இலக்கியம்

வைக்கம் முகம்மது பஷீர்: வாழ்த்துக்களைச் சுமந்து வருபவர்

சா.தேவதாஸ்

இருபதாம் நூற்றாண்டு மலையாள இலக்கிய வானில் பிரகாசித்த விடிவெள்ளி பஷீர். தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் பஷீர் நன்கறியப்பட்டவர். எம்.டி. வாசுதேவன்நாயர் உள்ளிட்ட எழுத்தாளர்களால் ஆசானாகக் கொண்டாடப்படும் பஷீரின் நகைச்சுவை பரவசப்படுத்தக் கூடியது. மற்றவர்களைக் காட்டிலும் தன்னையே பரிகசித்துக் கொள்வது தான் அவருக்கு உவப்பானது. மலையாள மொழியின் முக்கிய எழுத்தாளர்கள் பஷீரும் மாதவிக்குட்டியும்தான் என்பார் நகுலன்.

தகழி சிவசங்கரபிள்ளை, எஸ்.கே. பொற்றேகாட், கேசவதேவ் என அவர் காலத்திய சக இலக்கியவாதிகள் தீவிரமிகு தன்மையில் பிரச்சனைகளைக் கையாள, இவரோ சகலத்தையும் எண்ணி நகையாடுவதாய் எழுதிக் கொண்டிருந்தார்.

ஆனால் இவரது நகைச்சுவையும் பரிகாசமும் எண்ணமும் வளமான அனுபவங்களிலிருந்தும் பரந்துபட்ட நோக்கு நிலைகளிலிருந்தும் பிறப்பவை. பள்ளிக் காலத்திலிருந்தே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர்.

வைக்கத்திற்கு காந்தி வந்திருந்தபோது ஆசையுடன் அவரைத் தொட்டுப் பார்த்து அதனை ஓடோடிச் சென்று பரவசத்துடன் தாயிடம் பஷீர் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாட்டப்பட்டு இருந்த பகத்சிங் உருவப்படம், தன் சாயலில் இருந்ததைக் கட்சிச் செயலர் சுட்டிக் காட்டியதும், ஒரு கணம் அதிர்ந்து, பின் பகத்சிங்கின் புரட்சிகர நடவடிக்கைகளில் உத்வேகம் பெற்றவராகிவிடுகிறார். இரகசிய சங்கம் நடத்துவதும், ‘எழுச்சி’ என்னும் பெயரில் இரகசியப் பத்திரிகை நடத்துவதுமாயிருக்கிறார். சிறிது காலம் சிறைவாசம்.

ஒரு கட்டத்தில் கைதாவதிலிருந்து தப்பிக்கும் பொருட்டு நாடெல்லாம் சுற்றுகிறார். நாடு போதாதென்று கண்டங்களெல்லாம் பயனளிக்கிறார். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அரபு நாடுகள் என வலம் வருகிறார். “இந்து சன்னியாசிகளோடும், முஸ்லீம் சூபிகளுடனும், பத்திரிகை அலுவலகங்களில் ப்ரூப் அஸிஸ்ட்டண்டாகவும், ஓட்டல்காரனாகவும் சமையல்காரனாகவும், கப்பல் தொழிலாளியாகவும் கழைக்கூத்தாடியின் கையாளாகவும் டிராவலிங் ஏஜண்டாகவும் இருந்த நான் இறுதியில் மீண்டும் ஊருக்குத் திரும்பினேன்” என்கிறார்.

இந்த ஊர் சுற்றலில், அவரால் உலகின் பன்முகப்பட்ட யதார்த்தத்தைப் பார்க்க முடிந்திருக்கிறது.

அநேகமாக அவரது கதைகளெல்லாம் ஒருவித சுயசரிதைப் பாங்கானவை. அவையனைத்திலும் அவர் பரிகாசத்திற்குரிய பாத்திரமாக இருப்பார்.

