இலக்கியம்

கதையாக விரியும் அனுபவங்கள்

டி.எல்.சஞ்சீவி குமார்

சரவணன் சந்திரனின் இரண்டாவது நாவல் ‘ரோலக்ஸ் வாட்ச்’. இவர், பல்வேறு பத்திரிகைகளிலும் தொலைக் காட்சிகளிலும் பணியாற்றிய ஊடகவியலாளர். ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம், நாவலின் சம்பவங்களிலும் அவற்றைச் சரளமாகச் சொல்லும் மொழிநடையிலும் துலக்கமாக வெளிப்படுகிறது.

ஏதோ கதை சொல்லப் போகிறார், அல்லது கருத்து சொல்லப் போகிறார், அல்லது கலாபூர்வமாகவோ கவித்துவமாகவோ எதையோ எழுதியிருக்கிறார் என்றெல்லாம் இந்த நாவலை அணுக வேண்டாம். இது வேறு வகையான எழுத்து. வேறு வகையான நாவல். ஆசிரியர், இருப்பதைச் சொல்கிறார். நடப்பதைச் சொல்கிறார். சம காலத்தின் சமத்துவமற்ற இயல்புகளைச் சொல்கிறார். அறம் சார்ந்த சாமானியருக்கு அவை அதிர்ச்சிகள். அறங்களை உடைக்கும் ‘சமார்த்தியசாலி’களுக்கு அவை யதார்த்தங்கள்.

நாவலில் கதைசொல்லியாக வருபவருக்குப் பெயர் கிடையாது. ஓர் அத்தியாயத்தில் அந்தக் கதைசொல்லி, பாலியல் தொழிலாளியிடம் செல்கிறார். அவரிடம் தனது கதையாக ஒன்றைச் சொல்வார். அதற்குப் பதிலளிக்கும் அந்தப் பெண், ‘நீ சொல்கிற விஷயம் உண்மை. ஆனால், ஆட்கள், இடங்களெல்லாம் கற்பனையாக ஜோடிக்கப்பட்டவை’ என்பார். ஒரு விதத்தில் மொத்த நாவலுமே அப்படித்தான். சரவணன் சந்திரன், தான் கடந்துவந்த மனிதர்களை, அனுபவங்களை, இடங்களை, தேர்ந்த தாயக்காரனின் தந்திரத்துடன் சோழிகளாக உருட்டியிருக்கிறார். நகம் கடிக்க வைக்கும் சூதாட்டம்போல நகரும் ஒவ்வோர் அத்தியாயமும் ஆட்டத்தின் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு வாசகர்களைப் பதைபதைப்புடன் அழைத்துச் செல்கின்றன.

சூதாட்டத்தின் ஒவ்வொரு சுற்றிலும் விதவிதமான வித்தகர்கள் அறிமுகமாகிறார்கள். அதிகாரத்தின் பல்வேறு மட்டங்களில் இருப்பவர்கள், அதிகாரம் என்பதையே அறியாதவர்கள், அதிகாரத்தின் இண்டு இடுக்குகளில் சிக்கிக் கிடக்கும் ஒடுக்கப்பட்டவர்கள் எனப் பலர் நாவலில் வருகிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் பெரும் அனுபவத்தைச் சாத்தியப்படுத்துகிறார்கள். மறக்க வியலாத பாடங்களைக் கற்பித்துவிட்டுச் செல்கிறார்கள்.

திவ்யாவின் காதல், காமம், கலவி, இயல்பானதொரு பிரிவு ஆகியவை இன்றைய மேல் வர்க்கத்து மற்றும் மேல் - நடுத்தர வர்க்கத்து இளைஞர்களின் அந்தரங்க வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. திவ்யா உட்பட எந்தப் பாத்திரமும் நாம் எதிர்பார்க்கக்கூடிய வகையில் செயல்படுவதில்லை. அவர்களின் பின்னணிகளும் வித்தியாசமானவை. அவர்களது அனுபவங்களும், வாழ்க்கை குறித்த அணுகுமுறைகளும் அவர்களை வெவ்வேறு இடங்களுக்கு விரட்டி அடிக்கின்றன. பல விஷயங்கள் அதிர்ச்சி தருபவையாக இருக்கின்றன. இந்த அதிர்ச்சிதான் நாவலின் அடிநாதம் என்று புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

நாவலின் ஒவ்வொரு வரியிலும் சரவணன் சந்திரனின் ஆழ்ந்த அனுபவம் தெரிகிறது. ஏராளமான மனிதர்களைப் படித்த உளவியல் நிபுணத்துவம் தெரிகிறது. சமகால இளைஞர்கள் உலகத்தில் உலவும் இயல்பானதொரு எழுத்து நடையை சரவணன் சந்திரன் தேர்வு செய்திருக்கிறார். மிக வேகமாகவும் சுவாரஸ்யமாகவும் படித்துவிடக்கூடிய இந்த நடை சில இடங்களில் தட்டையாக இருக்கிறது. கதை மாந்தர்களின் நடத்தை, கதைச் சம்பவங்கள் ஆகியவற்றினூடே பயணித்து ஊடுருவிச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆனால், கதைசொல்லும் முறையோ சில இடங்களில் அவற்றைச் செய்தி அறிக்கையாக மாற்றிவிடுகிறது.

‘ரோலக்ஸ் வாட்ச்’ ஒரு நாவலாக, கதையாக விரிந்தாலும் பரந்துபட்ட அனுபவங்களின் தொகுப்பு அது. புதிய உலகில் பயணிக்கும் இந்த நாவல், ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதைவிட எப்படி இருக்கக் கூடாது என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறது. இது சரி, இது தவறு என்றெல்லாம் ஆசிரியர் எதையும் குறிப்பிட்டுச் சொல்லாமல் முடிவெடுப்பதை வாசகர்கள் வசம் அளித்துவிடுகிறார். அதுதான் நாவலின் வெற்றி.

ரோலக்ஸ் வாட்ச்

நாவல்

சரவணன் சந்திரன்

விலை: ரூ. 150

வெளியீடு: உயிர்மை பதிப்பகம், சென்னை - 18. தொலைபேசி: 044- 24993448.

SCROLL FOR NEXT