கொ.மா. கோதண்டம் நாவல்கள் | விலை:ரூ. 600
காவ்யா, சென்னை- 600024 | 044-23726882
‘குறிஞ்சிச் செல்வர்’ என்றழைக்கப்படும் கொ.மா. கோதண்டம் எழுதிய மூன்று நாவல்களின் தொகுப்பு. எதைப் பற்றி எழுதினாலும் சம்பவ இடத்திற்கே சென்று, கள ஆய்வு செய்து தானும் அந்த அனுபவத்தைத் துய்த்த பிறகே எழுதும் இயல்புடையவர் என்பதற்கான சாட்சி இந்த நாவல்கள். தமிழக ஏலத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை விவரிக்கும் ‘ஏலச்சிகரம்’, மேற்குமலைத் தொடர் பகுதியில் வாழும் மலைவாழ் மக்கள் பற்றிய ‘குறிஞ்சாம்பூ’, இலங்கையை வளங்கொழிக்க வைத்த இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்கள் பற்றிய ‘ஜன்மபூமிகள்’ என மூவகை மனிதர்களின் வலிகளைப் பேசும் எழுத்துக்கள் இவை.
பேசும் பரம்பொருள் | டாக்டர் சுதா சேஷய்யன் | விலை: ரூ. 300
வானதி பதிப்பகம், சென்னை- 17 | 044- 24342810
இந்து மதப் பண்டிகைகளையும் சடங்குகளையும் எளிய தமிழில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் துக்ளக் வார இதழில் எழுதி பிரமிக்க வைத்தார் சுதா. அவற்றின் தொகுப்பே இந்நூல். துருவன், நசிகேதஸுக்குப் பிறகு கேள்விகள் கேட்க ஆள் இல்லையே தவிர கேள்விகள் இல்லாமல் இல்லை. சஷ்டி விரத மாட்சி, கார்த்திகையின் சிறப்பு, பைரவர் பெருமையும் வழிபாடும், மார்கழியின் மேன்மை, மகாமகச் சிறப்பு, மகா சிவராத்திரி மகிமை, ஏகாதசி வழிபாடு, பிரார்த்தனை, நேர்த்திக் கடன் என்று ஆகமங்களின்படி விளக்கியிருக்கிறார்.
திணையும் திறனாய்வும் | சிவசு | விலை: ரூ.125
மேலும் வெளியீட்டகம், பாளையங்கோட்டை-627002 | 9443717804
அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் பணியாற்றிய சிவசு, சிற்றிதழ் தளத்திலும் (மேலும், சிற்றேடு) தொடர்ந்து செயல்பட்டுவருபவர். பல்வேறு காலகட்டங்களில் அவர் எழுதிய 13 கட்டுரைகள் நூலாகியுள்ளன. தமிழில் திணைக் கோட்பாட்டு ஒன்றை, திறனாய்வு உத்தியாக முதன்மைப்படுத்தும் நோக்குக்கு வலுசேர்க்கும் எண்ணத்தில் விளைந்துள்ளவையாக இந்தக் கட்டுரைகள் அமைந்துள்ளன. சங்க இலக்கியங்களில் வரும் தாவரங்கள் பற்றிய குறிப்புகளை விரித்துத்தரும் ‘மலர்களின் குறியியல்’ எனும் முதல் கட்டுரையே அவருடைய ஆய்வு நோக்குக்கு ஒரு சோறு பதம்.
உடன் வந்த உயிர் | வெ.கிருஷ்ணவேணி | விலை: ரூ.100.
காலம் வெளியீடு, மதுரை-625002 | 9443856143
கவிஞன் தனக்கான கவிதை மொழியைத் தன் வாழ்விலிருந்தே கண்டெடுக்கின்றான். சிரியாவிலிருந்து தப்பித்த அகதிகளின் படகு கவிழ்ந்து, கடற்கரையோரத்தில் பிணமாகக் கிடந்த அந்தப் பிஞ்சுக் குழந்தையின் முகத்தை யாரால்தான் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியும்? ‘என்றும் என் நினைவிலிருந்து அகலாது; அகற்றவும் இயலாது’ என உறுதிபடச் சொல்லும் கவிஞர் கிருஷ்ணவேணி, ‘மனிதர்களை நோக்கிப் / புன்னகைக்கக் கூட / மறந்துபோனது வாழ்க்கை’ என வருந்துகிறார். கவிதைகளெங்கும் உலக மாந்தர்களின் உள்ளத் துடிப்பைக் கேட்க முடிகிறது.
அபூர்வ ராமாயணம், தொகுதி-3 | திருப்பூர் கிருஷ்ணன் | விலை: ரூ. 240
திருப்பூர் குமரன் பதிப்பகம், சென்னை 600092 | 044- 23771473
ராமாயணமே பெரிய கதை. அதற்குள் ஏகப்பட்ட குட்டிக் கதைகள். தெலுங்கு, இந்தி மொழிகளில் வழங்கப்படும் பல கதைகளைத் தனது அபூர்வ ராமாயணத் தொகுதியில் இணைத்திருக்கிறார் திருப்பூர் கிருஷ்ணன். ஸ்ரீராமஜெயம் என்ற வார்த்தையின் சிறப்பை, சிவன் குடும்ப உரையாடலிலிருந்து தொடங்குகிறார். பார்வதி தேவி குழந்தை ராமனை வந்து பார்த்து மகிழும் காட்சி, சீதையிடம் சுமித்திரையைப் பற்றி மந்தரை கோள்மூட்டப் பார்த்துத் தோற்பது என்று பல்வேறு சம்பவங்கள் இக்காலத்தில் காணப்படும் சமூகப் பின்புலங்களை ‘முன்வைத்து’ எழுதப்பட்டிருக்கின்றன.