மகாபாரதக் கதையில் துரோணரைப் பழிவாங்க யாகம் வளர்த்து துருபதன் பெற்றெடுத்த மகள் பாஞ்சாலி. அவளைப் பற்றி மாற்றுக் கோணத்தில் அணுகும் நூல் இது.
துருபதனுக்கு முதலில் சிகண்டினி என்ற மகளாகப் பிறந்து கந்தர்வர் ஆசியால், ஆணாகிய சிகண்டிதான் பாஞ்சாலிக்கு வழிகாட்டி. “என் விருப்பப்படி என் கணவரைத் தேர்ந்தெடுக்க முடியாதா, என் வாழ்க்கையை நான் விரும்பியபடி வாழ முடியாதா?” என்று அண்ணன் சிகண்டியிடம் கேட்கிறாள் பாஞ்சாலி. “இந்த நாட்டுக்காக உருவாக்கப்பட்ட பலிகடா நீ. உன் விருப்பத்திற்கு இங்கே இடமில்லை” என்கிறான் சிகண்டி.
அர்ச்சுனனுக்குப் பாஞ்சாலியை மணம் முடித்து, அவனைக் கொண்டு துரோணரைப் பழிவாங்க வேண்டும் என்பது துருபதன் திட்டம். இப்போது, அர்ச்சுனனை விரைவாகப் பார்க்க ஆசைப்பட்டாள் பாஞ்சாலி. குடும்பம் நடத்த அல்ல, கூட்டுச் சேர்ந்து துருபதன் லட்சியத்தை நிறைவேற்ற. வாழ்க்கை மராத்தானில் பாஞ்சாலி வெற்றிபெற முதலில் வழிகாட்டியவன் சிகண்டி.
சிறு வயது முதலே எது கிடைத்தாலும் பாண்டவர்கள் ஐந்து பேரும் பங்கு போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்லிச் சொல்லியே தன் பிள்ளைகளை வளர்த்தாள் குந்தி. “துருபதரே! உங்களுக்கு துரோணர் வீழ்த்தப்பட வேண்டும். எனக்கு அஸ்தினாபுர சிம்மாசனம் வேண்டும். அதற்கு ஒரே வழி பாஞ்சாலி ஐந்து பேரையும் மணப்பதுதான்.”
அதிர்ச்சியடைந்தாள் பாஞ்சாலி. அர்ச்சுனனை நீ மணக்க வேண்டும் என்று சொல்லித்தானே தந்தை வளர்த்தார். இப்போது ஐந்து பேரை மணப்பதா?
இந்தச் சமயத்திலும் சிகண்டி அவளை ஆற்றுப்படுத்தினான். பாண்டுவை மணந்துகொண்ட குந்தி, தரும தேவதை, வாயு பகவான், இந்திரன் ஆகியோரின் துணையுடன் குழந்தைகளைப் பெற்றதைச் சுட்டிக்காட்டினான். திருமணம் நடக்கிறது.
பகடையில் தோற்று ஐந்து பேரும் அடிமைகளானபோது திரௌபதியைப் பார்த்துக் கர்ணன் சொன்னான், “அடிமைகளோடு இனி வாழ்வதைவிட, வென்ற அரசன் துரியோதனனை மணந்து அவனோடு வாழ்க்கை நடத்து” என்று.
இன்னொரு சம்பவம். மரத்தில் அபூர்வமான நெல்லிக்கனி இருந்தது. ஒரே கனிதான் காய்க்கும். அதை ஒரு முனிவர் மட்டுமே பறித்துச் சாப்பிடுவார். பாஞ்சாலி அறியாமல் அதைப் பறித்துவிட்டாள். முனிவர் கோபத்துக்கு ஆளாகாமல் இருக்க, பாண்டவர்களும், பாஞ்சாலியும், இதுவரை யாரிடமும் சொல்லாத ஒரு ரகசியத்தைச் சொன்னால் பழம் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும் என்றான் கிருஷ்ணன்.
ஐந்து பேரும் ரகசியம் சொல்ல, மரத்தின் அருகே நெல்லிக்கனி நெருங்கிவிட்டது. இப்போது பாஞ்சாலியின் முறை. கிருஷ்ணன் காதில் பாஞ்சாலி தன் ரகசியத்தைச் சொன்னாள். கனி உடனே மரத்தில் ஒட்டிக்கொண்டது.
அவள் சொன்ன ரகசியம்: “கர்ணனை நான் நேசிக்கிறேன்”.
பாஞ்சாலி எனும் பாத்திரத்தை நூலாசிரியர் இப்படிப் பண்முகத் தளத்தில் விவரித்துக்கொண்டுபோகிறார்.
யுத்தத்துக்கு முன் கர்ணனைச் சந்தித்த கிருஷ்ணன், “கர்ணா, நீ பாண்டவர் பக்கம் வந்து துரியோதனனோடு போரிடு. வென்றால் அஸ்தினாபுர சிம்மாசனமும் கிடைக்கும், பாஞ்சாலியும் உனக்குக் கிடைப்பாள்” என்றார்.
கர்ணன் குந்தி மகன் என்று பாஞ்சாலிக்கு முன்பே தெரிந்திருந்ததால் கர்ணனும் அவள் கணவனாகியிருப்பான். யுத்தமும் நடந்திராது.
கடைசி நாள் யுத்தம். “துரியோதனா! இப்போதுகூட யுத்தத்தை நிறுத்திவிடலாம்” என்றார் கிருபர். “13 ஆண்டுகளாக, என் ரத்தத்திற்காக, பாஞ்சாலி கூந்தலை விரித்துப்போட்டுக் கட்டாந்தரையில் படுத் திருக்கிறாள். அவளிடம் போய் சமாதானம் பேச முடியுமா?” என்றான் துரியோதனன்.
இப்படி மகாபாரதத்தின் எல்லாக் கட்டங்களிலும் பாஞ்சாலிக்கு முக்கிய இடம் இருப்தைப் காட்டுகிறார் விஜயராஜ். பாஞ்சாலியே பாண்டவர்களை வழிநடத்தினாள். அவள் துருபதனுக்காக வாழ்ந்தாள். குந்தி கட்டளையை ஏற்று வாழ்ந்தாள். பாண்டவர்கள் நலவாழ்வுக்கு வாழ்ந்தாள். அந்தப் பரிபூரண வாழ்க்கையைக் கண்ட உலகம் அவனை தெய்வமாக்கி ஆராதித்தது. அவள் திரௌபதி அம்மனானாள்.
பாஞ்சாலியை முன்னிட்டு மகாபாரதத்தை இன்னொரு கோணத்தில் பார்க்கிறார் விஜயராஜ். தன் முடிவுகளைக் காரணங்களோடு முன்வைக்கிறார். புதிய சிந்தனைகளை வெறும் வாதமாக அல்லாமல், கதைப் போக்கினூடே இயல்பாகச் சொல்லியிருப்பதால் இந்த நூலைச் சுவையாகப் படிக்க முடிகிறது.
- சிவக்குமார், நடிகர், ஓவியர், சொற்பொழிவாளர். தொடர்புக்கு: filmactorsivakumar@gmail.com