இலக்கியம்

இலங்கையிலிருந்து பிரபஞ்சம் முழுமைக்கும்...

செய்திப்பிரிவு

அசட்டு ஐதிகங்களுக்கு அப்பால் வரலாறு, விஞ்ஞானம், தத்துவம், அரசியல் என பலவித ஞானங்களையும் ஊடுருவி பிரச்சினைகளின் மூலாதாரங்களை உண்மையின் ஒளிகொண்டு தேடியவர் பிரமிள். அதீத விழிப்பு நிலையின் அலைக்கழிப்பே அவர் இருப்பாக இருந்துள்ளது.

அவரது பிறப்பு, இளம் பருவம் திரிகோணமலையோடும் படைப்பியக்கம் தமிழகத்தோடும் தொடர்புடையது. இருப்பினும் பிரமிளில் வெளிப்படும் மனிதன் ஒரு குறிப்பிட்ட நிலத்துடனோ பூர்வீகத்தோடோ தொடர்புடையவன் அல்ல. தன்னை உலக மனிதனாக உணரும் புள்ளியில் இருந்தே பிரமிளின் கேள்விகள் தொடங்குகின்றன. எனவே, தமிழீழ அரசியல் உள்ளிட்ட எந்த ஒரு அரசியல் சார்பு நிலைக்கு வெளியிலும் அரசியல் நிலைப்பாடுகளின் இடைவெளிகளுக்குள்ளும் நின்று அவரால் அணுக முடிந்துள்ளது. சித்தாந்தங்களுக்கு அப்பாலான உண்மைகள், பொதுமைகள், மனித நெறிகள் நோக்கிய விழிப்புநிலையே அவரது ஆதாரமாகிறது. எனவே, ஈழம் குறித்த பிரமிளின் பிரதிபலிப்புகளில் தனித்துவமான அபூர்வ கவனங்கள் கிடைக்கின்றன.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘லங்காவின் தேசியத் தற்கொலை’ நூலில் அப்படிப் பலவற்றைக் கவனிக்கலாம். இனவாதத்தின் குரூர வெளிப்பாடாகிய யாழ் நூலக எரிப்பு குறித்துப் பேசுகையில் உண்மையில் நூலக எரிப்புக்குப் பதிலாக நூல்களைக் கொள்ளையடித்துக் கொண்டுபோய் சிங்களப் பகுதியில் அதை அவர்கள் மறுநிர்மாணம் செய்திருந்தால் அது ஒரு புதிய அறிகுறியாக இருந்திருக்கும் என்பது பிரமிளுக்கே உரிய நுட்பமான கவனம். ஆயுத இயக்கங்களிலிருந்தும் தனி ஈழக் கொள்கையிலிருந்தும் விலகி இருந்த கொழும்புத் தமிழர்களை 83 படுகொலைகளே அவற்றை நோக்கிப் பலவந்தமாகத் தள்ளியதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார். சிங்கள இனவாதம் சிங்களத் தரப்பின் குடிமை ஜனநாயகத் தளங்களையும் முடக்கியதையும் கவனப்படுத்துகிறார்.

தமிழ்த் தரப்பில் 50-கள் தொடங்கி நிகழ்ந்த அற வழிப் போராட்டங்கள் வடபுல மத்தியதர மற்றும் மேல்வர்க்கத்தினரின் கவுரவத் தேர்வே அன்றி காந்திய அகிம்சையின் தத்துவார்த்த அரசியல் உள்ளடக்கம் அதற்கு இல்லை என்பது பிரமிள் கணிப்பு. மலையகத் தமிழரை ஆரம்பத்திலேயே தமிழ்த் தேசக் கருத்துருக்குள் உள்ளடக்கத் தவறிய வரலாற்றுத் தவறையும் அதற்குப் பின்னான வர்க்க, சாதிய வல்லுணர்வுகளையும் பிரமிள் கூர்ந்து அவதானிக்கிறார்.

தமிழ்ப் பெருமிதக் கதையாடல்கள் தமிழரின் கற்பனாவாதங்களின் எல்லையில் குறுகியதே அன்றி தமிழின் தத்துவப் பண்பாட்டுச் செவ்வியல் செறிவுகளை உள்வாங்கவில்லை . 1974-ல் யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டின்போதும் நவீன அறிவுபூர்வ ஆய்வுகளைக் காட்டிலும் சாகசவாத உணர் வெழுச்சிக் கதையாடல்களே முன்னின்றதை பிரமிள் சுட்டிக்காட்டுகிறார். தமிழ்ப் புலமைத்துவம் கொண்ட சிங்கள அறிவாளர்களையும் அந்த மாநாடு உள்ளடக்கியிருந்தால் அது வேறுவிதமான சமிக்ஞைகளைக் காட்டியிருக்கும் என்று அவதானித்திருக்கிறார்.

