இலக்கியம்

நல் வரவு: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

செய்திப்பிரிவு

தொடர்ந்து படிகளில் ஏறி…
சுப்ரா
விலை: ரூ. 95
புதுப்புனல், சென்னை-600005
9884427997

சிற்றிதழ்களில் தொடர்ந்து கவிதைகள் எழுதிவரும் சுப்ரா, கடந்த 38 ஆண்டுகளில் எழுதிய 11 சிறுகதைகளின் தொகுப்பிது. எந்தக் கதையிலும் எழுத்தாளருக்கென்று தனித்துவமான மொழிநடையைக் கையாளாமல், ஒவ்வொரு சிறுகதையும் வேறுவேறு மொழிநடையில் அமைந்துள்ளன. கதைகளின் முடிவில் திருப்பங்களை வலிந்து திணிக்காமல், கதையின் போக்கிலேயே இயல்பாய் முடித்திருப்பதும் பொருத்தமாக இருக்கிறது. வேதாளம் சொன்ன தேர்தல் கதை, மணலும் மணல் சரிந்த இடங்களும் என்கிற இரு கதைகளும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
குகன்
விலை: ரூ. 140
வானவில் புத்தகாலயம், சென்னை.
044-2434 2771.

ஐ.சி.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற கையோடு, நாட்டின் சுதந்திரத்துக்காக அந்தப் பதவியை உதறித் தள்ளிவிட்டு லண்டனிலிருந்து இந்தியா வந்து சுதந்திர வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் நேதாஜி. காந்திஜி மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தாலும் அவருடைய மிதவாதம் சுதந்திரத்தை எளிதில் பெற்றுத்தராது என்று நினைத்தவர். வெள்ளையர்களிடம் நாம் ஏன் கருணை காட்ட வேண்டும், அவர்கள் நமக்கு வேண்டியவர்கள் அல்ல என்ற கருத்தை காந்தியிடமே நேரில் உரைத்தவர். நேதாஜியின் வரலாற்றை எளிய நடையில் தொய்வில்லாமல் எழுதியிருக்கிறார் குகன்.

அம்புப் படுக்கையில் விவசாயிகள்
வெ. ஜீவகுமார்
விலை: ரூ. 30
என்.சி.பி.ஹெச்.,சென்னை-98
044-26251968

காவிரிப் பாசன மாவட்டங்களின் விவசாயப் பகுதிகளைப் பார்வையிடச் சென்ற அனுபவங்களைத் தொகுத்து சிறுநூலாகத் தந்துள்ளார் கவிஞரும் வழக்கறிஞருமான வெ. ஜீவகுமார். நம் நாட்டில் முதன்மை பெற்று விளங்கிய வேளாண் தொழில், ஆட்சியாளர்களின் அக்கறையில்லாச் செயல்பாடுகளாலும் வரலாறு காணாத வறட்சியாலும் இன்றைக்கு அழிந்துவரும் அவல நிலையைத் தோலுரித்துக் காட்டியுள்ளார். தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கும் உண்மையும், பின்னிணைப்பில் இணைக்கப்பட்டுள்ள தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் பெயர்ப் பட்டியலும் நம்மைக் கலங்க வைக்கின்றன.

வல்லிக்கண்ணன் தி.க.சி.க்கு எழுதிய கடிதங்கள்
தொகுப்பு: கழனியூரன்
விலை:ரூ. 275
மேன்மை வெளியீடு, சென்னை-600014
9444903558

எழுத்தாளர்கள் வல்லிக்கண்ணன் தி.க.சிவசங்கரன் இருவருக்குமான அன்பும் நட்பும் இலக்கிய உலகம் நன்கறிந்ததே. பலருக்கும் கடிதம் எழுதுவதில் கடைசிவரை சோர்வின்றி இயங்கிய வ.க.வும் தி.க.சி.யும் எழுதிக்கொண்ட பல நூறு கடிதங்களில், அந்தக் காலகட்டத்தின் அரசியல் நிலவரம், இலக்கியப் போக்குகள், திரைப்படம் என அனைத்தையும் பற்றிய பகிர்வுகள் காணக் கிடைக்கின்றன. 1979 தொடங்கி 1997 வரை 18 ஆண்டு காலத்தில் வ.க., தி.க.சி.க்கு எழுதிய 161 கடிதங்களும் பல்வேறு சுவாரசியமான செய்திகளின் கதம்பமாக உள்ளன.

செயின்ட் ஜார்ஜ் கோட்டை (ஆங்கிலேயர்கள் இந்தியாவில் காலூன்றிய கதை)

குன்றில் குமார்
விலை: ரூ. 175
சங்கர் பதிப்பகம், சென்னை - 49
044-26502086

சென்னை மாநகரின் முக்கியமான அடையாளமாகத் திகழும் புனித ஜார்ஜ் கோட்டையின் வரலாற்றை இந்தப் புத்தகம் விளக்குகிறது. இந்தியாவில் வணிக நோக்கில் நுழைந்த கிழக்கிந்திய கம்பெனியரால் அவர்களின் பாதுகாப்புக்காக 1640-ம் ஆண்டு கட்டப்பட்டதுதான் இந்தக் கோட்டை. நெசவுத் தொழிலிலும், சாயம் பூசும் தொழிலிலும் அதிக கவனம் செலுத்திய ஆங்கிலேயர்கள், இந்தத் தொழில் தெரிந்தவர்களைக் கோட்டையைச் சுற்றி அமர்த்திக்கொண்டனர். கோட்டைக்குள் இருக்கும் இடத்தை ‘வெள்ளையர் நகரம்’ என்றும், கோட்டைக்குள் வெளியே இருப்பதை ‘கறுப்பர் நகரம்’ என்றும் அழைத்தனர். இப்படி இந்தக் கோட்டையை மையமாகக் கொண்ட வரலாற்றை இந்தப் புத்தகம் விளக்குகிறது.

தொகுப்பு: சாரி, மு. முருகு, கனி

SCROLL FOR NEXT