மதிலுகள் குறுநாவலில் காதலை பஷீர் அரூப வடிவமாகச் சித்தரித்திருப்பார். ‘பார்கவிநிலையம்’ என்ற படத்திற்கு அவர் எழுதியுள்ள திரைக்கதை, சிறந்த திரைக்கதைக்கான முன் மாதிரியாகத் திகழ்கிறது. இக்கதைக்கு அடிப்படையானது ‘நீலவெளிச்சம்’ என்னும் சிறுகதை. அமானுஷ்ய நிகழ்வுகளால் சொல்லப்பட்டிருக்கும் அச்சிறுகதை.

ஒரு கட்டத்தில் மனம் பிறழ்ந்து சிகிச்சை பெற்று மீண்டு வந்தவர் பஷீர். இது பற்றி, “சின்ன வயதில் ஒரு நடிகர் வீட்டுக்கு போயிருந்த போது அவர் கட்டாயப்படுத்தியதில் முதன் முதலாகக் கள் குடித்தேன். பிறகு கராச்சிக்குச் சென்ற சமயத்தில் இந்தப் பழக்கம் தொடர்ந்தது. சில வருடங்களில் எர்ணாகுளத்துக்கு வந்து ஒரு புத்தகக் கடையைத் தொடங்கினேன். தினமும் நண்பர்கள் வந்து சேர்ந்து கொண்டதில் நிறைய குடிக்கத் தொடங்கினேன்.

குடியோடு புகைப்பிடிப்பதும் அதிகமாயிற்று. இறுதியில் குடிநோயாளி ஆனேன். குடி, மனிதனுள் குழப்பம் - என்கிற கதவைத் திறந்து விட்டு தெளிவை வெளியே தள்ளிவிடுகிறது என்பதைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள முடிந்ததும் அப்பழக்கத்தை நிறுத்தப் படாதபாடு பட்டேன்” என்கிறார்.

சுதந்திரப் போராட்டத் தியாகிக்கான தாமிரப் பட்டயம், சாகித்ய அகாடமி பரிசுகள் என ஏராளமாய் வாங்கியுள்ள பஷீர், அவற்றையும் வேடிக்கை செய்வார். ஒருநாள் காலையில் தாமிரப்பட்டயத்தைத் தூசி தட்டிக்கொண்டிருக்கும்போது, அப்போது பார்த்து ஊளையிடும் நரிமீது அந்தப் பட்டயத்தை எறிந்துவிடுகிறார். சாகித்திய அகாடமி பட்டயத் தகடால் அடிபட்ட நரி என்று அதற்குப் பெருமை என்றும் கிண்டல் செய்கிறார்.

ஏறக்குறைய உலகமெலாம் சுற்றிவந்துள்ள பஷீருக்குக் கடைசியாக ஒரு ஆசை இருந்தது. “அனைத்துக் கோளங்களையும் எல்லாம் பிரபஞ்சங்களையும் நான் ஒரு தடவை சுற்றிப்பார்க்கவேண்டும்.” என்று நினைத்தார்.

பஷீர் என்றால் வாழ்த்துக் களைச் சுமந்து வருபவன் என்று பொருள். “பாரதத்தின் ஒவ்வொரு நகரங்களிலும் எத்தனையெத்தனை ஆண்டுகள் சுற்றித் திரிந்து, எல்லா மக்களுடனும் சேர்ந்து எங்கெல்லாமோ தங்கியிருக்கிறேன். எனது இரத்தமும் எனது மாமிசமும் எனது எலும்பும் இந்த பாரதத்திற்குரியது. ஒவ்வொருவரையும் தழுவியபடியே என் அன்பு அப்படியே வியாபித்துப் பறக்கட்டும். பாரதத்தைக் கடந்தும் உலகைக் கடந்தும் சுகந்தம் வீசும் வெண்நிலவுபோல்…”

இந்திய விடுதலைவரையிலும் காதி அணிந்துவந்த பஷீர், அதற்குப் பிறகு காங்கிரசின் போலித்தனங்களைப் பார்த்துவிட்டு காதி அணிவதை நிறுத்திவிட்டார்.

SCROLL FOR NEXT