இலக்கியம்

அன்புள்ள நம்பிராஜனுக்கு

செய்திப்பிரிவு

கவிஞர் விக்ரமாதித்யனுக்கு மூத்த எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்களில் சில இங்கே பிரசுரிக்கப்படுகின்றன. ப்ரமிள், சுந்தர ராமசாமி, கி.ரா ஆகியோர் எழுதியுள்ள இக்கடிதங்களில் அவர்களின் எழுத்தாளுமையும், தனிப்பண்புகளும் வெளிப்படுகின்றன. ஒரு காலகட்டத்தின் உறவுகள், மதிப்பீடுகளை இக்கடிதங்கள் வெளிப்படுத்துகின்றன.

K.R.PRAMIL9.02.1989

50B, TVA KOIL ST

THIRUVANMIYUR - 600041

அன்புள்ள நம்பிராஜன்,

நீங்கள் குறிப்பிட்டபடி மாண்புமிகு மு.க. அவர்களைப் போய்ப் பார்க்க விரும்புகிறேன். ‘லங்காபுரி ராஜா’வுடன் போய் பார்க்கலாம். சுப்ரமணியனும் வரட்டும். நாளை 10th எதிர்பார்க்கிறேன். பிறகு, பிறகு. இதற்கு என்னளவிலான காரணம் எனது பிரஜாவுரிமையாகும். பாஸ்போர்ட் ஒன்று எடுத்தாக வேண்டிய அவசியம் உள்ளது. விபரம் எழுதவும்.

“இத்யாதி”(etc) என்ற பிரயோகத்துக்கு மிக எளிமையான தமிழ் தேவை. நீங்கள், போனதடவை பார்த்தபோது, குறிப்பிட்ட பிரயோகங்கள் சிக்கலாக உள்ளன. “வெண்டைக்காய் முதலிய பதார்த்தங்கள்”, “வெண்டைக்காய் போன்ற பதார்த்தங்கள்” என்பதை விடவும் வேறு பட்ட ஒன்று. etc. இதற்கு ‘இத்யாதி’ தான் சரிவரும். உதாரணமாக: The speaker came out with his usual stuff such as the glory of india,etc என்று சொல்கிறபோது ஒரு irony உண்டாகிறது. தமிழில் இதை “பேச்சாளர் தமது வழக்கமான இந்தியப் பெருமை இன்னபிற பற்றி பேச ஆரம்பித்தார்” என்பது “இந்தியப் பெருமை இத்யாதி பற்றி பேச ஆரம்பித்தார்” என்பதா? எதில் irony தொனிக்கிறது?

Irony தொனிக்கத் தேவையற்ற வியாசங்களில் தனித்தமிழ்ப் பதங்கள் உபயோகித்தால் ஒன்றும் குடிமுழுகிவிடாது. ஆனால் இந்தப் பதங்களுக்கு ஒரு பேச்சுவழக்குச் சாயல் இருப்பது நல்லது. அப்படி இருக்குமானால் வியாசங்களில் அறிவுப்போக்கு, படைப்புகளின் irony, எதற்கும் அது வளைந்து வரும். இவ்வளவுக்கும் etc ஒரு ஆங்கிலப் பதம் அல்ல. லத்தீன் excextraவின் சுருக்கம். நாம் மட்டும் ஏன் ‘இத்யாதியை’ உதற வேண்டும். புரியவில்லை. ஐரோப்பிய மொழி எதுவும் லத்தீன், கிரீக் ஆகியவற்றை உதறுவதில்லை. மாறாக மேலும் மேலும் இவற்றிலிருந்து இதர மொழிகளிலும் இருந்து சொற்களை அவை பெறுகின்றன.

மேல்நாடுகளில் ஆங்கிலத்திலன்றித் தங்கள் தங்கள் மொழிகளிலேயே எல்லா நாடுகளிலும் விலாசங்கள் உள்ளதாக திரு திரு. நெடுமாறன் சில வருஷங்களுக்கு முன் ‘தராசு’விலோ எங்கோ சொன்ன ஞாபகம். அவர் இதில் ஒன்றை மழுப்பிவிடுகிறார். எல்லா மேநாட்டு மொழிகளும் (ரஷ்யன் தவிர) ஒரே லிபியைத் தான் உபயோகிக்கின்றன. எனவேதான் அவை தங்கள் தங்கள் மொழிப் பெயர்களை விலாசங்களில் தருகின்றன. இது மட்டுமின்றி ஒரே லிபி இருப்பதால் உள்ள அடுத்த பிரச்னை பெயரின் பொருளை அறிவதுதான். இதற்கு உடனே கையில் உள்ள சிறு அகராதி உதவும். உதாரணமாக ஒரே லிபியிலுள்ள HANTWERKER GATA என்ற ஸ்வீடிஷ் தெருப்பெயருக்கு HANDWORKER ROAD என்ற பொருள் கிடைத்துவிடுகிறது. இந்தியாவிலோ ஒரு இந்தியன் பல்வேறு லிபிகளைக் கற்க வேண்டிய முட்டாள்தனமான நிலையில் இன்று இருக்கிறான். தமிழும் ஆங்கிலமும் மட்டுமே தெரிந்த ஒருவன் பங்களூர் போனால் ஆங்கிலம் தெரிந்த ஒரு பங்களூர்காரரின் உதவி இல்லாமல் சிட்டி பஸ் படிக்கவே முடியாது! பதில் எழுதுங்கள்.

