அலெக்ஸ் ஹெய்லியின் ‘ரூட்ஸ்’ நாவல் தமிழில் ‘ஏழு தலைமுறைகள்’ என்ற பெயரில் வெளிவந்தது. என்னைத் தூங்காமல் செய்த நாவல் அது. ‘ஆப்பிரிக்க -அமெரிக்கர்கள்’ என்னும் கருப்பர் இனத்தவர்களின் எழுச்சி வரலாற்றை மிக நேர்த்தியாகப் பதிவுசெய்த ஆவணம் இந்தப் புத்தகம். கருப்பினத்தவர்கள் எங்கிருந்து வந்தார்கள், அவர்களின் வாழ்க்கைமுறை, அந்த மக்களின் மூதாதையர்களின் ஆவணங்கள்பற்றிய தகவல்களுடன் வரலாற்றை நிகழ்வு பிறழாமல் அடுக்கிக்கொண்டே செல்லும் பயணம் அந்த நாவல்...
கருப்பினத்தவர்களின் ஆறாத வலியையும், போராட்டங்களுக்கு மத்தியில் துடிப்பான வாழ்க்கையையும் அந்தப் புத்தகம் வழியே படித்து அறிந்து கொண்டதும், அந்த வலியிலிருந்து மீண்டு என்னுடைய பணிகளைத் தொடர நீண்ட நாட்களானது. அந்த நாவலில் ‘குட்டன்’ என்ற ஒரு கதாபாத்திரம் என்னை மிகவும் பாதித்தது. வெள்ளையர்களிடமிருந்து அவர் தப்பித்துப் பின்னர் மாட்டிக்கொள்ளும் இடம் உயிர்ப்புடன் இருக்கும். அப்படியான தலைமுறை வழியே வந்த ஒருவர் இன்றைக்கு அமெரிக்காவை ஆட்சி செய்கிறார் என்பது அளவிட முடியாத பிரமிப்பும் ஆனந்தமும்தான்.
நம் நாட்டில் தலித் மக்களும் இந்த ஆதங்கங்களோடு இருந்திருப்பார்கள் என்பதை உணர வைத்ததும் இந்த நாவல்தான். ‘ஏழு தலைமுறைகள்’ ஏற்படுத்திய வலியை ‘எரியும் பனிக்காடு’ நாவலும் எனக்கு ஏற்படுத்தியது. வலிகளின் வழியே, இந்த வரலாறுகள் வழியே நான் கற்றுக்கொண்டது ஏராளம். இதன் பிரதிபலிப்பை என்னுடைய படங்களிலும் நீங்கள் பார்க்கலாம்.