இலக்கியம்

ஏழுமலையானுக்கு கவி ஆராதனை

ஆசை

நமக்கு நமது சொத்தான சங்க இலக்கியம் தெரியாது, ஆழ்வார்கள் பாடல்கள் தெரியாது, கம்ப ராமாயணம் தெரியாது, இடைக்காலச் சிற்றிலக்கியங்கள் தெரியாது, சித்தர் பாடல்கள் தெரியாது. அப்படியே தாயுமானவர் பாடல்கள், வள்ளலார் பாடல்கள் என்று கொஞ்ச நாள் கழித்து பாரதியார் பாடல்களும் 'நமக்குத் தெரியாதவற்றின்' பட்டியலுடன் சேர்ந்துவிடும்.

இந்த நிலையில் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததும் தமிழின் சகோதரியுமான தெலுங்கு மொழியில் கவி பாடிய அன்னமையாவைப் பற்றி நமக்குத் தெரிந்திருக்க எந்த விதத்திலும் நியாயமில்லை. (நாகார்ஜுனா மீசையை எடுக்காமல் நடித்த தெலுங்குப் படமான 'அன்னமையா' நினைவிருக்கிறதா?) ஆனால், இதைப் பற்றியெல்லாம் யாராவது ஒரு வெளிநாட்டுக்காரர் வந்து பார்த்து வியந்து சொன்னால் அப்புறம் நாம் திரும்பிப் பார்ப்போம். அதுதான் இப்போது அன்னமையாவுக்கும் நிகழ்ந்திருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாகவியான அன்னமையாவைத் தெலுங்கு இலக்கியமும் சரி, கர்நாடக சங்கீதமும் சரி ஜந்து நூற்றாண்டுகளாகப் புறக்கணித்துதான் வந்திருக்கிறது.

திருப்பதி தேவஸ்தானத்தில் அன்னமையாவின் 13,000 பாடல்களையும், 2,289 தாமிரப் பட்டயங்களில் பொறித்து ஓர் அறையில் பூட்டி வைத்திருக்கிறார்கள். இந்த இலக்கிய பொக்கிஷத்தை எல்லோருக்கும் சேர்க்க வேண்டும் என்ற உணர்வு இருபதாம் நூற்றாண்டின் கால் பகுதிக்குப் பிறகுதான் அறிஞர்களுக்குத் தோன்றியிருக்கிறது. திருப்பதி தேவஸ்தானத்தின் உடைமையாக இருக்கும் அன்னமையாவின் பாடல்களை (பதங்களை) திருப்பதி தேவஸ்தானமே 29 தொகுதிகளாக, அறுபதாண்டுகளில் இரண்டுமுறை வெளியிட்டிருக்கிறது.

அந்தத் தொகுதிகளிலுள்ள பாடல்களில் (மொழிபெயர்ப்பாளர்களே சொல்லிக்கொள்வதுபோல்) ஒரு சதவீதத்துக்கும் குறைவான எண்ணிக்கையுள்ள பாடல்களை வேள்ச்சேரு நாராயண ராவும், இஸ்ரேலின் ஹீப்ரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் டேவிட் ஷுல்மனும் சேர்ந்து மொழிபெயர்க்க ஆக்ஸ்ஃபோர்டு அதை நூலாக வெளியிட்டிருக்கிறது. கிட்டத்தட்ட நூறு பாடல்களைக் கொண்ட God on the Hill: Temple Poems from Tirupati புத்தகத்தைப் படிக்கும்போது ஆங்கிலத்திலே இவ்வளவு அழகாக இருக்கிறதே, மூலத்தில் படித்தால் இன்னும் எவ்வளவு அழகாக இருக்குமோ என்ற உணர்வு ஏற்படுகிறது. எல்லாப் பாடல்களும் கீர்த்தனைகளாகவே பல்லவி, சரணங்களுடன் இயற்றப்பட்டிருக்கின்றன. சிருங்காரம், அத்யாத்மம் (தத்துவம்) ஆகிய இரண்டு பொருள்களிலும் பாடப்பட்ட அனைத்துப் பாடல்களுக்கும் தலைவன் ஏழுமலையானே.

சிருங்காரப் பாடல்களில் பெரும்பாலானவற்றில் அன்னமையா தன்னைப் பெண்போல கற்பனை செய்துகொண்டு பாடியிருக்கிறார். இதைப் படிப்பவர்களுக்கு நம்மாழ்வார், ஆண்டாள் போன்ற ஆழ்வார்களின் பாடல்கள் நினைவுக்கு வரக்கூடும். அன்னமையாவை நம்மாழ்வாரின் மறுபிறவி என்றே பலரும் கருதுகிறார்கள் என்று புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. சிருங்காரப் பாடல்களில் காம ரசம் ததும்புகிறது (தமிழில் தற்போது சிருங்கார ரசக் கவிதைகளை எழுதும் ஆண் கவிஞர்களும் பெண் கவிஞர்களும் அவசியம் படித்துப் பார்க்க வேண்டியவை). அன்னமையாவுக்கு விலக்கப்பட்டது என்று ஏதுமில்லை.

ஒரு பாடலில் தலைவிக்கு மாதவிலக்கு ஆகியிருக்கிறது; அந்த நேரத்தில் ஏழுமலையான் கூடலுக்கு வருகிறான்; கூடலும் முடிந்துவிடுகிறது. அதைப் பற்றித் தலைவியின் தோழி சொல்வதுபோன்ற பாவத்தில் அந்த பாடல் அமைந்திருக்கிறது. அது போன்ற ஒரு கவிதையைத் தற்போது பிரபலமாக உள்ள நவீன கவிஞர்கள் யாரும் எழுதியிருந்தால் நமது கலாச்சாரக் காவலர்கள் என்ன செய்திருப்பார்கள் என்று நினைத்துப் பார்த்துவிட்டுத் தூங்கினால் கனவில் எம்.எஃப் ஹுசைன் வருகிறார். யோசித்துப் பார்க்கும்போது முற்காலத்தில் நமது மனிதர்களின் பார்வை இப்போது உள்ளதைவிடச் சற்று விசாலமாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது.

மூலத்தோடு ஒப்பிட்டு மொழிபெயர்ப்பின் தரத்தைச் சீர்தூக்கிப் பார்க்க எனக்குத் தெலுங்கு தெரியாதென்றாலும் ஆங்கிலத்தில் படிக்கும்போதே தம்மளவில் இந்தப் பாடல்கள் சிறப்பாக இருக்கின்றன என்பதை வைத்து நல்ல மொழிபெயர்ப்பு என்றே சொல்லத் தோன்றுகிறது. மொழிபெயர்த்தவர்கள் ஒன்றும் சாதாரண ஆட்கள் அல்ல. ஏற்கெனவே இவர்கள் இருவரும் சேர்ந்து Classical Telugu Poetry உள்ளிட்ட சில மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டிருக்கிறார்கள். வேள்ச்சேரு நாராயண ராவ் Twentieth Century Telugu Poetry என்ற ஒரு மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டிருக்கிறார். ஆனால் இப்படிப்பட்ட அவசியமான குறிப்புகள் இந்த நூலில் கொடுக்கப்படவில்லை. எழுத்துருவின் அளவு (font size) மிகவும் சிறியதாக இருப்பது இந்நூலின் குறை. இந்தப் புத்தகத்தை, கவிதையில் ஈடுபாடு உள்ள அனைவரும் அவசியம் படித்துப் பார்க்க வேண்டும்.

SCROLL FOR NEXT