இந்திய இலக்கிய வரலாற்றில் உருது மொழிக்கு மிகப் பெருமையான ஒரு பாரம்பரியம் உண்டு. ஏனென்றால், இந்தியப் பிரிவினையை மையப்படுத்திப் பெருமளவில் உணர்வுபூர்வமான இலக்கியப் படைப்புகள் அதிலிருந்துதான் வந்தன. அவற்றுக்கு ஒரு சோறு பதம் ஜோகிந்தர் பால் எழுதிய கதைகள்!
'நான் பார்க்கும் அனைத்திலும் நானே இருக்கிறேன். அதுதான் என் அடையாளம்' என்று சொல்லும் ஜோகிந்தர் பாலே இந்திய - பாக். பிரிவினை உருவாக்கிய அகதிதான். எனவே, அவரிடமிருந்து பிரிவினை தொடர்பான படைப்புகள் பிறந்ததில் ஆச்சரியமில்லை. எனக்குத் தெரிந்து பிரிவினை தொடர்பாக இலக்கியங்கள் படைத்த இதர எழுத்தாளர்கள், தங்கள் கதைகளில் கோபத்தையும் அறச் சீற்றத்தையும் வெளிப்படுத்தினார்கள். ஆனால், ஜோகிந்தரின் கதைகளில் இவை இருக்காது. மாறாக, ஆதரவும் இரக்க உணர்வும் கொண்டிருக்கும். எனவேதான் அவரை ஆங்கிலத்தில் 'தி ஜென்ட்லஸ்ட் ஸ்டோரிடெல்லர் ஆஃப் பார்ட்டிஷன்' (பிரிவினை குறித்த மென்மையான கதைசொல்லி) என்று அழைக்கிறார்கள்.
உருது இலக்கியத்தின் மிகப் பெரிய ஜாம்பவான்களில் ஒருவர் ஜோகிந்தர் பால். இந்த ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி காலமானார். வரும் செம்படம்பர் 5-ம் தேதி அவரது 91-வது பிறந்த தினம். அதனையொட்டி, அவர் 1989-ம் ஆண்டு எழுதிய 'நதீத்' எனும் நாவல் ஆங்கிலத்தில் 'பிளைண்ட்' என்ற தலைப்பில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சுக்ரிதா பால் குமார் மற்றும் ஹினா நந்த்ரஜோக் ஆகியோர் மொழிபெயர்க்க, ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகம் இந்தப் புத்தகத்தைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
பார்வைத் திறனற்றோர் விடுதியில் வாழ்கின்ற மனிதர் களைப் பற்றியதுதான் இந்த நாவலின் கதை. அந்த விடுதியில் சிலர் தங்கள் விரல்களால் மற்றவர்களைப் பார்க்கிறார்கள். சிலர் தங்கள் சிந்தனைகளால் மற்ற வர்களைப் பார்க்கிறார்கள். சிலர் தங்கள் காதலர்களால் தங்களைத் தாங்களே காணும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இந்த விடுதியை நிர்வகிப்பவரும் பார்வைத் திறனற்றவர்தான். ஒரு விபத்தில் திடீரென்று அவருக்குப் பார்வை வந்துவிடுகிறது. அப்போது, அவர் தன் விடுதியில் உள்ளவர்களையும், இந்த உலகத்தையும் எப்படிப் பார்க்கிறார் என்பதுதான் கதையின் மையம்.
இந்தப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவரான சுக்ரிதா பால் குமாருக்கு அளித்த பேட்டி (அந்தப் பேட்டி புத்தகத்தில் பின்னிணைப்பாக இடம் பெற்றுள்ளது) ஒன்றில், 'இந்தக் கதையில் பார்வை யற்றவர் என்பதை ஒரு உருவகமாகத்தான் பயன்படுத்தி யிருக்கிறேன்' என்று ஜோகிந்தரே சொல்கிறார்.
