கரிசல் காட்டுப் பூமியான ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி நிலப்பரப்பினுள் ளிருந்து தன்னுடைய எல்லாக் கதைகளையும் உருவாக்கிவருபவர் வேல ராம மூர்த்தி. அவை கதைகளே அல்ல வாழ்க்கைப் பாடுகள். கருவேலங்காட்டைச் சுற்றி, தேடி அலைந்து தன் சொந்த சமூகம் சார்ந்த கதைகளை இறுகப் பின்னி ‘இதுதான் நாங்க’ என்று பச்சை ரத்தம் கசிய நம்முன் தூக்கிப்போடுகிறார் வேல ராமமூர்த்தி.
‘ராணுவப் பணி, தபால்துறைப் பணி, தொலைக் காட்சித் தொடர், நாடகம், தொழிற்சங்கம், அறிவியல் இயக்கம், த.மு.எ.ச., சினிமா எனப் பல்வேறு தளங்களில் இயங்கிய அனுபவங்களை அவர் பெற்றிருந்தாலும், அவர் பிறந்த மண்ணில் கண்டு, கேட்டு, அனுபவித்தவற்றையே கதையாகப் படைக்கிறார்’ என்று அவரது நூல் ஒன்றின் முன்னுரை கூறுவது முற்றிலும் உண்மையே. இவரின் கதைகள் பெரும்பாலும் சுயசாதி பற்றியவை.
சுயசாதி குறித்தப் பெருமிதங்களைப் பற்றிய பேசும் நிலையிலிருந்து, நிதர்சனங்களை விமர்சனப் பார்வையோடு படைத்துள்ளார். இவ்வாறு படைக்கும்போது, தன் உறவுகளின் எதிர்ப்புக்கும் பல்வேறு சிக்கல்களுக்கும் உள்ளானதைப் பற்றி இப்படிக் கூறுகிறார்: “என் துவக்க கால எழுத்துக்கள் என் உறவுக்காரர்களின் கடும் எதிர்ப்புகளுக்கு உள்ளாயின. ஒளிவுமறைவின்றி அவர்களை நான் எழுதிக் கிழித்த கிழிப்பில் என்னைக் கொலை செய்துவிடவும் துணிந்தனர். என் கோபத்திற்கு தார்மிக நியாயம் இருந்தது… பெருத்த இழப்புக்களுக்குப் பின் என் எழுத்து தடம் மாறக் காணோம். என் எழுத்துக்கான தேவை என் மண்ணில் இன்னும் இருப்பதால் களம் மாறாமல் கதை சொல்லிவருகிறேன். வாசகனின் கபாலத்தைப் பிளந்து, அறிவையும் புத்திமதிகளையும் குடம் குடமாய்க் கொட்டுகின்ற வேலையை நான் செய்தவனில்லை. பாமரர்களையும் கொஞ்சம் படித்தவனையும் கோபம் கொள்ளச் செய்திடவே எழுதினேன். அது நடந்தது.”
வேல ராமமூர்த்தி இடதுசாரி சிந்தனை கொண்டவர். 1990-களுக்குப் பிறகு உருவான புதிய அலையில் எழுதிவரும் இமையம், கண்மணி குணசேகரன், ஜோ.டி. குரூஸ், சோ.தர்மன், சு. வேணுகோபால், தேவிபாரதி முதலானவர்களுடைய எழுத்துக்கள் அதுவரை சொல்லப்படாவற்றைச் சொல்லியவை; இந்த எழுத்தாளர்கள் தங்கள் வாழ்வனுபவங்களையே பெரிதும் முன்வைப்பவர்கள். அவர்களைப் போன்றே வேல ராமமூர்த்தியும் தனது பெருநாழி கிராம மக்களின் வாழ்க்கையை எழுதுகிறார்.1871-ல் காலனிய ஆட்சியில் குறிப்பிட்ட சாதியினர் மீது குற்றப் பரம்பரைச் சட்டம் கொண்டுவந்தது. அவற்றுள் இப்பகுதி மக்களும் அடங்குவார்கள். இதனையும் நாம் பின்புலமாகக் கொள்ள வேண்டும். இவருடைய சிறுகதைகளை ‘நீளும் ரெக்கை’ (2002) ‘வேட்டை’ (2007) என்னும் இரண்டு தொகுப்புகளாக காவ்யா பதிப்பகம் வெளியிட்டது. அவரது 38 சிறுகதைகளைத் தொகுத்து வம்சி பதிப்பகம் 2015-ல் ஒரே தொகுப்பாக வெளியிட்டது.
வேல ராமமூர்த்தி தேர்ந்த கதைசொல்லி என்பதால் அவருடைய கதைகள் அனைத்தும் வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் காட்டுகின்றன. மேலும், வாழ்க்கையின் அடிநாதமாகவோ அல்லது பிரச்சினையின் அடிநாதமாகவோ தோன்றும் ஒரு மனநிலையை உருவாக்கி வாசகரின் மனத்தில் அதிர்வை உண்டுபண்ணுகின்றன. இக்கதைகள் களவும் வன்மமும் வீரமும் புதைந்த மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளன. வாழ்க்கையின் கவனப்படுத்தாத பக்கங்களைக் கவனப்படுத்துவதோடு அவற்றைக் காட்சிப் படிமங்களாய் நம்முன் விரித்துப்போடுவதில் வேல ராமமூர்த்தி வெற்றி பெற்றிருக்கிறார்.
- கல்பனா சேக்கிழார், உதவிப்பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடர்புக்கு: kalpanasekkizhar@gmail.com