தனித்துவமான மொழிநடையைக் கொண்டிருந்த எழுத்தாளுமை ஆர். சூடாமணி.
1954 முதல் 2004 வரை அரைநூற்றாண்டு காலம் படைப்பிலக்கியத் தளத்தில் தீவிரமாக இயங்கியவர். பெண்களின் அகவுலகத்தைப் பற்றிப் பேசியதில் முதன்மையானவரான இவரின் கதைகள், மானுட மேன்மையோடு உளவியல் நுட்பங்களையும் உள்வாங்கி எழுதப்பட்டவை. 7 நாவல்கள், 8 குறுநாவல்கள், 19 சிறுகதைத் தொகுப்புகள் என தனது பங்களிப்பை நிறைவாகச் செய்திருக்கும் எழுத்தாளர் ஆர். சூடாமணியின் படைப்பாளுமையைப் பற்றி கச்சிதமாக எழுதியிருக்கிறார் பேராசிரியர் கே.பாரதி. சூடாமணியோடு நூலாசிரியருக்கு இருந்த நெருக்கம் எழுத்திலும் வெளிப்பட்டுள்ளது.
சாகித்திய அகாடமியின் ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ நூல் வரிசையில் வந்துள்ள இந்நூல், ஆர். சூடாமணியைப் பற்றியும் அவரது படைப்புகளைப் பற்றியும் புதிய தலைமுறையினருக்கு நல்லதொரு அறிமுகத்தைத் தந்துள்ளது. ஆர். சூடாமணியின் மறைவுக்குப் பிறகு, அவர் எழுதியிருந்த உயிலின்படி, அவரது சொத்துக்களைச் சமூகநலச் செயல்பாடுகளுக்கு வழங்கிய பணியைச் செய்தவர் நூலாசிரியர் என்பது கூடுதல் செய்தி.