகங்களில் கலைஞர்கள் தங்கள் காட்சி வடிவங்களை (Installations) உருவாக்கிக் காட்சிப்படுத்தியுள்ளனர். அவற்றுள் சிலி கவிஞரான ரவுல் ஜுரிதாவின் துயரக் கடல் (sea of pain) என்னும் கவிதைக் காட்சி வடிவம் (Installation art) இந்தக் கண்காட்சியின் பிரம்மாண்டப் படைப்பு.

2015-ம் ஆண்டு துருக்கியிலிருந்து கிரீஸுக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது. அதில் பயணித்த அய்லான் என்னும் மூன்று வயது சிறுவனின் உடல் துருக்கியில் கரை ஒதுங்கியது. அந்தக் காட்சியின் ஒளிப்படம் உலகம் முழுவதிலும் உள்ள அகதிகளின் நிலையை உணர்த்தும் சாட்சியாக ஆனது. அந்தச் சிறுவனுக்கும் அவனுடன் இறந்துபோன அவனது அண்ணனுக்கும் ரவுல் இதைச் சமர்ப்பித்துள்ளார். ஒரு பெரிய கிடங்கு (warehouse) முழுவதும் கடல் அலையின் சப்தம். கிழே கடற்கரைபோல் அலையடிக்கும் தண்ணீர். நான்கு பக்கமும் சுவர். சுவரில், ‘துயரக் கடலில் இருக்கும் என் குரல் உனக்குக் கேட்கவில்லையா?’ என்ற கவிதை வரி. அந்த அறையின் தண்ணீரில் கால்கள் நனையும்போது நீங்கள் துருக்கிக் கடற்கரையில் இருக்கக்கூடும்.

ஆவிகளின் வீடு

கப்ரி ஆவிகளின் வீடு / சி.பாக்யானத் ஓவியம்

நெதர்லாந்தைச் சேர்ந்த கலைஞர் காப்ரியேல் லெஸ்டரின் படைப்பு இந்தக் கண்காட்சியின் மற்றொரு பிரம்மாண்டமான கருப் பொருள் காட்சி வடிவம் (Installation). ஒரு பகுதி நிலத்தில் மறு பகுதி அந்தரத்திலுமாகத் தொங்கும் வீடுதான் இந்தக் காட்சி வடிவம். தலைப்பு, கப்ரி ஆவிகளின் வீடு (Dwelling Kappiri Spirits). இதன் பின்னணியைத் தெரிந்துகொள்ள 17-ம் நூற்றாண்டு வரலாற்றைப் புரட்ட வேண்டும். அந்தக் காலகட்டத்தில் கொச்சியில் இருந்த போர்த்துக்கீசியர்களை, டச்சுக்காரர்கள் சண்டையிட்டு வெளியேற்றினர். போர்த்துக் கீசியர்கள் தங்கள் செல்வங்களைக் கோட்டைச் சுவர்களிலும் பிரம்மாண்டமான மரங்களிலும் புதைத்து வைத்தனர். தங்கள் அரேபிய அடிமைகளின் ஆவி அந்தச் செல்வங்களைப் பாதுகாக்கும் என்னும் நம்பிக்கையில் அவர்களையும் உடன் புதைத்தனர். அந்த அடிமைகள் ‘கப்ரி’ என அழைக்கப்பட்டனர். இந்த வரலாற்றை நினைவூட்ட அவர்களுக்காக வீடு ஒன்றை உருவாக்கியுள்ளார் காப்ரியேல். உள்ளே கப்ரிகள் புகைக்க சிகரெட். ஜன்னல் திரைச் சீலைகள் காற்றில் அசைந்தபடி கப்ரிகளின் வருகையை அறிவிக்கின்றன.

உள்ளேயிருந்து சில குரல்கள்

கேரளாவைச் சேர்ந்த சி.பாக்யானத்தின் கரித் துண்டு ஓவியங்கள் இந்தக் காட்சியின் ஓவியங்களுள் தனித்துவமான ஒன்று. ஒளி ஊடுருவும் காகிதங்களில் அவர் வரையும் ஓவியங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக உடனடியாகக் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. ஒளி ஊடுருவும் காகிதங்கள் என்பதால் அவை அடுக்குகளாக ஒரு ஓவியத்துக்குள் பல சித்திரங்களாக வெளிப்படுகின்றன. இதன் மூலம் மனித உருவத்துக்குள் இருக்கும் பல்வேறு உட்குரல்களை வெளிப்படுத்த அவர் முயல்கிறார்.

ஸ்லோவெனியக் கவிஞர் எலஸ் ஸ்டெக்கரின் நவீனக் கவிஞர்களுக்காக ஒரு பிரமிடை உருவாக்கியிருக்கிறார். குறுகலான, இருளடைந்த பாதையில் பிரமிடுக்குள் செல்லும்போது பல மொழிகளில் ஆண், பெண் குரல்கள் கேட்கின்றன. அது நாடு கடத்தப்பட்ட கவிஞர்களின் கவிதை வரிகள். ஜேம்ஸ் ஜாய்ஸின் கவிதை அவற்றில் ஒன்று. திகிலூட்டும் பிரமிடுக்குள் இருக்கும்போது நாடு கடத்தப்படுதலின் வேதனையை உணர முடிகிறது. இந்த பிரமிடுக்குள் சிலர் செல்போன் டார்ச் உதவியுடன் சென்று திரும்பிய காட்சி, ஸ்டெக்கரின் கற்பனையை மிஞ்சிய கலை வடிவம்.

கவிஞர்களின் பிரமிடு

பினாலேயின் இதர அம்சங்களாகப் புத்தக வெளியீடுகள், கலந்துரையாடல்கள், திரையிடல்களும் நடைபெறுகின்றன. வரும் 29-ல் இந்த மாபெரும் கலைத் திருவிழா நிறைவடைகிறது.

தொடர்புக்கு: jeyakumar.r@thehindutamil.co.in

SCROLL FOR NEXT