இலங்கை என்னும் பிராந்தியம் சர்வதேச அரசியல் வலைப் பின்னல்களின் ஒரு கண்ணியாக மாறிவந்ததை 80-களிலேயே ஊகிக்கிறார் பிரமிள்.

பிரமிள் முதன்மையாக ஒரு கவி ஆளுமை. நிதர்சனத்தை ஊடுருவும் கூரிய விமர்சன சக்தியுடன் துடி கொள்ளும் மொழியும் கற்பனையின் அசாதாரண அறிமுறைகளையும் கொண்டவை பிரமிள் கவிதைகள். இனப்படுகொலை குறித்த கவிதைகள் எதிர்த் தரப்பின் ஆழ்மனதை ஊடுருவிக் கேள்வி கேட்பவை; உலக மானுடத்தையும் நல்லறிவையும் குற்றவுணர்ச்சியின் தீவிரத் தவிப்புக்கு உட்படுத்துபவை.

தொகுப்பில் இடம்பெற்றுள்ள புனைகதைகள் கதை கூறலின் பரப்புக்குக் கீழ் பலவித விவாதத் தளங்களைக் கொண்டவை. இனவாதம் கொடூரமாக முகங்காட்டத் தொடங்கிய 83-க்கு முன்னும் பின்னுமான இரு வேறு சரித்திர நிலைகளின் பின்தளத்தில் லங்காபுரி என்னும் வன கிராமத்தில் நிகழும் ‘லங்காபுரி ராஜா கதை, சாதாரண மனிதர்களிடையே இருக்கும் இனவாதம் மீறிய மனித மாண்புகளின் சாத்தியங்களைப் பேசுகிறது. பிரமிளின் நண்பர் ஒரு விடுதலை இயக்கத்தால் சுட்டுக் கொல்லப்பட நிஜ சம்பவத்தின் பின்னணியில் புனையப்பட்ட கதை இது.

பிரமிளின் ஆன்மிகம் இந்தியப் பகுத்தறிவுவாத அவைதிகத் தொடர்பு கொண்டது எனலாம். உலகியலின் துடிப்புகளிலிருந்து விரிவு கொள்ளும் ஆன்மிகமே அவர் நாடியது எனலாம். சாது அப்பாதுரையின் ஞான சிந்தனைகள் அடங்கிய பிரமிளின் ‘தியானதாரா’ என்னும் நூல் இத்தொகுப்பின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. தன்னை அறிதல் என்ற எல்லைக்கு அப்பால் பிறிதை, மற்ற இருப்புகளை அறிவதன் ஆன்மிகத்தை இது திறக்கிறது. ‘அஹம் பிரம்மாஸ்மி’, ‘நான் பிரம்மமாக இருக்கிறேன்’ எனக் கூறும்போதே நானும் பிரம்மமும் வேறுபட்டுவிடுகிறது என்கிறார் சாது அப்பாதுரையார். சிங்கள இனவாத பீதிச் சூழலில் திரிகோணமலையில் சிங்கள மக்களின் வழிபாட்டுக் குறியீடுகளாக விளங்கிய போதி மரங்கள் வெட்டப்பட்டதை அப்பாதுரையார் தடுக்க முயன்றதையும் பிரமிள் சுட்டிக் காட்டுகிறார்.

இலங்கை குறித்த பிரமிளின் அனைத்து பதிவுகளையும், சிறு கடிதக் குறிப்புகள்கூட விடாது தொகுத்திருக்கும் கால சுப்பிரமணியத்தின் முயற்சி ஈழ விடுதலை குறித்து 2009-க்குப் பிறகு தொடரும் பல்முனை விவாதங்களில் முக்கிய மீள்பார்வை தரப்பாக இணையக் கூடியது.

- பிரவீண் பஃறுளி, விமர்சகர், உதவி தமிழ்ப் பேராசிரியர், தொடர்புக்கு: pagruli@gmail.com

தெற்குவாசல் கடல் நடுவே ஒரு களம்

இலங்கை குறித்த கவிதைகள், கதைகள், கட்டுரைகள்

பிரமிள்

தொகுப்பாசிரியர்: காலசுப்ரமணியம்

விலை: ரூ. 350

வெளியீடு: பரிசல் புத்தக நிலையம், மயிலாப்பூர் 600 004.

தொடர்புக்கு: 93828 53646.

SCROLL FOR NEXT