தி இந்து நாடகத் திருவிழாவில் நடக்கவிருக்கும் முதல் தமிழ் நாடகம் ‘ஆயித்தியொரு இரவுகள்’. ஆகஸ்ட் 26 அன்று நடைபெற உள்ள இந்நாடகத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வினோதினி வைத்தியநாதன். கடந்த ஆண்டு நடைபெற்ற ‘தி இந்து நாடகத் திருவிழா’விலும் இவருடைய ‘நாகர்கோயில் எக்ஸ்பிரஸும் நாடகக் கம்பெனியும்’ என்ற நாடகம் இடம்பெற்றிருந்தது.
‘அரேபிய இரவுகள்’ கதைகளை நாடகமாக்க வேண்டும் என்ற முடிவுசெய்ததும், அதைப் போன்ற புகழ்பெற்ற ஆசிய கதைகளையும் அதனுடன் இணைப்பதைப் பற்றித் தொடர்ந்து சிந்தனை செய்துவந்திருக்கிறார் வினோதினி. “‘ஆயித்தியொரு இரவுகள்’ நாடகத்தை எழுதுவதற்காகப் பல விதமாக எழுதப்பட்டிருக்கும் ‘அரேபிய இரவுகள்’ கதைகளைப் படித்தேன். சமீபத்தில் நடைபெற்ற சென்னைப் புத்தகக் காட்சியில், இந்த அரேபிய கதைகளின் பல பதிப்புகளை வாங்கிவந்தேன். அது மட்டுமல்லாமல் தெனாலி ராமன், அக்பர் பிர்பால், அலாவுதீன், அலிபாபா, பஞ்சதந்திர கதைகள் போன்றவற்றையும் இந்த நாடகத்தில் பயன்படுத்த முடிவெடுத்தேன். இந்தக் கதைகளை எல்லாம் பின்னணியாக வைத்து என்னுடைய பாணியில், ஒரு புதுமையான சோதனை முயற்சியாக இந்நாடகத்தை இயக்கியிருக்கிறேன்” என்கிறார் வினோதினி. கூத்துப் பட்டறையில் ந. முத்துசாமியிடம் பணியாற்றியிருக்கும் இவர், தன்னுடைய ‘தியேட்டர் ஜீரோ’ நிறுவனத்தின் சார்பாக இந்த நாடகத்தை உருவாக்கியிருக்கிறார்.
இந்நாடகத்தில் பாலின அரசியலை நையாண்டியுடன் கையாண்டிருக்கும் இவர், அது சமகாலத்தின் பிரதிபலிப்பாக இருக்கும்படியும் பார்த்துக்கொண்டிருக்கிறார். “அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை ஆண்-பெண் உறவில் இருக்கும் வன்மம், பழிவாங்கும் உணர்வு போன்றவை எப்படித் தொடர்ந்து வருகிறது என்பதை நையாண்டியுடன் இந்நாடகத்தில் விளக்க முயன்றிருக்கிறேன்” என்கிறார் அவர்.
இந்நாடகத்தின் இன்னொரு சிறப்பாக, பின்னணி இசையையும் பாடல்களையும் சொல்லலாம். நாடகத்தில் இடம்பெறும் ஒன்பது பாடல்களையும் வினோதினியே எழுதியிருக்கிறார். “இந்நாடகத்தில் பின்னணி இசைக் கலைஞரான நிஷாந்த்தைப் புதுமையாகப் பயன்படுத்தியிருக்கிறோம். அத்துடன், பெரும்பாலான பாடல்களை மேடையிலேயே ‘லைவ்’வாகப் பதிவுசெய்யவிருக்கிறோம்” என்கிறார் விநோதினி.
‘ஆயிரத்தியொரு இரவுகள்’ நாடகத்தை மேடையில் கொண்டுவர பெரிய பட்ஜெட் தேவைப்படும் என்று பலரும் நினைப்போம். ஆனால், அப்படி எதுவும் இல்லாமல் ‘மறுசுழற்சி’ என்னும் மந்திரத்தை நாடகத்தின் பிரம்மாண்ட பொருட்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறது ‘தியேட்டர் ஜீரோ’ நாடகக் குழு. “இந்த நாடகத்தை முழுமையான ஒரு சோதனை முயற்சி என்று சொல்லலாம். ஏனென்றால், ஒரு அரசப் பின்னணியைக் கொண்ட நாடகத்துக்குத் தேவைப்படும் பொருட்களை அப்படியே கொண்டுவர வேண்டும் என்று நினைத்தால் அதற்கு நிறையச் செலவாகும். ஆனால், என்னுடைய ஆசிரியர் முத்துசாமி, ஒரு நாடகப் பார்வையாளனைத் திருப்திப்படுத்த உடல் மொழிதான் முக்கியம் என்று அடிக்கடி சொல்வார். அவர் சொல்வதைப் போல, அந்த உடல் மொழி சரியாக அமைந்துவிட்டால், மூன்று நடிகர்கள் சேர்ந்து தத்ரூபமாக ஒரு கப்பலை மேடைக்குக் கொண்டுவந்துவிட முடியும். அதைத்தான், இந்தநாடகத்தில் முயற்சிசெய்து பார்த்திருக்கிறேன். உதாரணமாக, ஒரு சாதாரண துடைப்பான் கொம்பு (Mop stick) இந்நாடகத்தில் பல அவதாரங்கள் எடுப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்” என்கிறார் வினோதினி.
‘தி இந்து தியேட்டர் ஃபெஸ்ட்’ நாடகங்களைப் பார்க்க நுழைவுச்சீட்டுகளுக்கு - thehindu.com/tickets2016
மேலும் தகவல்களுக்கு: thehindu.com/theatrefest