புத்தகக் காதலர்களின் பெருவிழாவான ‘சென்னை புத்தகக் காட்சி-2017’ வியாழனுடன் நிறைவடைந்தது. தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் சார்பில், சென்னை அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளியில் (பச்சையப்பா கல்லூரி எதிரில்) ஜனவரி 7 தொடங்கி நேற்று வரை 13 நாட்கள் நடந்த 40-வது புத்தகக் காட்சி பதிப்பாளர்கள், வாசகர்கள், விற்பனையாளர்கள் என்று பலதரப்பினருக்கும் பலன் தந்தது என்றே சொல்ல வேண்டும்.
பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த புத்தகக் காட்சி வளாகத்தில் 700-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் ஊடகங்களும் பங்கேற்றன. ஏறத்தாழ 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் 5 கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்களும், கல்வி தொடர்பான குறுந்தகடுகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இரண்டு ஏ.டி.எம்-கள், மருத்துவ உதவிக்காக ஆம்புலன்ஸ் வசதி, விசாலமான வாகன நிறுத்தம் ஆகிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. புத்தகக் காட்சியின் அரங்குகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்குத் தனிச் செயலி போன்ற புதுமைகளும் இடம்பெற்றன. இந்த அறிவுலகக் கொண்டாட்டத்துக்குச் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்திருந்தனர். 2015-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கூட்டம், விற்பனை இரண்டுமே சுமார் 80% அளவுக்கே இருந்தது என்றாலும், 2015 சென்னை பெருமழை வெள்ளம், பணமதிப்பு நீக்கம், வார்தா புயல் ஆகிய பாதிப்புகளையும், இடையில் ஒரு புத்தகக் காட்சி ஜூன் மாதம் நடத்தப்பட்டதையும் கணக்கில் கொண்டு பார்க்கும்போது, இந்தப் புத்தகக் காட்சி ஓரளவு வெற்றி பெற்றது என்றே சொல்ல வேண்டும்.
“ஆறு மாதங்களுக்கு முன்புதான் ஒரு புத்தகக் காட்சி நடத்தியிருக்கிறோம் என்பதால், ஆரம்பத்தில் இந்தப் புத்தகக் காட்சியைப் பற்றி எங்களுக்குத் தயக்கம் இருக்கத்தான் செய்தது. தீவுத்திடலிலிருந்து பழைய மாதிரியே இந்த ஆங்கிலோ-இந்தியப் பள்ளிக்குப் புத்தகக் காட்சியை மாற்றினோம். தற்போது பார்க்கும்போது இந்த இடமாற்றம் வெற்றியையே அளித்திருக்கிறது என்று தோன்றுகிறது. புத்தகக் காட்சி வளாகத்துக்கு வெளியே இன்னும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் முடியவில்லை என்றாலும், இதுபோன்ற பல்வேறு சவால்களை ‘பபாசி’எதிர்கொண்டு வெற்றிகரமாகவே இந்தப் புத்தகக் காட்சியை நடத்திமுடித்திருக்கிறது. பணமதிப்பு நீக்கத்தால் சற்றே பாதிப்பு இருந்தாலும் டோக்கன் முறை, ஸ்வைப்பிங் இயந்திரம், ஏ.டி.எம். உள்ளிட்ட பல வசதிகளை பபாசி ஏற்படுத்தியிருந்ததால், பிரச்சினைகளைப் பெருமளவு சமாளிக்க முடிந்தது. மக்களும் பணமில்லா வர்த்தகத்துக்கு ஓரளவு பழகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை விற்பனையை வைத்து உணர்ந்துகொள்ள முடிந்தது. கிட்டத்தட்ட 70% விற்பனை அட்டைகள் மூலமாக நடைபெற்றது. இதுதான் எதிர்காலத்திலும் தொடரும் என்பதை உணர்ந்து புத்தக விற்பனையாளர்களும் செயல்பட வேண்டும். ரூ.15 கோடிக்கு அதிகமாகப் புத்தகங்கள் விற்பனை ஆகியிருக்கின்றன. ஆறு மாதங்களுக்குள் நடந்த இந்தப் புத்தகக் காட்சியின் வெற்றி, சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் மூன்று புத்தகக் காட்சிகளை நடத்த முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையின்
மூன்று வெவ்வேறு இடங்களில் அப்படி நடத்தலாமா என்ற ஆலோசனையில் இருக்கிறோம். எனினும், புத்தகக் காட்சிக்கு நிரந்தர இடம் என்று எதுவும் இல்லாதது, புரவலர்களைப் பிடிப்பது என்ற பிரச்சினைகள் நம் முன்னே பூதாகாரமாக நிற்கின்றன. நிரந்தர இடம், புத்தகக் காட்சிக்காக அரசிடமிருந்து நிதியுதவி போன்றவை கிடைத்தால் தயக்கமில்லாமல் 3 புத்தகக் காட்சிகளை நடத்திவிடுவோம். கழிப்பிடப் பிரச்சினை, நெட்வொர்க் பிரச்சினை போன்றவை குறித்து ஒவ்வொரு புத்தகக் காட்சியிலும் சுட்டிக்காட்டப்படுகிறது. நிரந்தர இடம் கிடைத்தால் இதுபோன்ற பிரச்சினைகளை முற்றிலுமாகச் சரிசெய்துவிட முடியும்” என்று தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்தின் செயலாளர் க.சு.புகழேந்தி குறிப்பிட்டார்.
சென்னையின் தனித்துவமான அடையாளங்களுள் புத்தகக் காட்சியும் ஒன்று என்பதை தற்போது நிறைவடைந்திருக்கும் புத்தகக் காட்சியும் நிரூபித்திருக்கிறது. இனிமேல் சென்னை ஒவ்வொரு ஆண்டும் மூன்று புத்தகக் காட்சிகளைக் காணவிருக்கிறது. ஒவ்வொரு புத்தகக் காட்சியையும் வாசகர்கள் முன்னுதாரணமான புத்தகக் காட்சியாக ஆக்குவார்கள் என்ற நம்பிக்கைதான் புத்தக உலகை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது அல்லவா!-