புதுவையில் இருந்த அறிஞர் அப்பாத்துரையைப் பார்க்கப் போயிருந்தேன். அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது பாவேந்தர் வந்துவிட்டார். அவர் என்னைப் பார்த்து எங்கேயோ பார்த்தி ருக்கிறோமே என்று கேட்டார். நான் அவரிடம் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தது குறித்து நினைவுபடுத்தினேன். அவர், “உனக்கு டீ வேணுமா..காபி வேண்டுமா” என்று உரத்துக் கேட்டார். எனக்கு டீதான் வேண்டும் என்றேன். “எங்க ஐயருக்கும் டீதான் பிடிக்கும். அவர் என்னை ஒரு இக்கட்டில் மாட்டிவிட்டார்” என்றார். பாரதியாரை அவர் ஐயர் என்றுதான் குறிப்பிடுவார். அது என்ன இக்கட்டு என்று அவரே விளக்கினார்.
புதுச்சேரியில் பாரதிதாசன் தினசரி மாலையில் பள்ளிக்கூட வேலை முடிந்து பாரதியார் வீட்டிற்குச் செல்வது வழக்கம். ஒரு நாள் அப்படிப் போயிருந்தபோது பாரதியார் வீட்டில் இல்லை. செல்லம்மாவிடம், ஐயர் எங்கே என்று இவர் கேட்டுள்ளார். பாரதியார் காப்பித்தண்ணி கேட்க, வீட்டில் ஒன்றும் இல்லை என்று செல்லம்மா சொல்ல பாரதியார் கோபத்தில் வெளியே போய்விட்டிருக்கிறார். பாரதிதாசன் தெருவில் இறங்கிப் பாரதியைத் தேடிப் போய் சாலைத் திருப்பத்தில் பிடித்துவிட்டார். பாரதியார் அவரை அழைத்துக் கொண்டு ஒரு இஸ்லாமியர் நடத்தும் தேநீர் கடைக்குப் போய் “இரண்டு சாயா கொடு” என்று கூறியிருக்கிறார். பாரதிதாசனுக்கு சாக்கடை ஓரத்தில் உள்ள டீக்கடையில் குடிக்க விருப்பமில்லை. என்ன இருந்தாலும் அவர் பள்ளி வாத்தியார் இல்லையா. அவர் பாரதிக்குத் தெரியாமல் அதை கீழே கொட்டியிருக்கிறார்.
இங்கெல்லாம் நாம் டீ சாப்பிடக் கூடாது என்று பாரதியாரிடம் பாரதிதாசன் சொல்லியுள்ளார். “நாம் இங்கே சாப்பிட்டால்தான் சாதி பேதம் ஒழியும். ஐயரே சாப்பிடுறான்னு சொல்லி எல்லாரும் சாப்பிடுவாங்க” என்று பாரதி அவரிடம் சொல்லியுள்ளார்.
அப்போது பாரதி தனது ஆசை என்று ஒன்றை பாரதிதாசனிடம் சொல்லியிருக்கிறார். “எனக்கு ஒரு ஆசை. எனது பெண் வளர்ந்து பெரியவளான பிறகு, வீட்டை விட்டு ஓடிப் போயிடணும். நாங்கள் அவளை எல்லா இடத்திலும் தேடணும். ரங்கூன், சிங்கப்பூர் மாதிரி ஏதாவது இடத்திலிருந்து அவளிடம் இருந்து கடிதம் வரணும். அப்பா, நான் ஆசைப்பட்டவனோடு திருமணம் முடித்து இங்கே வந்துட்டேன்னு அவள் அதில் எழுதியிருக்கணும். அப்போதுதான் எனக்கு சந்தோஷம்” என்று சொல்லியிருக்கிறார் பாரதி.
(வெள்ளையாம்பட்டு சுந்தரம், பதிப்பாளர், சேகர் பதிப்பகம்)
கேட்டு எழுதியவர்: ஷங்கர்