டிஸ்டோபியன் (Dystopian) அதாவது, மோசமான உலகை வர்ணிக்கும் நாவல் என்று சொல்லப்படும் புனைவு அது. பணிப்பெண்ணின் கதை (The Handmaid’s Tale) கனடா நாட்டைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் , மார்கரேட் ஆட்வுட் 1985-ல் எழுதியது. இன்று அமெரிக்காவில் திடீரென்று அதிகமாக விற்பனை ஆகிறது.
உலகின் ஆகச் சிறந்த தாராளக் கொள்கையுடைய ஜனநாயக நாடு என்று நினைக்கப்பட்ட அமெரிக்காவில் மானுடத்துக்கு எதிரான சட்ட திட்டங்களை அறிவிக்கும், பொதுவாழ்வில் கிலியைப் பரப்பிவரும் டொனால்ட் டிரம்பின் அரசாங்கக் கெடுபிடிகளின் தாக்கத்தைக் கோடிட்டுக் காண்பிக்கும் தீர்க்கதரிசனத்தை இருபது ஆண்டுகளுக்கு முன் ஆட்வுட் வெளிப்படுத்தியிருப்பதாக இன்று நினைக்கப்படுகிறது. இலக்கிய உலகத்தில் பெரிய சலனத்தை ஏற்படுத்திய, பாராட்டைப் பெற்ற நாவல் அது.
நாவலை எழுதும் காலத்தில் மார்கரேட் ஆட்வுட் மேற்கு பெர்லினில் வசித்துவந்தார். பெர்லினைச் சுற்றிச் சுவர் இருந்தது. சோவியத் சாம்ராஜ்யம் வலுவாக இருந்த சமயம். இரும்புத் திரைக்குப் பின்னால் இருந்த சில நாடுகளுக்கு மார்கரேட் செல்லும்போது காற்றில் பீதி இருந்ததையும் ரகசிய சமிக்ஞைகளுடன் இலக்கியவாதிகள் பேசுவதையும் கண்டிருக்கிறார்.
கட்டிடங்கள் மறைவதையும் நிறுவனங்கள் அழிவதையும் சுட்டிக்காட்டுவார்கள். மின்னல்போல மாற்றம் வருவது சாத்தியம் என்று தோன்றும். இது நடக்கவே நடக்காது என்று நினைப்பது பேதமை என்று தோன்றும். எது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் நடக்கக்கூடும். இதையெல்லாம் பூடகமாகச் சொல்ல வேண்டும். எப்படிச் சொல்வது?
கனடாவில் வசித்த அவர் , ரொனால்ட் ரீகன் இரண்டாம் முறையாக மாபெரும் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பதவியேற்றவுடன், அதுவரை லிபரல் ஜனநாயகமாக இருந்த அமெரிக்கா யதேச்சாதிகார இறைமை ஆட்சிக்குத் தள்ளப்பட்டதாகச் சொல்லத் துணிந்தார். தனது பயம் மிகையானதோ என்று அவரே நினைத்தார். படிப்பவரை எப்படி நம்பவைப்பது? அது ஒரு மிகு கற்பனை என்று அவர்கள் நினைக்கக் கூடாது என்று மார்கரேட் விரும்பினார்.
நாவலின் கதைக்களம் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உள்ள மாஸசூஸட்ஸ் மாநிலத்தின் கேம்ப்ரிட்ஜ் நகரம். ஜில்லியட் குடியரசில் அரசியல் சாசனமும் பாராளுமன்றமும் இல்லாத 17-ம் நூற்றாண்டு பியூரிட்டன் மத அடிப்படைவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி (மத அடிப்படைவாதம் எப்போதுமே அமெரிக்க அரசியல் கொள்கையில் அடிநாதமாக இருந்து வருகிறது என்கிறார் மார்கரேட்). ஜில்லியட் குடியரசின் ரகசியக் கண்காணிப்புப் பணி பல்கலைக்கழக நூலகத்திலேயே செயல்படுகிறது. அதன் சுவர்களில், தவறு செய்தவர்களின் தூக்கிலிடப்பட்ட உடல்கள் தொங்கும். நாவலின் முக்கியமான கரு- சுற்றுச் சூழலில் இருக்கும் நச்சுத்தன்மையால் ஜனத்தொகை சுருங்கிவருகிறது.
