இலக்கியம்

நூல் நோக்கு: மதப் புரட்சியாளர் வரலாறு

செய்திப்பிரிவு

மகான் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டைச் சிறப்பிக்கும் வண்ணம் இந்த நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. இறைவனுக்கு முன்னால் மக்கள் அனைவரும் சமமானவர்களே; மேல் கீழ் என்னும் வேற்றுமை இல்லை; இறை வழிபாட்டுரிமை எல்லோர்க்கும் உண்டு; முக்தி ஒருசிலருக்கு மட்டும் அல்ல, அனைவருக்குமானது என்று உரைத்த ராமானுஜரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களை அழகான முறையில் தொடராகத் தொகுத்து அளித்துள்ளனர். மணிப்பிரவாள நடை இருந்தாலும் உறுத்தாத பாணியில் அமைந்திருக்கிறது.

ராமானுஜரின் பிறப்பு, யாதவப் பிரகாசரிடம் கல்வி பயின்றது, ராஜகுமாரியைக் குணப்படுத்துவது, ஆளவந்தாரால் திருவரங்கத்துக்குச் சென்றது, ஆசாரியரின் தம்பி சைவத்துக்கு மாறியது, திருக்கோட்டியூர் நம்பிகளிடம் எட்டெழுத்து மந்திர உபதேசம் பெற்றது, அரங்கரின் தொண்டில் தன்னைக் கரைத்துக்கொண்டது, ஸ்ரீ பாஷ்யம் சாதித்தது, திக்விஜயம் மேற்கொண்டது என்று விரிகிறது நூல். 1960-களிலேயே வெளியிடப்பட்ட இந்நூல் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு பொருத்தமான தருணத்தில் மறுபதிப்பு கண்டிருக்கிறது.

-சாரி

SCROLL FOR NEXT