இலக்கியம்

வரைபடத்தில் ஒரு வரலாறு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஊர்களும் நாடுகளும் சங்க காலத்திலிருந்தே இருக்கின்றன. இவற்றைப் பற்றிய குறிப்புகள் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளிலும் சங்க இலக்கியங்களிலும் காணக்கிடைக்கின்றன. ஊர்கள் புவியியல் காரணிகளாலும் வரலாற்றுக் காரணிகளாலும் உருவானவை. நாடுகள் ஊர்களின் தொகுப்புகளாக பரிணமித்தவை. இவை வரலாற்றில் வளர்ச்சிப் போக்கில் இயல்பாக நடைபெற்றவை. இடைக்காலத்தில் வேளாண்மை விரிவடைய ஊர்களின் எண்ணிக்கையும் பெருகியது. இந்த ஊர்களும் நாடுகளும் ஊரவை, நாட்டவை என்ற அவைகளினால் நிர்வகிக்கப்பட்டன, அரசுகளும் பேரரசுகளும் எழுந்தபோது மைய நிர்வாகத்தின் கண்காணிப்பில் இவை செயல்பட்டன. இச்சபைகளின் அமைப்பு பற்றி எந்தச் செய்தியும் கல்வெட்டுகளில் காணக் கிடைக்கவில்லை. மைய அரசுகள் பலவீனம் அடைந்தபோது இந்த நாடுகள் அதிக வலுப்பெற்றதையும் கல்வெட்டுகளின் வழியாக அறிகிறோம்.

இந்த ஊர்களையும் நாடுகளையும் கல்வெட்டுத் தரவுகளின் அடிப்படையில் தமிழகம் முழுவதுமான அளவில் நிலப்படமாக ஆக்கும் முயற்சியின் விளைவுதான் இந்த நூல். இதனை முனைவர்கள் வேதாச்சலம், தியாகராசன், இராசவேலு, சாந்தலிங்கம் ஆகியோரின் ஆய்வுகளின் தரவுகள் அடிப்படையில் உருவாக்கியவர் கல்வெட்டியல் அறிஞர் ஏ.சுப்பராயலு, கௌ.முத்துசங்கர், பா.பாலமுருகன் ஆகியோர்.

‘இடைக்காலத் தமிழ்நாட்டில் நாடுகளும் ஊர்களும்’ என்ற நிலப்படத் தொகுப்பு பேரா. எ.சுப்பராயலு புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் மேற்கொண்ட ‘ஹிஸ்டாரிக்கல் அட்லஸ் ஆஃப் சவுத் இண்டியா’ என்ற நிலப்படத் தொகுப்பின் இணைவிளைவாக வெளிவந்துள்ளது. இவருடைய ‘பொலிட்டிகல் ஜியாகிரஃபி ஆஃப் த சோழா கண்ட்ரி’ என்ற நூல் தற்போதைய நிலப்படத் தொகுப்புகளின் முன்னோடி என்று கருதலாம். இந்த நிலப்படத் தொகுப்பு தமிழக வரலாற்று வரைவியலில் காலம் கருதி வெளிவந்திருக்கும் ஒரு அரிய முயற்சி; பலரது கூட்டுழைப்பின் உன்னதமான வெளிப்பாடு.

கணினித் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் அச்சுத் தொழிலில் ஏற்பட்ட முனேற்றம் இந்த நிலப்படத் தொகுப்பின் நேர்த்தியையும் துல்லியத் தன்மையையும் சாத்தியப்படுத்தியுள்ளது. முப்பது நிலப்படங்கள், அவற்றுக்கு வழிகாட்டியான சொல்லடைவு என சிக்கலில்லாத அமைப்புடன் நூல் விளங்குகிறது. நூலை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பேராசிரியர் அறிமுக உரையிலேயே விளக்கிவிடுகிறார். அறிமுகத்தைச் சரியாக உள்வாங்காமல் நிலப்படங்களைப் பார்வையிடுவோருக்கு அதில் உள்ள கட்டப் பிரிப்புகள் சற்று சிரமத்தைத் தந்தாலும் புரிந்துகொண்டால் எளிமையாகிவிடும். ஒவ்வொரு நிலப்படத்திலும் அருகே அப்படம் எந்த மண்டலத்தைச் சார்ந்தது, சாலை வழிகள், நாடுகளை, ஊர்களைக் குறிக்கும் சிறுசிறு படங்கள் என நூலுள் விளக்கியிருப்பது சிறப்பு. நாடுகளின் துல்லியமான எல்லைகளைப் பற்றி நமக்குச் செய்திகள் இல்லை. கல்வெட்டுகளின் பரவலே எல்லைகளைப் பெருமளவுக்குப் புரிந்துகொள்ள உதவுகின்றன.

நிலப்படங்களைப் புரிந்துகொள்ளவும் இடங்களைச் சொல்லடைவின் துணைகொண்டு புரிந்துகொள்ளப் பயன்படுத்தப்பட்டுள்ள கட்டப் பிரிப்பு முறை இத்தொகுப்பைப் பயன்படுத்துவோருக்கு அரிய வழிகாட்டி, கி.பி. 800-1300 வரையிலான காலகட்டத்தில்தான் தமிழகத்தில் வேளாண்மை விரிவடைந்து அரசுகளும் பேரரசுகளும் உருவாகின. ஊர்கள், நாடுகளுடன், பிரம்மதேயங்கள், வளநாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கி எதிர்காலத்தில் இந்த நூலின் மேம்படுத்தப்பட்ட தொகுப்பு வெளிவர வேண்டும். இடைக்காலத் தமிழகத்தின் வரலாற்றில் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளர்களுக்கும் மிகவும் பயனுள்ள அரிய நூல்.

இடைக்காலத் தமிழ்நாட்டில் நாடுகளும் ஊர்களும் (கி.பி. 800-1300)

எ. சுப்பராயலு, கௌ. முத்துசங்கர், பா. பாலமுருகன்

தமிழக தொல்லியல் கழகம்

தஞ்சாவூர்

8608316089

-இ.மணமாறன், உதவிப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடர்புக்கு: emanamaranhistory@gmail.com

SCROLL FOR NEXT