இலக்கியம்

கூடவே பயணிக்கும் ‘வெண்முரசு’

செய்திப்பிரிவு

எவ்வளவு வேலை இருந்தாலும், படப்பிடிப்பு இருந்தாலும் புத்தகம் வாசிக்காமல் தூங்க மாட்டேன். இப்போது என் வாசிப்பை முழுக்க ஜெயமோகன் எடுத்துக்கொள்கிறார்; மகாபாரதத்தை மறுஆக்கம் செய்து அவர் எழுதிக் கொண்டிருக்கும் ‘வெண்முரசு’வுடன்தான் எனது ஒவ்வொரு நாளும் கழிகிறது.

10 ஆண்டுகள் என்ற கால அளவில், ஒவ்வொரு நாளும் ஒரு அத்தியாயம் என்று மகாபாரதத்தை நீண்ட நாவலாக ஜெயமோகன் எழுதிக்கொண்டிருக்கிறார். அவர் எழுதும் வேகத்தில் அவருக்குப் பின்னால் நம்மால் ஓட முடியுமா என்று மலைப்பாக இருக்கிறது. இருந்தாலும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் விடாமல் அவருடைய இணையதளத்தில் படித்துக்கொண்டிருக்கிறேன்.

ஜெயமோகன் அப்படியே வரிக்கு வரி மகாபாரதத்தை எழுதவில்லை. பிள்ளையார் தன் கொம்பை ஒடித்து எழுதுவதாகத்தான் மகாபாரதம் நமக்குத் தெரியும். வெண்முரசு நாவலில் மரத்தில் முட்டி ஒடிந்த யானைக்கொம்பை எடுத்து வியாசரே எழுத ஆரம்பிக்கிறார் என்று வருகிறது. இது ஒரு உதாரணம்தான்.

இன்னும் 10 ஆண்டுகளுக்கு ஜெயமோகன் என் மகாபாரதப் பசிக்குத் தீனி போடப்போகிறார். நானும் அதற்கு ஈடுகொடுத்து நிச்சயம் படிப்பேன்!

SCROLL FOR NEXT