அன்புடன்,

ப்ரமிள்

--------------------------------------------------

சுந்தர ராமசாமி

நாகர்கோவில்

28.02.88

அன்புள்ள நம்பி,

உங்கள் 23.02.88 கடிதம். ‘உள்வாங்கும் உலகம்’ மூன்று பிரதிகளும் திலீப் மூலம் வந்து சேர்ந்தன. நீங்கள் என்ன யோசனையில் மூன்று பிரதிகள் அனுப்பி வைத்திருக்கிறீர்கள் என்பது தெரியாத நிலையிலேயே, ஒரு பிரதியை நான் மலையாளக் கவிஞர் ரவி வர்மாவுக்கு அனுப்பி வைத்துவிட்டேன். ஏற்கனவே நான் அவருக்கு அனுப்பி இருக்கும் உங்கள் கவிதைகளை அவர் விரும்பிப் படித்துவருகிறார் என்றும் உங்கள் கவிதைகள் மீது அவருக்கு தனியான பாராட்டுணர்வு இருக்கிறது என்றும் எனக்கும் அவருக்கும் பொதுவான நண்பரிடமிருந்து செய்தி வந்திருந்ததனால்தான் உங்கள் புதிய கவிதைத் தொகுதியையும் அவசரமாக அவருக்கு அனுப்பிவைத்தேன்.

உங்கள் தொகுதியில் பல கவிதைகளையும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் படித்தேன். இப்படி விருப்பம் கொள்ளும்படி இருப்பதே கவிதையின் தரத்துக்கு ஒரு சான்று என்று தோன்றிற்று. எளிமையும் அழகும் அப்படியே இருக்க முதிர்ச்சி முன் இருந்ததை விடக் கூடிவருகிறது. நல்ல உள் வளர்ச்சி பெற்று வருகிறீர்கள். மிகுந்த நம்பிக்கையுடன்- மூளையைக் குழப்பும் வெளி உலகச் சத்தங்களுக்கு- மதிப்பு தராமல் உங்கள் பார்வை, உங்கள் குரல் உங்கள் நம்பிக்கைகளை வெளிப்படுத்திக்கொண்டு வாருங்கள். இன்னும் ஆழம் கூடிவர வேண்டும் என்பது என் ஆசை; எதிர்பார்ப்பு.

காலச்சுவடுவில் உங்கள் தொகுதிக்கு மதிப்புரை வெளியிட முயல்வேன். நான் விரும்பும் விதத்தில் மதிப்புரையாளர்கள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது.

காலச்சுவடு முதல் இதழ் எனக்கும் திருப்தி இல்லை. மிக மோசமான லௌகீகப் பிடுங்கல்களின் மத்தியில் அதைத் தயாரிக்கும்படி ஆயிற்று. போகப் போக இதழ்களின் தரம் கூடிவரும் என்று நம்புகிறேன்.

அன்புடன்,

சுரா

--------------------------------------------------

கி.ரா

மெட்றாஸ்-78

அன்பார்ந்த நண்பர் அவர்களுக்கு,

வணக்கம்.

உங்கள் காயிதம் கிடைத்தது. மெய்யாகவே சந்தோஷமாயிருந்தது. உங்கள் கோவத்தை அங்கீகரிக்கிறேன்; மதிக்கிறேன்.

“நாழி முகவாது நா நாழி” என்று சொல்லுவார்கள். என்ன செய்வது; எனக்குத் தெரிந்தது அவ்வளவுதான். என்னால் முடிந்தது அதுதான்.

அதைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்றால், வருந்துகிறேன் என்று ‘சாரி’ சொல்லுவதைத் தவிர வேறு வழி உண்டா.

எப்படியோ அவலட்சணமாக ஒரு குழந்தை பிறந்துவிட்டது. என்ன செய்ய முடியும், இனி அதை. இனிமேல் நல்ல குழந்தை பிறக்குமா என்று பார்ப்போம்.

உங்களைப் புதுமனிதன் போல ஏன் அறிமுகம் செய்துகொள்கிறீர்கள்? எப்படி மறந்துவிடுவேன் என்று நினைத்துவிட்டீர்கள்? இலக்கியம் எப்படியும் நாசமாய் போகட்டும்; பழகியவர்களை மறந்துபோவதோ மறந்துபோனது போல பாவலா செய்வதோ நான் இதுவரை செய்ததில்லை. செய்வதாக உத்தேசமும் இல்லை.

உங்களது கவிதைகளை- முக்கியமாக சமீபத்திய கவிதைகளை- படித்து ரசிக்கிறேன். அதில்வரும் உங்கள் அனுபவ வெளிப்பாடுகளை, சத்தியத்தை மிகவும் அனுபவிக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள் கவிதைகளை.

பிரியத்தோடு உங்கள் கைகளைப் பிடிக்கிறேன்.

கி. ராஜநாராயணன்

24.12.1986

SCROLL FOR NEXT