அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, ஸ்ரீதர், கண்ணதாசன், பி.யூ.சின்னப்பா என்று ஒரு பெரிய வெள்ளமே ஜூபிடர் பிக்சர்ஸ் என்ற நதிமூலத்திலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
ஏ.வி.எம், ஜெமினி பிலிம்ஸ், மாடர்ன் தியேட்டர்ஸ் என இன்றும் நாம் பேசிக்கொண்டிருந்தாலும் ஜூபிடர் பிக்சர்ஸை எப்படி மறந்தோம்?
சினிமாவைப் பற்றித் தம்மை மறந்து பேசுவதில் சொல்லுக்கு அடங்காத ஆர்வமுண்டு தமிழர்களாகிய நமக்கு. நம் அரசியலின் ஒரு பகுதியாக அது இருக்கிறது என்பதால் மட்டுமல்ல! அது நம் வாழ்க்கையின் இன்னொரு பகுதியாகவும் இருக்கிறது. நம் திரைப்படங்கள், இயக்குநர்கள், கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் பற்றி வரலாற்றில் பதியும்போது சில இடைவெளிகள் ஏற்படலாம். அந்த இடைவெளிகளை இந்த நூலின் தகவல்கள் நிரப்பி முழுமை அடையச் செய்யும்.
1976இல் இந்திராகாந்திக்கு எதிராக இந்தியாவையே ஒருமுகமாகத் திரட்டிய ஜெயப்பிரகாஷ் நாராயணன் எம்.ஜி.ஆரின் ஒரு படத்தை முதல்காட்சியாக ஆரம்பித்துவைத்திருக்கிறார். பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்ற பலரைப் பற்றியும் பல விசித்திரமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன இந்நூலில். பாகவதர், தங்கவேலு பற்றிப் படிக்கும்போது மனம் நொறுங்குகிறது.
எஸ்.கே. ஒரு முஸ்லிம். முஹைதீன் என்பது அவர் பெயர். ஏ.வி.எம்.குமரனால் தூண்டப்பட்ட நிலையில் இந்த நூலை எழுதியவர் முஹைதீனின் மகன் எஸ்.கே. ஹபிபுல்லா. படத்தோல்விகளால் துவண்டு ஊர்திரும்பிய மொஹைதீனை ஒரு விலக்கப்பட்டத் தொழிலைச் செய்பவராக அவருடைய கிராமம் தூற்றுகிறது. ஆனால் அதுவே, தான் மீண்டெழும் களம் என உணர்ந்து மீண்டும் திரும்பி மீண்டும் வெற்றிபெறுகிறார் அவர்.
இந்த நூலின் தகவல்களை நம்மனத்தில் வலிந்து திணிக்க வேண்டாம்; அவை தாமே தம் இடத்தை எடுத்துக்கொள்ளும். ஆனால் ‘ஜூபிடர் பிக்சர்ஸ்’ ஒரு பட நிறுவனத்தின் ஞாபகப் பதிவாக இல்லாமல் ஒரு கலாச்சாரத்தின், தமிழ் சினிமாவின் வரலாற்றுப் பதிவாகவும் பல அரிய மனிதர்களின் நிகழ்ச்சி நிரலாகவும், வாழ்விலும் வீழ்விலும் ஒருவரையொருவர் கை விட்டுவிடாத நட்பின் வலிமையைக் காட்டும் அற்புதமான ஆவணமாகவும் ஹபிபுல்லாவின் எழுத்தில் ஆகிவந்திருப்பது தமிழின் அதிர்ஷ்டம்.