'காலமெல்லாம் இருட்டில் வாழும் ஒரு மனிதனி டமிருந்து திருடன் ஒருவன் பிறக்கிறான். அதனால் அவன் தன்னைத் தானே கள்ளத்தனமாகச் சுமந்து அலைய வேண்டியுள்ளது', 'எனக்குப் பார்வை இல்லாத வரை எனக்குள் நான் அடைபட்டிருந்தேன். எனக்குப் பார்வை கிடைத்தவுடன் என்னிலிருந்து நான் வெளியே குதித்துவிட்டேன்', 'பார்வையற்றவர்கள் ஏற்படுத்திக் கொள்ளும் உறவு முகங்களிலிருந்து பிறப்பதில்லை, உணர்வுகளிலிருந்து'... இப்படி நாவல் முழுக்க விரவியிருக்கும் கவித்துவமான நடை, நம்மைக் கதைக்குள் சுழலைப் போல இழுத்துக்கொள்கிறது.
நாவலின் ஓர் இடத்தில் இப்படி ஒரு காட்சி. தொழிலாளர் நலனுக்காகப் போராடிய ஒருவன் பொய் வழக்கில் தூக்கிலிடப்படுகிறான். தன்னுடைய கண் களைத் தானம் செய்ய வேண்டும் என்பது அவனின் இறுதி ஆசை. அந்தத் தகவல் இந்த விடுதிக்கும் அறிவிக்கப் படுகிறது. விடுதியில் நடக்கும் ஒரு கூட்டத்தின்போது, இந்த விஷயத்தைச் சொல்லி, 'யாருக்கேனும் அந்தக் கண்களைப் பெற்றுக்கொள்ள விருப்பமா?' என்று கேள்வி எழுப்பப்படுகிறது. அப்போது ஒரு பெண் சொல்கிறாள்: “யாரால் பார்க்க முடிகிறதோ அவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது”. இப்படி, உண்மையை வெளிப்படுத்தாமல் இருப்பதன் மூலம் ஒளி இழக்கும் உலகத்தை நம் முன் நிறுவுகிறார் ஆசிரியர்.
'பார்வைத் திறன் இல்லாத நிலையை உருவகமாகப் பயன்படுத்துவது' என்று ஆசிரியர் சொல்வது இதைத்தான். இப்படி நாவலின் பல இடங்களில் அந்த உருவகம் நம்மை விழிப்புக் கொள்ளச் செய்ய வைக்கிறது. சில இடங்களில் பகடி செய்கிறது. நூலாசிரியரே சொல்வதுபோல, 'விழிப்பு என்பது கண்களைத் திறந்துகொண்டு தூங்குவது' என்பதாக இருக்கிறது அந்தப் பகடி.
கென்யாவில் 14 ஆண்டுகள் ஆங்கிலப் பேராசிரி யராகப் பணியாற்றியவர் ஜோகிந்தர் பால். அப்போது நைரோபியில் உள்ள பார்வையற்றவர்களின் விடுதி ஒன்றுக்குச் செல்கிறார் அவர். அங்கு கிடைத்த அனு பவங்களை வைத்துத்தான் இந்த நாவலை எழுதியதாக அவரே சொல்கிறார்.
'உருது என்பது மொழி அல்ல. அது ஒரு கலாச் சாரம்' என்று நம்பியவர் அவர். அதனால்தான் அவர் பெரும்பாலும் ஆங்கிலத்தில் எழுதுவதைத் தவிர்த்தார். அப்படிப்பட்ட அவர், தான் உயிரோடு இருக்கும்போதே தனக்குத் தானே இரங்கல் செய்தியை எழுதிக்கொண்டார். அந்தச் செய்தி 'அக்தார்' எனும் உருது காலாண்டிதழில் 1993-ம் ஆண்டு வெளியானது.
அந்தச் செய்தியை அவர் இப்படி முடிக்கிறார்: “மரணம் உங்களை முந்திச் செல்ல விடாதீர்கள்”. ஜோகிந்தர் பால் தனது மரணத்தை மட்டுமல்ல காலத்தையும் தன் படைப்புகள் மூலமாகப் பிந்தியிருக்கச் செய்துவிட்டார் என்பதற்கு இந்த ஒரு புத்தகம் போதும்.”
“நாங்கள் தீண்டத்தகாதவர்களாக இருந்த காரணத் தால் என் தாயின் சடலத்தை என் தந்தையே சுமந்து சென்றார்” என்று இந்த நாவலின் தொடக்கத்தில் எழுதுகிறார். சில நாட்களுக்கு முன்பு, ஒடிஷாவில் தன் மனைவியின் சடலத்தைக் கணவனே சுமந்து சென்ற நிகழ்வு இந்தச் சமயத்தில் நினைவுக்கு வருகிறது!