வரலாறு என்னை விடுதலை செய்யும் - தீர்க்கதரிசனமான இந்த வார்த்தைகளை ஃபிடல் காஸ்ட்ரோ உதிர்த்தபோது, 1953-ல் மன்கடா படைத்தளத்துக்கு எதிரான தாக்குதலில் தோல்வியடைந்ததன் காரணமாக தேசத் துரோகக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருந்தார். விசாரணையின்போது தன் தரப்பை நீண்ட வாதமாக முன்வைத்தார். வாதத்தின் இறுதியில் அவர் உதிர்த்த வார்த்தைகளே மேற்கண்டவை.
வழக்கில் 15 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மக்கள் எதிர்ப்பால் இரண்டே ஆண்டுகளில் விடுதலையானார். மெக்ஸிகோ சென்று ஒன்றரை ஆண்டுகளில் மீண்டும் புரட்சிப் படையைத் தயார் செய்துகொண்டு கியூப அரசு மீது தாக்குதல் தொடுத்தார். ஃபிடல் வென்றார். மக்கள் அவர் பக்கம் நின்றனர். மக்களின் விடுதலைக்காக உளப்பூர்வமாகவும் மனஉறுதியுடனும் போராடும் ஒருவரால் மட்டுமே ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ என்ற வார்த்தைகளைச் சொல்ல முடியும். புகழ்பெற்ற இந்த உரையை 1983-லேயே மொழிபெயர்த்து வெளியிட்டவர் வீ.பா. கணேசன். காஸ்ட்ரோவின் மறைவையடுத்து ஒன்பது முறையாக மறுபதிப்பு காணும் இந்தப் புத்தகத்தில் காஸ்ட்ரோவின் கால வரிசை வாழ்க்கைக் குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளது சிறப்பு.
வரலாறு என்னை விடுதலை செய்யும்,
ஃபிடல் காஸ்ட்ரோ, தமிழில்: வீ.பா. கணேசன்
பாரதி புத்தகாலயம் வெளியீடு
விலை: ரூ. 70
044-24332924