இலக்கியம்

நல் வரவு: தமிழ் திரைப்பட நூற்றாண்டு 2018

செய்திப்பிரிவு

இந்தியா (அன்று முதல் இன்று வரை)

வேகமான கால ஓட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகள் ஏதாவதொரு வகையில், சமூகத்தில் ஏதேனுமொரு தாக்கத்தை உண்டாக்குகின்றன. நாம் வாழும் நாட்டின் வரலாற்றை, கடந்து வந்த பாதையைச் சற்றே திரும்பிப் பார்ப்பது அவசியமானது. அவ்வகையில், முகமதியர்கள் வருகைக்கு முன் பண்டைய இந்தியா எனும் கட்டுரையோடு தொடங்கும் இந்த நூலில்,2014-ல் வேட்டி அணிவதைச் சட்டமாக்கியது வரையான பல வரலாற்று நிகழ்வுகள் பூச்சரமாகத் தொடுக்கப்பட்டுள்ளன.

காலத்தால் அழியாத சுதந்திரம்: ஓர் இதழியல் ஆய்வு

புதுச்சேரியில் பொதுவுடைமைச் சிந்தனையாளர் வ. சுப்பையாவால் 1934-ல் ஜூன்-1 அன்று தொடங்கப்பட்ட மார்க்சிய மாத இதழ் ‘சுதந்திரம்’. பாட்டாளி மக்களிடையே விழிப்புணர்வைத் தூண்ட வேண்டும், அவர்கள் வாழ்விலும் மறுமலர்ச்சி உண்டாக வேண்டுமென்கிற உயரிய இலட்சியத்தோடு வெளியான இதழிது. 1935-லிருந்து வார இதழாகி, கடந்த 83 ஆண்டுகளாக தொடர்ந்து வெளியாகிவரும் ‘சுதந்திரம்’ இதழின் ஆரம்ப கால இதழ்கள் மற்றும் அதில் இடம்பெற்ற படைப்புகள் பற்றியுமான இதழியல் ஆய்வாக மலர்ந்துள்ளது.

தமிழ் திரைப்பட நூற்றாண்டு 2018

தென்னிந்தியாவின் முதல் தமிழ்த் திரைப்படமான ‘கீசகவதம்’ 1916-ம் ஆண்டு வெளியானதால், 2016-ஐத் தமிழ்த் திரைப்பட நூற்றாண்டாகப் பல அமைப்புகளும் கொண்டாடின. ஆனால், அந்தப் படம் 1916-ல் வெளியானதற்கான போதிய ஆதாரம் ஏதுமில்லை என்று வாதிடும் இந்நூலாசிரியர், 1917-ன் இறுதியில் தயாரிக்கப்பட்டு, 1918-ம் ஆண்டின் தொடக்கத்தில் சென்னை எல்பின்ஸ்டன் திரையரங்கில் ‘கீசகவதம்’ திரையிடப்பட்டது என்று கூறுகிறார். நூலின் பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ள தரவுகளும் கவனிக்கத்தக்கவை.

விவசாயம், சுற்றுச்சூழல், உடல் நலன்

கல்வி மற்றும் அரசியல் குறித்து தொடர்ந்து எழுதிவரும் பேராசிரியர் கே. ராஜுவின் விவசாயம், சுற்றுச்சூழல், உடல்நலன் சார்ந்த 63 குறுங்கட்டுரைகள் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் அதனதன் அளவில் சிறிய அறிமுகமாக இருக்கிறது. புரியாத விஷயங்களைக் கூட எளிமையாகவும் சுருக்கமாகவும் சொல்வதற்கு நூலாசிரியரின் எளிய மொழிநடை கைகொடுத்துள்ளது. ஒவ்வொரு கட்டுரைக்கும் பொருத்தமான புகைப்படங்கள், கோட்டோவியங்களைச் சேர்த்திருப்பதும் வாசிப்புக்கு உதவி புரிகிறது.

இல்லுமினாட்டி

திரைகளேதுமற்றதாய் இருக்கிறது இன்றைய உலகம். ’எனது அந்தரங்கம் இது’ என்று சொல்லிக்கொள்ள யாருக்குமிங்கே உரிமையில்லை. நவீன அறிவியல் தொழில்நுட்பம், அனைவரின் தனிப்பட்ட விருப்புவெறுப்புகளையுங்கூடச் சற்றும் கூச்சமின்றி உள்நுழைந்து வேடிக்கை பார்க்கிறது. நம் அனுமதியின்றி ஊடுருவி, தகவல்களைத் திருடுகிறது. தேவையெனில், அதனையே பகடையாக்கி நம்மை அச்சுறுத்தவும் செய்கிறது. இப்படியாக இந்த உலகையே இயக்கிக்கொண்டிருக்கும் மாயக்கயிற்றைத் தன் கையில் வைத்திருக்கும் ‘இல்லுமினாட்டிகள்’ பற்றிய விரிவான தகவல்களைத் தொகுத்து தருகிறது இந்நூல்.

தொகுப்பு: முருகேஷ்

SCROLL FOR NEXT