இலக்கியம்

ஹெராக்ளைட்டஸை விவாதிக்கும் முயலும் நரியும்

ஷங்கர்

ஆங்கிலத்தைப் பொறுத்தவரை தீவிரமான நாவல்களுக்குக்கூட காமிக்ஸ் பதிப்புகள் உண்டு. தத்துவங்கள், கோட்பாடுகள் ஆகிய வற்றின் எளிய அறிமுகங்கள் சித்திரப் படப் புத்தகங்கள் வழியாகவே இளம் மாணவர்களுக்கும் புரியும் வண்ணம் வெளியிடப்படுகின்றன. கார்ல் மார்க்ஸ் முதல் நீட்சே வரை கதாபாத்திரங்களாக உலவும் நகைச்சுவை காமிக்ஸ் தொடர் களைச் சிரிக்கச் சிரிக்க வெளியிட்டு வரு கிறது எக்ஸிஸ்டென்சியல் காமிக் இணைய தளம் (http://existentialcomics.com).

அந்தக் கதை நமக்குப் புரியவில்லை யெனில், படக்கதைப் பக்கத்துக்குக் கீழேயே, “Didn’t Get The Joke?” என்ற சுட்டிக்குள் போனால் அதன் அர்த்தத்தையும் எளிமையாக விளக்கி விடுகின்றனர். தத்துவவாதிகள், தத்துவக் கோட்பாடுகள் குறித்த எளிய அறிமுகங்களுக்கு இந்த இணைய தளம் சார்பாகவே ஒரு வலைப்பூவும் நடத்தப்படுகிறது.

இணையதளத்தின் பெயருக்கு ஏற்ப இருத்தலியல்வாதிகள் அநேகர் இத்தளத்தின் கதைகளில் வருகின்றனர். ஆல்பர்ட் காம்யூ, எக்ஸிஸ் டென்சியல் ஏஜண்ட் ஆக ஒரு சித்திரக் கதையில் வருகிறார். குடும்பத் திலும் வேலையிலும் சந்தோஷமாக இருக்கும் அல்லது உணரும் ஆண் ஒருவனின் வாழ்க்கையை அலங் கோலப்படுத்தி வாழ்க்கையின் அபத்தம் பற்றி உணரவைப்பதுதான் அவருக்குக் கொடுக்கப்பட்ட அசைன் மெண்ட். அந்த அசைன்மெண்டின் பெயர் மிஷன் எம். தான் வந்த காரியம் சுபமாக முடிய, துயரத்தில் நிற்கும் அந்த ஆணிடம் வாழ்க்கை ஒரு அபத்தம் என்கிறான். அவனோ ‘ஆஸ் ஹோல்’ என்று காம்யூவை ஏச, காம்யூ, அதைவிட ஆழமானது அபத்தம் என்று சொல்லிவிட்டுச் செல் கிறார்.

ஒரு காட்டில் சிங்கம், நரி, முயல், ஆந்தை நான்கும் சேர்ந்து ஒரு நதியின் அருகில் விவாதிக்கத் தொடங்குகின்றன. ஆறு என்பது என்ன? நாம் இறங்கும்போது இருக்கும் ஆறா? இறங்கிய பிறகு வேறொரு ஆறா? ஆறு என்பது ஒரு இடமா? அதில் ஓடும் நீரா? இடையில் வந்து அமரும் கரடி தத்து வார்த்தமாகப் பதில் சொல்கிறது. வாழ்க்கையில் நாம் தவிர்க்க முடியாத நிகழ்வாக வரும் மரணம் வந்து விட்டால் அதற்குப் பிறகு ஆறு எப்படி இருந்தால் என்ன? என்று கேட்கிறது. ஒரே ஆற்றில் இரண்டு முறை இறங்க முடியாது என்று சொன்ன ஹெராக்ளைட்டஸைத்தான் இந்த மிருகங்கள் வம்புக்கு இழுக்கின்றன. எக்ஸிஸ்டென்சியல் காமிக் இணைய தளத்தை நடத்திவருபவர் போர்ட் லேண்டைச் சேர்ந்த மென்பொருள் வடிவமைப்பாளர் கோரி மோஹ்லர். அவர் தத்துவத்தைக் கல்லூரியில் படிக்கவில்லை. ஆனால், இணைய தளத்தைப் பொறுத்தவரை எக்ஸிஸ் டென்சியல் காமிக்ஸ் வழியாக அத்தனை தத்துவவாதிகளும் ஆழ மாகப் பரிகசிக்கப்படுகிறார்கள்.

2013-ம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் இந்த இணையதளத்தில் சாக்ரடீஸ் காலம் தொடங்கி நவீன காலத் தத்துவச் சிந்தனையாளர்கள் பீட்டர் சிங்கர், ராபர்ட் நோஜிக் வரை அனைவரும் கதாபாத்திரங்களாக இடம்பெறுகின்றனர். வெறும் நகைச் சுவையைத் தாண்டி அவர்களது சிந்தனைகளின் அடிப்படைகளும் நமக்கு அறிமுகமாகிவிடுகின்றன.

‘அபத்தமான உலகில் மிகச் சிறிய வாழ்க்கையை வாழும் தவிர்க்க முடியாத சங்கடத்தைப் பற்றிய தத்துவ காமிக்ஸ் இது. அதில் நகைச் சுவையும் உண்டு’ என்கிறது இந்த இணையதளத்தின் முகப்பு வாசகம்.

இறுக்கமானவர்களையும் நிச்சயம் சிரிக்கவைக்கும் இணையதளம் இது. நம்பாதவர்கள், ஹேக் காங்கிரசில் கார்ல் மார்க்ஸுக்கும் பகுனினுக்கும் ஏற்படும் தகராறைச் சென்று படியுங்கள். மார்க்சியர்கள் என்றாலும் உடனடியாகச் சிரிப்பு வந்துவிடும்.

SCROLL FOR NEXT