ஈழக்கவிஞர் வ.ஐ.ச. ஜெய பாலனுக்குத் தமிழகத்தில் பரவலாக அங்கீகாரம் கொடுத்தது அவருடைய இரண்டாவது கவிதைத் தொகுதியான ‘நமக்கென்று ஒரு புல் வெளி’. கால்நூற்றாண்டு கடந்த பிறகு வெளிவந்திருக்கிறது அவ ருடைய கவிதைத் தொகுப்பான, ‘குறுந்தொகை’.
பாரதியாரின் தாக்கம் தன் கவிதைகளில் பிரதிபலிப்பதுதான் தன் பலமும் , பலவீனமும் எனக் குறிப்பிடும் கவிஞர், ஐந் திணைகளுக்குப் பயணப்படு வதுதான் அதில் இருந்து மீள ஒரே வழி என்று சொல்கிறார். அப்படிப் பயணப்பட்டதன் விளைவாக உதித்த கவிதைகள் இவை. வாழ்வு சார்ந்த எல்லாவற்றிலும் பெண்களுக்கு மட்டுமே தென்படுகிற வாழ்வின் முழுமையை அவர்கள் துணையுடன் தேடும் முயற்சியே அவருடைய இளமைமாறா மனநிலைக்கும் கவிதைகளுக்கும் காரணமாக இருக்கிறது.
குறிஞ்சி நிலத்தில் ஒளிரும் செல்பேசியும், பெண்களின் கூந்தலுக்காகப் பூக்கும் முல்லைகளும், வீர விந்துகள் சிறையில் இருக்கும் மருதநிலமும், கரைமாறும் கடல்மாறும் என நெய்தல் தலைவியை ஆற்றுப்படுத்தும் தோழியும், காதலிலும் இருளிலும் ஆண் பெண்ணன்றி சாதி ஏதென மேடை உடைத்து அதிரும் பாலைப்பறையும் படிக்கப் படிக்க நம்மையும் அந்தந்த நிலங்களுக்கே அழைத்துச் செல்கின்றன.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய கவிதைகள், இணையத்தொடர்பு வரை வளர்ந்திருக்கின்றன. வெடிச் சத்தங்கள் ஓய்கிறபோதெல்லாம் பாடிய பறவைகளும், துயர் ப்பாறையின் கீழ் நசிந்தபோதிலும் துளிர்க்கும் மனப்புல்லும், கான்கிரீட் காடுகளுக்கு மத்தியில் முட்டையிட கரையேறும் தாய் ஆமையும் வாழ்க்கை மீதான நம்பிக்கையை விதைத்துச் செல்கின்றன. .