கல்லூரி ஆசிரியர் பணி வாய்ப்பு கிடைக்கப்பெறுவதற்கு ஐ.எஸ்.பி.என். எண்ணுடன் கூடிய நூலை வெளியிட்டிருந்தால் தகுதியாளர் என்று அரசு அறிவிப்பு வந்த பிறகு, யாரோ ஒருவர் எழுதிய நூலைத் தன் பெயரில் மாற்றி அச்சிட்டுக்கொள்வதற்குப் பதிப்பகத்தைத் தேடி அலையும் பலருக்கு வ.உ. சிதம்பரனாரின் பதிப்புப் பணியைப் பற்றித் தெரிந்து வைத்திருக்க வாய்ப்பில்லை. சுயநல உணர்வில் தன் மரபையே மறந்துபோன தமிழன் வ.உ.சி.யின் பதிப்புப் பணியை மறந்து போயிருப்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல.
பதிப்பு வரலாற்றில் பல அறிஞர்களின் தமிழ்நூல் பதிப்புப் பணிகள் நிரம்பக் காணப்பட்டாலும், வ.உ.சி.யின் பதிப்புப் பணியை வியந்து பார்ப்பதற்குச் சில காரணங்கள் உண்டு. அரசியல் போராட்டத்தில் கோவை சிறையில் அவர் அடைபட்டு, செக்கிழுத்த அந்தச் சிறையில் தமிழின் ஆகச் சிறந்த இலக்கண நூலான தொல்காப்பியத்தை அவர் ஆர்வத்தோடு வாசித்த வரலாற்றைப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.
தொல்காப்பிய உரை பதிப்பு
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் எழுத்ததிகாரம் மற்றும் சொல்லதிகாரத்திற்கு இளம்பூரணர் உரைச் சுவடி, அச்சுப் பதிப்புகளாக வெளிவந்துவிட்டன. 1920-ல் கா. நமச்சிவாய முதலியார் இளம்பூரணர் உரையில் பொருளதிகார அகத்திணை, புறத்திணையியல் பகுதிகளை மட்டுமே அச்சிட்டு வெளியிட்டிருந்தார். பொருளதிகார இளம்பூரணர் உரையை முழுவதுமாக முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டவர் வ.உ.சி. தான்.
1910-ம் ஆண்டு கோவைச் சிறையில் இருந்த நேரத்தில் தொல்காப்பியத்தை முழுவதுமாக வாசித்துத் தெளிந்ததின் பயனாகப் பழைய உரைகளின் கடும்நடையை வ.உ.சி. உணர்ந்துள்ளார். பாமர மக்களும் தொல்காப்பியத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் எளிய உரை எழுத எண்ணியிருந்தார்; சிறையிலிருந்து வெளிவந்த பின்னர் எளிய உரையையும் எழுதினார்.
சென்னை எழும்பூரில் வசித்த காலத்தில் தான் எழுதிய உரையைப் பூர்த்தி செய்யக்கருதி தி. செல்வகேசவராய முதலியாரிடம் எடுத்துச் சென்று சரிபார்த்துள்ளார். இவரின் ஆலோசனையும் த.கனகசுந்தரம் பிள்ளையிடமிருந்து கிடைத்த தொல்காப்பிய இளம்பூரண அச்சுப் புத்தகமும் சொல்லதிகார ஏட்டுப் பிரதியும், பொருளதிகார ஏட்டுப் பிரதி சிலவும் வ.உ.சி. அவர்களுக்குத் தொல்காப்பியம் பற்றிய தெளிவைத் தந்திருக்கின்றன. அவர்களிடமிருந்து பெற்ற சுவடிகளையெல்லாம் படித்துப் பார்த்த வ.உ.சி., இளம்பூரணரின் எளிய உரையைக் கண்டு வியந்துள்ளார்.
தாம் எழுதியுள்ள உரையைக் காட்டிலும், இவரின் உரை எளிமையாக உள்ளதே என்று கண்டு தெளிந்து உரை எழுதும் நோக்கத்தைக் கைவிட்டுள்ளார். பின்னர் தொல்காப்பியம் இளம்பூரணர் உரைச் சுவடியைப் பதிப்பிக்கும் பணியை அவர் தொடங்கியுள்ளார்.
வையாபுரிப் பிள்ளையுடன் இணைந்தார்
1928-ம் ஆண்டு தொல்காப்பியம் இளம்பூரணர் எழுத்ததிகாரப் பகுதியை முதன் முதலாக அச்சிட்டு வெளியிட்டுள்ளார். பின்னர் பொருளதிகாரம் இளம்பூரணர் உரைச் சுவடியையும் அச்சிடத் தொடங்கியுள்ளார். 1931-ல் பொருளதிகாரத்தின் அகத்திணையியல், புறத்திணையியல் ஆகிய இரண்டு இயல்களைக் கொண்ட முதல் தொகுதியை வெளியிட்டுள்ளார். பொருளதிகார இளம்பூரணர் உரை ஏடுகளை அறிஞர் எஸ். வையாபுரிப்பிள்ளை, தி. நா. சுப்பரமணிய அய்யர், த. மு. சொர்ணம் பிள்ளை ஆகிய அறிஞர் பெருமக்களிடமிருந்து வ.உ.சி. பெற்றுள்ளார்.
