தற்காலத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான ஷோபா சக்தி கான் விருது பெற்ற ‘தீபன்’ திரைப்படத்தின் மூலம் உலக அளவில் ஒரு நடிகராகவும் பரவலாக அறியப்பட்டார். தற்போது ‘அன்லாக்’ (Unlock) என்ற குறும்படத்திலும் அவர் நடித்திருக்கிறார். நிர்மலன் நடராஜா இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படம் இந்த ஆண்டு நடைபெறும் 70-வது கான் திரைப்பட விழாவில் கலந்துகொள்ளத் தேர்வாகியிருக்கிறது.
அன்றைய வெப்பநிலைக்கு காந்தி!
மதுரையில் உள்ள ‘காந்திய இலக்கிய சங்கம்’ தனது வெளியீடுகளுக்கு ஒரு வித்தியாசமான தள்ளுபடியை அறிவித்திருக்கிறது. அன்றைய ‘அதிகபட்ச வெப்பநிலை அன்றைய அதிகபட்ச தள்ளுபடியாக’ என்ற வாசகங்களுடன் தள்ளுபடியை அறிவித்திருக்கிறார்கள். இன்றைய வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் என்றால் புத்தகங்களுக்கான தள்ளுபடியும் 34 சதவீதத்துக்குக் கிடைக்கும். மார்ச் 3-ல் ஆரம்பித்த இந்தத் தள்ளுபடித் திருவிழா 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. ‘காந்திய இலக்கிய சங்கம்’, ‘தமிழ்நாடு இயற்கை மருத்து சங்கம்’ ஆகியவற்றின் வெளியீடுகளுக்குத்தான் இந்தச் சலுகை. காந்தியை விமர்சித்து அம்பேத்கர் எழுதிய கட்டுரைக்கு ஆதாரபூர்வமான மறுப்புகளாக சந்தானமும் ராஜாஜியும் எழுதிய இரண்டு சிறு நூல்களும் விற்பனையில் முதலிடம் பிடித்திருக்கின்றன என்கிறார்கள் ‘காந்திய இலக்கிய சங்க’த்தினர். தொடர்புக்கு: அன்புசிவன் - 94440 58898.
மலையாளத்தில் ‘மகளிர் தினம்’
பத்திரிகையாளர் இரா. ஜவஹர் எழுதி சமீபத்தில் பெருவரவேற்பு பெற்ற புத்தகம் ‘மகளிர் தினம்: உண்மை வரலாறு’. இந்தப் புத்தகம் தற்போது மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டிருக் கிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு கடந்த 8-03-2017 அன்று கேரளத்தின் 11 மாவட்டங்களில் இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா நடந்திருப்பது அதன் தமிழ்ப் பதிப்புக்கும் கிடைக்காத சிறப்பு. இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இந்தப் புத்தகம் கூடிய விரைவில் வெளியாகவிருக்கிறது!
ஆண் எழுத்தாளர்களுக்கு ‘புறமுதுகு’
அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் உள்ள ‘லோகன்பெரி புத்தகக் கடை’யில் பெண் வரலாற்று மாதமான மார்ச் மாதத்தை வித்தியாசமான முறையில் கொண்டாடுகிறார்கள். இந்த மாதம் முழுவதும் அந்தப் புத்தகக் கடையின் அலமாரிகளில் இடம்பெற்றிருக்கும் ஆண் எழுத்தாளர்களின் புத்தகங்கள் அவற்றின் முதுகுப் பக்கம் சுவரை நோக்கி இருக்கும்படி வைக்கப்பட்டிருக்குமாம். இப்படி வைக்கப்பட்டதால் எல்லாப் புத்தகங்களும் புறமுதுகைச் சுவருக்குக் காட்டியபடியே இருப்பதுபோல் தோற்றம் கொடுத்தாலும் உற்றுப் பார்த்தால் ஆங்காங்கே பெண் எழுத்தாளர்களின் புத்தகங்களின் முதுகுப் பக்கம் வாசகரின் கண்களுக்குத் தென்படுகிறது. எழுத்துலகிலும் புத்தகக் கடைகளிலும் பெண் எழுத்துக்குரிய இடம் மிகக் குறைவாக இருக்கிறது என்பதைக் கோடிட்டுக் காட்டும் விதத்தில் இருக்கிறது இந்தச் செயல்! எனினும் ஆண் எழுத்தாளர்கள் மத்தியில் இந்தச் செயல் கோபத்தையும் தூண்டியிருக்கிறது.