இலக்கியம்

தமிழுக்கு வெளியே நாம் இருக்கிறோமா?

மனுஷ்ய புத்திரன்

புகழ்பெற்ற ஓவியர் சையத் ஹைதர் ரஸாவின் நினைவாக உருவாக்கப்பட்ட ரஸா அறக்கட்டளை 15 இந்திய மொழிகளிலிருந்து 45 கவிஞர்களை ஏப்ரல் 7-9 வரை நடந்த மூன்று நாள் கவிதா நிகழ்வுக்கு அழைத்திருந்தது. தமிழிலிருந்து நான், குட்டி ரேவதி, சல்மா ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தோம். ஆங்கிலக் கவிதைகள் பிரிவில் தமிழரான அருந்ததி சுப்ரமணியம் இடம்பெற்றிருந்தார். ஒவ்வொரு கவிஞருக்கும் அவர்களது கவிதைகளைத் தாய்மொழியில் வாசிக்கவும் அவற்றின் மொழிபெயர்ப்புகளை வழங்கவும் பதினைந்து நிமிடங்கள் அளித்திருந்தனர். எனது ஐந்து கவிதைகளை வாசித்தேன். ‘தமிழில் இத்தகைய கவிதைகள் எழுதப்படுகின்றனவா?’ என்று ஆச்சரியத்துடன் கேட்டார்கள். மலையாளக் கவிஞர்களுக்கு என்னை ஏற்கெனவே தெரிந்திருந்தது.

இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த கவிதை சார்ந்த நீரோட்டங்களை ஒரே நேரத்தில் அறியக்கூடியதாக நிகழ்வு இருந்தது. இந்தியாவின் சமூக வாழ்விலும் தனி மனித வாழ்விலும் நடந்திருக்கும் மாற்றங்களையும் சிதைவுகளையும் பெரும்பாலான மொழிக் கவிஞர்கள் எதிர்கொள்கிறார்கள். மேலும், பண்பாட்டு வாழ்வின் மிக ஆழமான வேர்களோடு அக்கவிதைகள் பிணைக்கப்பட்டிருக்கின்றன. எல்லா மொழிக் கவிஞர்களும் தங்கள் மூல மொழியுடன் தங்கள் கவிதைகளின் ஆங்கில வடிவத்தை வழங்கினார்கள். ஆனால், இந்திக் கவிஞர்கள் இந்தியில் மட்டுமே கவிதைகள் படித்தார்கள்.

பொதுவாக டெல்லியின் கலை- கலாச்சார- இலக்கியச் சூழல் என்பது ஒரு புறம் உயர்மட்ட ஆங்கிலம் பேசுகிறவர்களாலும் இன்னொரு புறம் இந்தியை இந்த உலகின் எல்லைகளாகக் கருதுகிறவர்களாலும் ஆனது என்று எனக்குத் தோன்றியது. பிற மொழிக் கவிஞர்களுக்கும் டெல்லியின் கலாச்சார மேட்டுக்குடியினருக்கும் இடையே பெரும் இடைவெளிகள் இருக்கின்றன.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த பல மொழிக் கவிஞர்களிடம் உரையாடியபோது, அவர்களில் பலருக்கு நவீனத் தமிழ் இலக்கியத்தில் நடந்த எதுவுமே தெரியவில்லை என்பது எனக்கு அதிர்ச்சியூட்டியது. பொதுவாகத் தமிழில் இலக்கியம் படிக்கக்கூடிய பெரும்பாலானோர் மலையாள எழுத்தாளர்கள் பலரைத் தமிழ் எழுத்தாளர்கள் போல நன்கறிவார்கள். இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காளம் உள்ளிட்ட பல மொழிகளிலிருந்தும் தமிழர்கள் வாசிக்க ஏராளமான மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன.

