இலக்கியம்

தொடு கறி: சுகுமாரனின் கனடா பயணம்!

செய்திப்பிரிவு

சுகுமாரனின் கனடா பயணம்!

இயல் விருதைப் பெறுவதற்காக கனடா சென்ற கவிஞர் சுகுமாரன் அங்கு டோராண்டோவிலுள்ள ஓவிய, சிற்பக் காட்சியகமான ‘ஏஜிஓ’வுக்கும் காலாற சென்றுவிட்டு வந்திருக்கிறார். ஹென்றி மோரின் சிற்பப் பெண்ணுக்கு முன்புதான் இவ்வளவு பவ்யமாக நின்றுகொண்டிருக்கிறார் கவிஞர்!

காவேரியின் பூர்வ காதை!

காவேரி நதி தொடர்பாக நமது தொன்மங்களில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள், கலை இலக்கியங்களில் காவிரி தொடர்பான வர்ணனைகள், தகவல்கள் என்று காவிரி பற்றிய முழுச் சித்திரத்தை அளிக்கும் நூலை எழுதியிருக்கிறார் கோணங்கி.

காவிரிக் கரைகளில் நெடும் பயணம் மேற்கொண்டு இதைப் படைத்திருக்கிறார். ‘காவேரியின் பூர்வ காதை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தை ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ வெளியிடுகிறது.

வீட்டு வாசலிலேயே கவிதை நூல் வெளியீடு!

அகில இந்திய வானொலியில் பகுதிநேரச் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றும் கனகராஜ், ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர். தன்னுடைய ‘மனிதம் பழகு!’ கவிதை நூலை வித்தியாசமாக வெளியிட்டிருக்கிறார் கனகராஜ்.

சொந்த ஊரான கரூர் மாவட்டம், கடவூர் இடையப்பட்டி கிராமத்திலுள்ள தன் வீட்டு வாசலையே விழா மேடையாக்கியவர் உறவினர்கள், நண்பர்கள் என்று சுற்றத்தினர் எல்லோரையும் புடைசூழ அழைத்து, தன்னுடைய அம்மா, அப்பா கைகளால் நூலை வெளியிட்டிருக்கிறார்.

தமிழர் உரிமை மாநாடு!

தமிழக இடதுசாரிகள் முன்னைக் காட்டிலும் கூடுதல் ஆர்வத்தோடு தமிழர் அடையாளப் பிரச்சினைகளைக் கையில் எடுக்க தொடங்கியிருக்கிறார்கள்.

‘தமுஎகச’ என்று அழைக்கப்படும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சென்னை காமராஜர் அரங்கத்தில் ஜூன் 26 அன்று நடத்தவிருக்கும் ‘தமிழர் வாழ்வுரிமை மாநாடு’ இதன் மையப் புள்ளி ஆகியிருக்கிறது.

இந்தித் திணிப்புக்கு எதிராகவும், கீழடி ஆராய்ச்சி இந்திய வரலாற்றுக்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கும் வளங்களைப் பிரதானப்படுத்தியும் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் கருத்தரங்குகள், கலைநிகழ்வுகள் என்று ஒரு நாள் முழுக்கத் துடிப்பான நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருக்கின்றன.

மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெறவிருக்கும் புத்தகக் காட்சியில் ‘தி இந்து’வும் பங்கேற்கிறது. மாநாட்டின் முக்கியத்துவம் கருதி 50% வரையிலான தள்ளுபடி விற்பனையை ‘தி இந்து’ அறிவித்திருக்கிறது.

பெட்டி வந்தாச்சு!

இது படப்பெட்டி அல்ல. புத்தகப் பெட்டி. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியான சிறந்த புத்தகங்களை இரண்டு இளைஞர்கள் அறிமுகப்படுத்திப் பேசுகிறார்கள். ஆங்கிலப் புத்தகம் குறித்து ஒருவரும், தமிழ்ப் புத்தகங்கள் குறித்து இன்னொருவரும் விவாதிக்கிறார்கள். அந்த வீடியோக்களை அவ்வப்போது யூடியூப் தளத்தில் 'இலக்கியப் பெட்டி (லிட்டரேச்சர் பாக்ஸ்)' எனும் சேனலில் பதிவேற்றுகிறார்கள்.

புத்தகத்தின் தலைப்பு, அதன் ஆசிரியர் ஆகியவற்றுடன் அது வெளியான வருடம், அந்தப் புத்தகத்தின் பேசுபொருள், அந்தப் புத்தகத்தின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து சுமார் 15 நிமிடங்கள் பேசுகிறார்கள் அவர்கள். புத்தக விமர்சனமாக இல்லாமல் புத்தக அறிமுகமாக இந்த முயற்சியை அவர்கள் மேற்கொண்டுவருகிறார்கள். சி.சு. செல்லப்பாவின் ‘வாடிவாசல்’, எஸ். ராமகிருஷ்ணனின் ‘பதின்’, ‘நிலவழி’, ஜெயமோகனின் ‘அனல் காற்று’, ஜான் பெர்க்கின்ஸின் ‘ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்’ போன்றவை இவர்கள் அறிமுகப்படுத்திய நூல்களுள் சில. முழுப் புத்தகத்தையும் வாசிக்க நேரமில்லையே என்று கவலைப்படுகிறவர்கள், இந்தப் புத்தகத்தை வாங்கலாமா, வேண்டாமா என்று யோசிப்பவர்கள் எனப் பலருக்கும் இது பயனுள்ள தளமாக இருக்கிறது. இந்த யூடியூப் தளத்துக்கான இணைப்பு: http://bit.ly/2rLXPXl

SCROLL FOR NEXT