புத்தக சேனல் தொடக்கம்
புத்தகத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான சிந்தனை அரங்கம் தினமும் மாலை 6 மணிக்குத் தொடங்குகிறது. இதில் ஐ.ஏ.எஸ். அதிகாரி த. உதயச்சந்திரன், திரையுலகைச் சேர்ந்த நடிகர் சிவக்குமார், கே. பாக்யராஜ், இயக்குநர் வெற்றிமாறன், எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், நா. ஆண்டியப்பன், சொற்பொழிவாளர்கள் நெல்லை கண்ணன், இலங்கை ஜெயராஜ் மற்றும் பத்திரிகை, மின்ஊடக ஆசிரியர்கள் பங்கேற்றுப் பேசுகின்றனர். அத்தனை நிகழ்ச்சிகளிலும் வாசகர்கள் பங்கேற்க நேரம் போதாது என்பதால், உள்ளூர், வெளியூர் வாசகர்களின் வசதிக்காக இணைய வழி சிறப்பு சேனல் தொடங்கப்பட்டுள்ளது. தொடக்க நிகழ்ச்சி முதல் நிறைவு நாள் வரையில் பதிவுசெய்யப்பட்ட நிகழ்ச்சிகளை என்ற www.youtube.com/makkalsinthanaiperavaierode இணைய சேனல் வாயிலாக உலகம் முழுவதிலும் இருந்து பார்க்க முடியும்.
பதிப்பாளர்களுக்கு மரியாதை
எழுத்தாளர்களை மட்டுமல்லாமல் பதிப்பாளர்களையும் இந்தப் புத்தகக் காட்சி கவுரவிக்கிறது. மிக மூத்த பதிப்பக நிர்வாகிகளான அருணன் (அருணோதயம் பதிப்பகம்), வெள்ளையாம்பட்டு சுந்தரம் (சேகர் பதிப்பகம்), வே. சுப்பையா (பூங்கொடி பதிப்பகம்), கரு. ராமனாதன் (ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்), முத்துக்குமாரசாமி (சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்) ஆகியோர் இந்தப் புத்தகத் திருவிழாவில் கவுரவிக்கப்படுகின்றனர். இந்த நிகழ்ச்சி 10-ம் தேதி (புதன்கிழமை) நடக்கிறது.
20 ஆயிரம் வீட்டு நூலகம்!
2009-ம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் ‘வீட்டுக்கு ஒரு நூலகம்’ என்ற தலைப்பில் உரையாற்றினார் அப்துல் கலாம். அவரது கனவை நனவாக்குதன் முதல்படியாக 7-ம் தேதியன்று, ‘வாசிப்போம் சுவாசிப்போம்’ என்ற தலைப்பில் புத்தக வாசிப்பைத் தூண்டுகிற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், 20 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் ஒன்றுதிரண்டு புத்தகங்களை வாசிப்பதுடன், ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் சிறிய நூலகத்தை உருவாக்குவதென உறுதிமொழி ஏற்கின்றனர். அந்த நூலகத்துக்கு முதல் நூலாக திருக்குறளை வாங்கும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப் பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை
இலங்கைத் தமிழறிஞர் ஆறுமுக நாவலர் நினைவாக அமைக்கப்பட்டுள்ள ‘உலகத் தமிழர் படைப்பரங்கம்' என்ற அரங்கில், வெளிநாட்டுத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. ஈரோடு மாவட்ட எழுத்தாளர்களின் படைப்புகளுக்கும் ஒரு தனி அரங்கு உண்டு!
கண்டுபிடிப்பாளருக்கு ஜி.டி.நாயுடு விருது
தமிழகத்தின் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பாளர் ஒருவரை ஊக்கப்படுத்தும் வகையில், இந்த ஆண்டு முதல் அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது வழங்கப்பட உள்ளது. ஏற்கெனவே இதுகுறித்த அறிவிப்பு வெளியாகிவிட்டதால், தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான ஆய்வாளர்களும் கண்டுபிடிப்பாளர்களும் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் சிறப்பான ஒருவரைத் தேர்வு செய்து புத்தகத் திருவிழாவின் நிறைவுநாளான 16-ம் தேதி விருது வழங்கப்பட உள்ளது. 1 லட்சம் ரொக்கம் மற்றும் விருதுக்கான சான்றிதழை வழங்கி கவுரவிக்க இருப்பவர் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை என்பது இன்னும் சிறப்பு.
அரங்கு எண் 22-ல் ‘தி இந்து’
ஈரோடு புத்தகத் திருவிழாவின் மற்றொரு சிறப்பம்சம் ‘தி இந்து’ அரங்கு. இங்கு ஏற்கெனவே வாசகர்களின் அமோக ஆதரவைப் பெற்ற தமிழ், ஆங்கில நூல்களுடன் தற்போது புதிதாக வெளியாகியுள்ள ‘ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு’, ‘காற்றில் கலந்த இசை’, ‘தொழில் கலாச்சாரம்’, ‘தொழில் ரகசியம்’, ‘ஸ்ரீராமானுஜர் 1000’, ‘ஆனந்தஜோதி சிறப்பு மலர்’ போன்ற புத்தகங்களும் கிடைக்கின்றன. அனைத்துப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு. அதேபோல, குழந்தைகளின் வரவேற்பைப் பெற்ற ‘யங் வேர்ல்டு’, ஒலிம்பிக் சிறப்புக் கட்டுரைகளுடன் கூடிய ‘ஸ்போர்ட்ஸ் ஸ்டார்’, அரசியல், சமூக பிரச்சினைகளை அலசி ஆராயும் ‘பிரண்ட்லைன்’ ஆகியவற்றை அஞ்சலில் பெறுவதற்கும் ‘தி இந்து’ அரங்கில் முன்பதிவு செய்யப்படுகிறது. இதற்கு காசோலை அவசியம் என்பதால், வாசகர்கள் காசோலைப் புத்தகத்துடன் வருவது நல்லது.
தொகுப்பு: எஸ்.கோவிந்தராஜ், கா.சு.வேலாயுதன், கே.கே.மகேஷ்