ஆனால், நமது மகத்தான இலக்கிய ஆளுமைகளில் 99 சதவிகித எழுத்தாளர்களின் பெயர்கூடப் பிற இந்திய மொழிகளைச் சேர்ந்தவர்களுக்குத் தெரியவில்லை. கடந்த 50 ஆண்டுகளில் தமிழ் இலக்கியம் அடைந்திருக்கும் நவீனத்துவம் வேறு எந்த மொழியுடனும் ஒப்பிட இயலாதது. பல மொழிக் கவிஞர்கள் இப்போது வந்து சேர்ந்திருக்கும் இடத்தை நாம் கால் நூற்றாண்டுக்கு முன்பே கடந்துவிட்டோம். அந்த அளவு தமிழ்க் கவிதை செறிவும் ஆழமும் சமகாலத்தன்மையும் கொண்டதாக இருக்கிறது. கவிதைகள் உலகமயமாதல் சூழலில் மனித அனுபவத்துக்கும் நிகழும் உடைப்புகளை தமிழ்க் கவிதை மிக அந்தரங்கமாக நெருங்கிச் சென்று தொடுகிறது. ஆனால், தமிழிலிருந்து பிறரால் அறியப்படும் சில பெயர்கள் நமக்குப் பெருமை சேர்ப்பவை அல்ல. அவை நவீன தமிழ் இலக்கியம் பற்றிய மோசமான, தவறான, பலவீனமான சித்திரங்களையே பிறருக்கு அளிக்கின்றன.

நமகான தடுப்புச் சுவர்களைக் கட்டியதில் நமக்குப் பெரும் பங்கு இருக்கிறது. தேசிய சர்வதேச அளவிலான இலக்கிய அரங்குகளில் பரிவர்த்தனைகளில் நவீனத் தமிழ்ப் படைப்பாளிகள் உரிய இடம் பெறாததற்குத் தமிழ் நாட்டைச் சேர்ந்த பரிந்துரையாளர்களே முக்கியக் காரணம். தன்னைத்தானே முன்னிறுத்திக்கொள்ளுதல், தன்னைச் சார்ந்தவர்களை மட்டும் முன்னிறுத் துதல், தனிப்பட்ட காரணங்களுக்காகத் தனக்கு ஒவ்வாதவர்களைப் புறக் கணித்தல் போன்ற வற்றால் நமது முக்கியமான மூத்த இளம் படைப்பாளிகள் தொடர்ந்து இருட்டிலேயே இருக்கிறார்கள்.

இது தமிழுக்கு இழைக்கப் படும் துரோகம். அதிகார மட்டத்தைச் சேர்ந்த மலையாளிகளோ கன்னடர்களோ வங்க மொழியைச் சேர்தவர்களோ தங்கள் மொழியின் சிறந்த படைப்பாளி களைத் தேசிய சர்வதேச அரங்குகளில் முன்னிறுத்துவற்குக் கடுமையான பிரயத்தனங் கள் செய்கிறார்கள். உயரிய விருதுகள் தங் களின் சிறந்த படைப்பாளிகளுக்குக் கிடைக்கச் செய்வதில் உறுதியுடன் இருக்கிறார்கள். குழு அரசியலின் உக்கிரம் கொண்ட தமிழ் நண்டுகள் ஒருவர் காலை மற்றொருவர் இழுத்தவண்ணம் இருக்கின்றனர்.

நவீனத் தமிழ் இலக்கியத்தின் மற்றொரு பேரவலம் நமது முதன்மையான படைப் பாளிகள் பெரும்பாலானோருக்கு ஆங்கிலத் திலோ பிற இந்திய மொழிகளிலோ முறையான மொழிபெயர்ப்புகள் இல்லை. அதுமட்டுமல்ல; ஆங்கில இதழ்களில் எழுதக்கூடிய தமிழ் எழுத்தாளர்கள் நமது சமகால இலக்கிய மேன்மைகளைப் பிறருக்குச் சொல்வது குறித்த அக்கறையற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். ஏ.கே.ராமானுஜம் என்ற ஒருவர் சங்கப் பாடல்களுக்குச் செய்த பணி மூலம் நமது இலக்கியத்தை உலகம் திரும்பிப் பார்த்தது. அதற்குப் பிறகு அப்படி ஒரு அற்புதம் ஏன் நிகழவில்லை?

நமக்கு நாமே இழைத்துக்கொள்ளும் அநீதிகளை நாம் நிறுத்தாவிட்டால் பிறர் தமிழுக்கு இழைக்கும் அநீதிகளை எதிர்த்துக் கேட்பதற்கான தகுதியை இழந்துவிடுவோம்.

- மனுஷ்ய புத்திரன், கட்டுரையாளர் கவிஞர், பதிப்பாளர்.

தொடர்புக்கு: manushyaputhiran@gmail.com

SCROLL FOR NEXT