தற்போதைய இளைஞர்கள் எதிலும் பார்வையாளர்களாக மட்டுமே இருப்பதில்லை. இளைஞர்கள், பங்கேற்பாளர்களாகவும் முன்னெடுப்பாளர்களாகவும் மாறித் தீவிரமாகச் செயல்படும் காலம் இது. அப்படிப்பட்ட சில இளைஞர்களால் தொடங்கப்பட்டதுதான் ‘வாசக சாலை’ என்னும் அமைப்பு. இந்த அமைப்பு சென்னை மாவட்ட நூலக அலுவலரின் அனுமதி பெற்று, வாரா வாரம் செவ்வாய்க்கிழமை தோறும் அசோக் நகர் வட்டார நூலகத்தில் நாவல் அறிமுகக் கூட்டங்களை நடத்துகிறது.
ஞாயிறுதோறும் கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘தமிழ்ச் சிறுகதைகளின் நூற்றாண்டு விழா’வைச் சிறப்பிக்கும் சிறுகதை கலந்துரையாடல் நிகழ்வுகளையும் வாசகர் பங்களிப்புடன் இவர்கள் வெற்றிகரமாய் நடத்திவருகிறார்கள்.
“வாசிப்பில் ஆர்வமுடைய நண்பர்களை ஒன்றிணைத்து அது பற்றிய தொடர் உரையாடலை முன்னெடுக்கும் விதமாக பாஸ்கர் ராஜா, பார்த்திபன் ஆகிய இரு நண்பர்களால் 2012-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் 'வாசகசாலை' என்னும் ஃபேஸ்புக் குழு உருவாக்கப்பட்டது. இந்தக் குழுவானது தமிழ் இலக்கியத்தை வெறும் கணினித் திரைகளில் வாசிக்கச் செய்வதோடு ஓய்ந்துவிடக் கூடாது; மாறாக நேரடிக் களத்தில் இறங்கி, இலக்கிய நிகழ்வுகளையும் நடத்தும் ஓர் அமைப்பாக உருப்பெற வேண்டும் என்று நினைத்தோம்.
அதன் செயல்வடிவமாக 2014 டிசம்பர் 14-ம் தேதியன்று திருவான்மியூர் ‘பனுவல்’ நூல் நிலையச் சிற்றரங்கில் '7.83 ஹெர்ட்ஸ்' என்ற அறிவியல் நாவலுக்கான கலந்துரையாடலை முதலில் நடத்தினோம். முதல் நிகழ்விலேயே அரங்கு நிறைந்த கூட்டத்தைக் கண்டு மிகுந்த ஊக்கம் பெற்றோம்” என்றார் இந்த அமைப்பைச் சேர்ந்த அருண்.
இந்த வாசகசாலைக் கூட்டங்களைப் பொறுத்தவரை படைப்பாளிதான் பிரதான விருந்தினர். வாசக சாலையைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர் தொடக்க உரை நிகழ்த்தி நூலையும் ஆசிரியரையும் அறிமுகப்படுத்த, வாசகர் பார்வையில் ஓர் ஆண், ஒரு பெண் வாசகர் உரை நிகழ்த்திய பிறகு அந்தப் படைப்பைப் பற்றி இலக்கிய ஆளுமைகள் இருவர் சிறப்புரை ஆற்றுவார்கள். கலந்துரையாடலுடன் கூடிய வாசகர் பங்கேற்பு இந்த நிகழ்வுகளை உயிரோட்டமானதாக மாற்றுகிறது.
கார்த்திகேயன், அருண், கிருபாஷங்கர் ஆகிய மூன்று நண்பர்கள் முன்னின்று நிகழ்வுகளை ஒருங்கிணைக்கின்றனர். உடனிருக்கும் நண்பர்கள் பொருளாதார, தார்மீக உதவிகளைச் செய்கின்றனர்.
“புதிய புத்தகங்கள் மட்டுமல்லாமல் வெளியாகிச் சில ஆண்டுகள் ஆன படைப்புகளைப் பற்றியும் நாங்கள் விவாதிக்கிறோம். ‘கன்னி’, ‘பைசாசத்தின் எஞ்சிய சொற்கள்’, ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’, ‘ராஜன் மகள்’, ‘ஆழி சூழ் உலகு’ போன்ற நூல்கள் பற்றிய நிகழ்வுகள் மறக்க முடியாதவை” என்கிறார் அருண். சிறிய அளவில் இருந்தாலும் இதுபோன்ற ஆக்க பூர்வமான நிகழ்வுகள் பல இடங்களிலும் நடக்க ஆரம்பித்தால் தமிழின் வாசிப்புப் பண்பாடு மேம்படும் என்பது உண்மை.
- வா. ரவிக்குமார்,
தொடர்புக்கு: ravikumar.cv@thehindutamil.co.in