‘தி இந்து நாடக விழா’வில் இடம்பெறும் இரண்டாவது தமிழ் நாடகம் ‘முந்திரிக்கொட்ட’. ஆகஸ்ட் 27 அன்று நடைபெறவிருக்கும் இந்த நாடகம் கடலோர மக்களின் வாழ்க்கைமுறையை, சோகத்தைத் தூரவைத்துவிட்டு சுவாரஸ்யத்துடனும், நகைச்சுவையுடனும் அணுகியிருக்கிறது.
‘தி ராயல் கோர்ட் தியேட்டர்’ என்ற பிரிட்டன் நாடக நிறுவனம், மும்பையின் ‘ரேஜ் தியேட்டருடன்’ இணைந்து ‘ரைட்டர்ஸ் பிளாக்’ என்ற பயிற்சிப் பட்டறையை 2014-ல் நடத்தியது. இந்தப் பயிற்சி பட்டறையில் கலந்துகொண்டபோது, ‘முந்திரிக்கொட்ட’ நாடகத்தை எழுதியிருக்கிறார் இந்நாடக ஆசிரியர் சுனந்தா ரகுநாதன். “ஒரு மாணவன், ஓர் ஆசிரியர், ஒரு பள்ளி, ஒரு கிராமம் என்பதை வைத்து ஒரு நாடகம் எழுத வேண்டும் என்று நினைத்தேன். அப்படித்தான் பரங்கிப்பேட்டை என்ற கடலோர கிராமத்தைப் பின்னணியாக வைத்து ‘முந்திரிக்கொட்ட’ நாடகத்தை உருவாக்கினேன். பன்னிரண்டு வயது கருப்பண்ணசாமி என்கிற ‘கேபி’, அவனுடைய அம்மா பவுன் என்ற இருவரின் வாழ்க்கையையும் இந்த நாடகம் பின்தொடர்கிறது ” என்று சொல்கிறார் சுனந்தா ரகுநாதன்.
‘முந்திரிக்கொட்ட’ நாடகத்தை அனிதா சந்தானம் இயக்குகிறார். கட லோர மக்களின் வாழ்க்கைமுறையை உண்மையாகப் பிரதிபலிக்க விரும்பியதால், சுனந்தாவும், அனிதாவும் இணைந்து பரங்கிப்பேட்டைக்கு நேரில் சென்றிருக்கின்றனர். அங்கே சிலநாட்கள் தங்கியிருந்து அந்த மக்களுடன் பேசிப்பழகி, அவர்களுடைய வாழ்க்கை முறையை உள்வாங்கி இந்த நாடகத்தை உருவாக்கியிருக்கின்றனர். அத்துடன், இந்நாடகத்தில் பயன்படுத்தியிருக்கும் ஆடைகளைக்கூடப் பரங்கிப்பேட்டையில் இருந்துவாங்கிவந்துதான் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
“இந்நாடகத்தின் தனித்துவமாக இதன் கதையையைச் சொல்லலாம். பொதுவாக, கடலோர மக்கள் வாழ்க்கை என்றாலே அது சோகம் நிரம்பியதாக இருக்கும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கும். அந்த எண்ணத்தை இந்த நாடகம் உடைக்கும். ஏனென்றால், அவர்களுடைய வாழ்க்கையை வெளியிலிருந்து பார்க்கும் நமக்குத்தான் அது சோகமாகத் தெரியும். ஆனால், அந்த மக்கள் அவர்களுடைய வாழ்க்கையை அதன்போக்கில் சுவாரஸ்யத்துடனும், நகைச்சுவையுடனும் அணுகுகின்றனர் என்பதுதான் உண்மை. அதை இந்த நாடகத்தில் அப்படியே கொண்டுவந்திருக்கிறோம்” என்கிறார் நாடக இயக்குநர் அனிதா சந்தானம்.
இந்த நாடகத்தில் காட்சிகளுக்கு ஏற்றபடி மேடையை நிர்வகிக்கும் பொறுப்பை நடிகர்களே புதுமையாக மேற்கொண்டிருக்கின்றனர். அத்துடன், நாடகத்துக்குப் பயன்படுத்தும் பொருட்களையும் எளிமையுடனே தேர்ந்தெடுத்திருக்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் மும்பையிலும், ஜூன் மாதம் பெங்களூருவிலும் நடைபெற்ற இந்த நாடகம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. “தமிழ்தெரியாத பார்வையாளர்களும் இந்தநாடகத்துடன் எளிதாகத் தங்களை இணைத்துக்கொண்டதைப் பார்க்கமுடிந்தது. ஒரு நாடகத்தை உள்வாங்கிக்கொள்வதற்குத் தடையாக மொழி எப்போதும் இருக்க முடியாது. இதுதான் நாடகக்கலையின் ஆற்றல். அதை எங்களுடைய நாடகத்தில் கொண்டுவந்திருப்பது மகிழ்ச்சி” என்று சொல்கிறார் அனிதா.
இந்நாடகத்தில் ஆறு முக்கியக் கதாபாத்திரங்கள் இருக்கின்றன. அந்த கதாபாத்திரங்களின் வாழ்க்கையின் தருணங்களை அவர்களாகவே வாழ்வதற்கும், கடலோர வாழ்க்கையின் சந்தங்களைப் பார்வையாளர்களுக்குக் கடத்துவதற்கும் ‘முந்திரிக்கொட்ட’ நாடகம் காத்திருக்கிறது.
தமிழ் நாடகங்கள் நடைபெறும் இடம்: அருங்காட்சியக அரங்கம் (Museum Theatre), எழும்பூர்
தி இந்து நாடக விழா
நிகழ்ச்சிகள்:
ஆகஸ்ட் 26:
ஆயிரத்தியோரு இரவுகள்
ஆகஸ்ட் 27:
முந்திரிக்கொட்ட
ஆகஸ்ட் 28:
வண்டிச்சோடை
‘தி இந்து தியேட்டர் ஃபெஸ்ட்’ நாடகங்களைப் பார்க்க டிக்கெட்களுக்கு:
thehindu.com/tickets2016
மேலும் தகவல்களுக்கு:
thehindu.com/theatrefest