ஜில்லியட் குடியரசின் ஆளுநர்கள் கர்ப்பம் தரிக்கக்கூடிய ஆரோக்கியமான பெண்களைத் தங்களின் பணிப்பெண்களாக வைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் குழந்தை பெற்றுத் தர வேண்டும். அவர்கள் கருவிகள் மட்டுமே. சொந்தம் கொண்டாட முடியாது. அவர்களுடைய உடை சிவப்பு. ரத்தத்தை அடையாளப்படுத்துவது. தவிர அவர்கள் தப்பிக்க நினைத்தால் எளிதில் அடையாளப்படுத்தக்கூடியது. மனைவிகளின் உடை நீலம். தூய்மை.
கதையின் நாயகியின் பெயர் ஆஃப்ரெட் - Offred- Fred என்ற ஆணுக்குச் சொந்தமானவள் என்று பொருள் (Offered -காணிக்கை / பலி கடா என்றும் பொருள் கொள்ளலாம்). அவள்தான் தனது அனுபவங்களைப் பதிவுசெய்கிறாள். அவள் எழுதிவைத்த குறிப்பு பின்னால் ஒரு பல்கலைக்கழகக் கருத்தரங்கில் வாசிக்கப்படுகிறது. இந்தப் புத்தகம் சாட்சியின் இலக்கியம் என்கிறார் ஆட்வுட். உண்மையான வாசகர் கனிவுடன் படிப்பார் என்பதே ரகசியப் பதிவின் எதிர்பார்ப்பு. யூதப் பெண் ஆன் ஃப்ராங்க் எழுதி வைத்த நாட்குறிப்புபோல.
பெண்ணியம் என்பதைவிட மானுட தர்மத்துக்கு நேரக் கூடிய ஆபத்தையே தான் வெளிப்படுத்தியதாக ஆட்வுட் சொல்கிறார். பெண்களும் மனமாச்சரியம் கொண்ட மனிதப் பிறவிகளே என்று சொல்லும் சேதி இது. பெண்கள் உலக வாழ்வுக்கு முக்கியமானவர்கள்; அதை உணர்ந்துதான் யுத்த காலங்களில் எதிரியின் நாட்டை அழிக்க வேண்டும் என்றால் பெண்கள் கொல்லப் படுகிறார்கள்; பாலியல் வல்லுறவுக்காளாகிறார்கள். கதை மதத்துக்கு எதிரானதும் இல்லை. மதத்தின் பெயரால் பெண்ணுக்கும் மாற்று இனத்துக்கும் வரலாற்றில் நடந்த, நடைபெறும் கொடுமைகளே தன்னை இத்தகைய புதினத்தை எழுதவைத்ததாகச் சொல்கிறார் ஆட்வுட்.
இன்றைய அமெரிக்க ஆட்சி பழைய பீதிகளைக் கிளப்பியிருக்கிறது. பெண் சுதந்திரத்துக்கான அச்சுறுத்தல், இனத் துவேஷம் பரவிவரும் சூழலில் யாராவது எங்கிருந்தாவது நடப்பதைப் பதிவுசெய்வார்கள். அவர்கள் சொல்லும் சேதி அமுக்கப்படுமா? மறைக்கப்படுமா? பல நூற்றாண்டுகள் கழித்து ஒரு புராதன வீட்டில், சுவருக்குப் பின்னால் கண்டுபிடிக்கப்படுமா? அந்த அளவுக்கு நிலைமை மோசமாகாது என்று நம்புவோம் என்கிறார் மார்கரேட்.
அப்படி நடக்கவே நடக்காது என்று நினைப்பது இப்போது எந்த நாட்டிலுமே சாத்தியமில்லை என்பதுதான் உண்மை.
வாஸந்தி, எழுத்தாளர், தொடர்புக்கு: vaasanthi.sundaram@gmail.com