முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து இதழியல் துறையில் பணியாற்றிவரும் எழுத்தாளர் ஜே.வி.நாதனின் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 சிறுகதைகளின் தொகுப்பு இது. கதைக் கருவுக்கான தனித்த தேடுதல் ஏதுமின்றி, அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்களும் அவர்களது வாழ்க்கைப் பாடுகளுமே கதைகளாகியுள்ளன.
ஒவ்வொரு கதையும் நமக்கு பரிச்சயமான ஏதோ ஒரு மனிதரின் வாழ்வைப் பற்றிப் பேசுவதாக இருப்பதே இக்கதைகளின் சிறப்பு. வாசிக்க ஆரம்பித்ததும் சரசரவென கதைகளுக்குள் நம்மை இயல்பாய் இழுத்துக்கொண்டு போகிற ஜே.வி. நாதனின் ஈர்ப்பு மிக்க மொழிநடை நம் வாசிப்பு வேகத்தைக் கூட்டுகிறது.
அணில் வேட்டையாடும் நாச்சானும், அரசு அலுவலகங்களின் லஞ்ச ஊழலை நறுக்கென சாடும் கீரிப்பட்டி வேலம்மாவும், வைராக்கியமும் மன உறுதியும் கொண்ட அம்மணி அக்காவும், அலுவலகத்துக்கு வரும் புதுஅதிகாரியை வரவேற்கும் தங்கப்பனும் நம்மோடு எப்போதும் உரையாடும் சக மனிதர்கள்தான். எதிலும் எவ்வித செயற்கைப் பூச்சுமின்றி தெள்ளிய நீரோடையாய்க் கதை பயணிக்கிறது. ‘சிங்கப்பூருக்கு சில கழுதைகள்’, ‘பழைய புத்தகக் கடையும் ஓர் எழுத்தாளரும்’, ‘நடுவுல ஒரு பீரோவைக் காணோம்’, ‘ரஸகுல்லா+நெய்ரோஸ்ட்=கோவிந்து’ என்று சிறுகதைகளுக்கான தலைப்புகளும் நம்மை ஈர்க்கின்றன.