விழாவில், ‘இந்து ராஷ்டிரக் கனவுகள்’ என்ற அமர்வில் பத்திரிகையாளர்கள் அக்ஷய முகுல், சயீத் நக்வி இருவரும் ‘கஸ்தூரி அண்ட் சன்ஸ்’ தலைவர் என்.ராமுடன் கலந்துரையாடினர். “இந்தியாவில் இந்து ராஷ்டிரம் அமைக்க வேண்டும் என்ற வலதுசாரிகளின் வேட்கை நிறைவேறாது. மக்கள் அதற்கு எதிராகத் திரளுவார்கள்” என்ற கருத்தை ஒட்டியே இருவரும் பேசினர். அவர்கள் மேலும் பேசியது:
“இந்து ராஷ்டிரத்துக்கான வேட்கைக்குப் பல பரிமாணங்கள் உண்டு, அவை தொடரும், நமக்கு இடையூறுகளை ஏற்படுத்தும்; நமக்கேயுரிய அந்தஸ்துடன் பெரிய நாடாக நாம் உருவாவதற்கு அவை தடையாக இருக்கும். பாஜக கட்சியும் அரசும் சர்வாதிகார முறையில்தான் நடத்தப்படுகின்றன; இரண்டு அல்லது மூன்று பேர்தான் கட்சியையும் ஆட்சியையும் நிர்வகிக்கின்றனர். மற்ற யாருக்கும் என்ன நடக்கிறது என்று எதுவும் தெரியாது. அடுத்த சில மாதங்களில் இந்தியாவின் சில மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல்கள் இதற்கான விடையைச் சொல்லும். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். அதற்குள் நம்பிக்கையை இழந்துவிட வேண்டாம்!” என்றார்கள் அக்ஷய முகுல், சயீத் நக்வி இருவரும்.