பின்னர் பொருளதிகாரத்தின் எஞ்சிய ஏழு இயல்களைப் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையுடன் இணைந்து பதிப்பித்து வெளியிட்டார். 1933-ல் களவியல், கற்பியல், பொருளியல் எனும் மூன்று இயல்களைத் தனியொரு நூலாக வெளியிட்டுள்ளார். பின்னர் 1935-ல் மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் பகுதிகளைக் கொண்ட தனி நூலை அச்சிட்டு வெளியிட்டார்.
இவற்றைச் சுவடியில் இருந்தவாறு அச்சிட்டு மட்டும் வெளியிடாமல் பல சுவடிகளோடு ஒப்பிட்டு ஆராய்ந்து பாட வேறுபாடுகளையும் அவர் குறித்துக்காட்டியிருக்கிறார். வ.உ.சி. அவர்களுக்கு எஸ். வையாபுரிப் பிள்ளையுடன் இருந்த தொடர்பு இவ்வகைப் பணியைச் செய்வதற்கு உதவியுள்ளது.
தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்பு உருவாக்கத்திற்குத் த.மு.சொர்ணம் பிள்ளையின் கடிதப் பிரதி, தி.நா. சுப்பரமணிய அய்யரின் கடிதப் பிரதி, எஸ். வையாபுரிப் பிள்ளையின் ஏட்டுச்சுவடி ஆகியன உதவியதாக வ.உ.சி. தனது பதிப்புரையில் குறிப்பிட்டிருக்கிறார். வாவிள்ளா இராமஸ்வாமி சாஸ்த்ருலு எனும் அறிஞர் பொருளுதவி புரிந்ததையும் வ.உ.சி. நன்றியோடு பதிப்புரையில் குறிப்பிடுகிறார். இது இன்றைய பதிப்பாசிரியர்கள் பின்பற்ற வேண்டிய நல்ல நடைமுறையுமாகும்.
நிறைவேறாமல் போன ஆசை
தொல்காப்பிய எழுத்து, சொல், பொருள் எனும் மூன்று அதிகாரத்திற்குமான நச்சினார்க்கினியர் உரைப் பகுதியைச் சி.வை. தாமோதரம் பிள்ளை எனும் யாழ்ப்பாணத்து அறிஞர் அச்சில் பதிப்பித்து வெளியிட்டதைப் போன்று, தொல்காப்பியம் முழுமைக்கும் உள்ள இளப்பூரணர் உரைச் சுவடியைப் பதிப்பித்து வெளியிட வ.உ.சி. எண்ணியிருக்கிறார். ஆனால், எழுத்து, பொருள் எனும் இரண்டு அதிகாரத்தை மட்டுமே பதிப்பித்து வெளியிடவே காலம் அவருக்குப் பணித்தது. சொல்லதிகார இளம்பூரணர் உரைப் பகுதியை இறுதிவரை அவரால் பதிப்பிக்க முடியாமலேயே போனது வரலாற்றுச் சோகம்.
அரசியல் போராட்டக் களத்தில் வாழ்ந்த வ.உ.சி.யால் எப்படி நூல் பதிப்புப் பணியில் ஈடுபட்டுச் செயல்பட முடிந்தது என்பது வியப்பான வரலாறாகும். இதற்கான சில காரணங்களை அவர் வரலாற்றிலிருந்தே கண்டெடுக்க முடிகிறது. அவரிடம் இயல்பாகவே இருந்த தமிழ் உணர்வும், ஆர்வமும் 1912-ல் சிறையிலிருந்து வெளிவந்த பின்னர் திருமணம் செல்வக்கேசவராய முதலியார், எஸ்.வையாபுரிப் பிள்ளை போன்ற தமிழ் அறிஞர்களிடத்து ஏற்பட்ட நட்பும் முக்கியமானவையாக இருந்தன.
தமது நாற்பதாண்டு காலப் பணியை (அரசியல் பணி) மக்கள் போதிய அளவு மதிப்பளிக்கும் அளவில் உணரவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்திருக்கிறது. அவ்வருத்தத்தை மனதளவில் ஆற்றிக்கொள்ளும் துறையாக இலக்கியத் துறை அவருக்கு வாய்த்திருந்தது. இலக்கியத் துறையில் ஈடுபட்டு அரசியல் துயரத்தை வ.உ.சி. அகற்றிக்கொண்டார் என க.ப. அறவாணனும் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார் (செந்தமிழ் செல்வி.செப்.1972). வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாற்றை ஒருமுறை புரட்டியாவது பார்க்கின்றவர்களுக்கு இந்தக் கூற்றின் உண்மையை உணர முடியும்.
கட்டுரையாளர், தமிழ் ஆய்வாளர்,
தொடர்புக்கு:iravenkatesan@gmail.com