புகழ்பெற்ற தலித் கவிஞரும் மும்பையில் தலித் பேந்தர்ஸ் (சிறுத்தைகள்) என்னும் அமைப்பின் தலைவருமான நாம்தேவ் தாசல் (64) புதன்கிழமை காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் அந்நோயுடனான நீண்டகாலப் போராட்டத்தை அடுத்து மும்பை மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.
1949இல் மகாராஷ்டிரத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர் நாம்தேவ் தாசல். இளமைக் காலத்தை டாக்ஸி ஓட்டுநராக திருடர்கள், பாலியல் தொழிலாளர்கள், புரோக்கர்கள், போதைப் பொருள் விற்பவர்கள் மத்தியில் மும்பை நகரத்தின் கருப்புப் பகுதிகளில் கழித்தவர். 1972இல் கருப்பின விடுதலைக்கான ப்ளாக் பாந்தர்ஸ் அமைப்பின் பாதிப்பில் தலித் பேந்தர்ஸ் அமைப்பை மும்பையில் தொடங்கினார்.
அதே ஆண்டில் ‘கோல் பிதா’ என்ற அவரின் கவிதைத் தொகுப்பு வெளியானது. தன் வாழ்நாளில் மொத்தம் 8 கவிதைத் தொகுப்புகளை வெளியிட்ட அவருக்கு 2004ல் சாகித்ய அகாடமியின் வாழ்நாள் சாதனைக்கான விருது வழங்கப்பட்டது. இறுதிக் காலங்களில் அவரது அரசியல் முடிவுகள் கடும் விமர்சனத்துக்குள்ளாயின.
தலித் இலக்கியத்தின், எதிர்ப்பு இலக்கியத்தின், கருப்பு இலக்கியத்தின், உயிரோட்டமான இலக்கியத்தின் மிக முக்கியமான கலகக் குரல் நாம்தேவ் தாசல்.