சுஜாதா மறைந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ரசனையும் நுண்ணிய அறிவும் நகைச்சுவை உணர்வும் கொண்ட பக்கத்து வீட்டு அண்ணன் ஒருவர் வீட்டைக் காலி செய்துவிட்டு எங்கோ சென்றுவிட்டது போல் இருக்கிறது. தான் எழுதிய கதைகள், கட்டுரைகள், நாவல்கள் எல்லாவற்றிலும் நம்மிடம் நேரடியாக அவர் உரையாடியது தான் அவருடனான இந்த நெருக்கத்துக்குக் காரணமாக இருக்க வேண்டும். வெகுஜன இதழ்களுக்கும் தீவிர இலக்கிய உலகுக்கும் இடையே இருந்த ஒரு தடையை இலகுவாக உடைத்ததுடன், புதிய எழுத்தாளர்களைப் பரவலான வாசகர்களிடம் கொண்டுசென்றார்.
பல சிறுகதைகள் உயர்மட்ட மனிதர்களின் வாழ்வின் பின்னணியைச் சொன்னாலும் ஒரு ரயில் சினேகிதனிடம் சொல்லும் பாவனையில் வாசகனிடம் எளிய மொழியில் அதைச் சொல்வார். குமுதம் வார இதழின் ஆசிரியராக இருந்தபோது வெகுஜன வாசகர்களுக்குப் பல புதிய விஷயங்களை அறிமுகப்படுத்த முயன்றார். அறிவியல் தொடர்பான அவரது கட்டுரைகள் அவற்றின் தொழில்நுட்ப நுணுக்கங்களுக்காக மட்டுமல்லாமல் மக்களின் பயன்பாட்டில் அவற்றின் பங்கு என்ன என்று விரிவாகப் பேசியதால் வரவேற்பைப் பெற்றன. தமிழ்நாட்டில் ஒரு காலகட்டத்தில் அபூர்வமான துறையாக இருந்த கணிப்பொறித் தொழில்நுட்பத்தை எளிய தமிழில் அறிமுகப்படுத்தி ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின் வாழ்வாதாரமாகவே கணிப்பொறியை மாற்றியதில் அவரது பங்களிப்பு பெரியது.
தமிழின் சிறந்த பத்தி எழுத்தாளர் அவர்தான். கதைகளிலும் கட்டுரைகளிலும் விளிம்பு நிலை மக்கள் மீதான அவரது அக்கறையும் வெளிப்பட்டது. ‘நகரம்’ சிறுகதை ஒரு உதாரணம். ‘விக்ரம்’ படத்தின் டைட்டில் பாடல் காட்சியின் படமாக்கலின்போது நவீன பாணி உடையணிந்த ஒரு துணை நடிகை தன் வறுமை நிலை குறித்துச் சக நடிகருடன் பேசிக்கொண்டதைத் தனது கட்டுரையில் பதிவு செய்திருந்தார்.
திரைக்கதை ஆசிரியராக, வசனகர்த்தாவாக, தயாரிப்பாளராக சினிமாவில் அவரது பங்கு மறக்க முடியாதது. இளைஞர்களின் வாழ்வைத் தொடர்ந்து கவனித்து எழுதிவந்த சுஜாதா, சினிமாவிலும் அதை சுவாரஸ்யமாகப் பயன்படுத்தினார். பாலச்சந்தருடன் இணைந்து அவர் தந்த ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் இருந்த 70களின் இளமைக் கொண்டாட்டம் ‘பாய்ஸ்’ படத்திலும் நின்று விளையாடியது. அதனால்தான் அப்துல் கலாம் தனது கல்லூரித் தோழர் என்று சுஜாதா எழுதியபோது அதை நம்புவதற்குக் காலம் பிடித்தது.