இலக்கியம்

அக்கரையிலிருந்து அசோகமித்திரனைத் தேடி...

ஷங்கர்

சமீபத்தில் மறைந்த அசோகமித்திரனின் அமரத்துவம் வாய்ந்த சிறுகதைகளில் ஒன்று ‘புலிக்கலைஞன்’. கோடம்பாக்கம் சினிமாவின் பகட்டான தோற்றத்துக்குப் பின்னால் பெரும் தொழிற்சாலையின் பற்சக்கரங்களாக இயங்கும் சாமானியர்களைப் பற்றி அவரளவு எழுதியவர்கள் வேறு யாருமில்லை. ஆனால், அவரது நாவல்களோ சிறுகதைகளோ இங்கே சினிமா ஆக்கப்படவேயில்லை.

இந்தச் சூழ்நிலையில் அசோகமித்திரனின் ‘புலிக்கலைஞன்’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு ‘டைகர் ஃபைட்’ என்னும் குறும்படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் மார்டின் ரெப்கா. ஆங்கிலத்தில் இந்தச் சிறுகதையைப் படித்துவிட்டு வியந்துபோன அவர், அசோகமித்திரனைத் தேடி சென்னைக்கு வந்து அனுமதி வாங்கி எடுத்த தமிழ்க் குறும்படம் இது. கோடம்பாக்கத்தில் ஒரு காலத்தில் பரபரப்பாக இருந்த இயக்குநர் சர்மாவின் அலுவலகம் அது. இயக்குநர் சர்மா, அடுத்த படம் வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாய நிலையில் திரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கும்போது, காதர் என்னும் புலியாட்டக்காரன் பசியோடிருக்கும் தன் குடும்பத்தினரைப் பற்றிச் சொல்லி நடிப்பதற்கு வாய்ப்பு கேட்கிறான். இயக்குநர் சர்மாவோ, தனக்கே வேலையில்லை என்ற எரிச்சலில் முதலில் அவனை நிராகரிக்கிறார். காதர் தன் ஜோல்னாப் பையிலிருந்து சலங்கை எடுத்துக்கொண்டு, பிறகு முகத்தில் புலியின் கோடுகளைச் சடுதியாக வரைந்து அந்த அலுவலக அறையில் புலியாக ஆடித் தன் பிரம்மாண்டத்தைக் காட்டிவிட்டுக் கிளம்பிப் போய்விடுகிறான்.

இயக்குநர் சர்மா, காதர் போன பிறகு அவன் ஏற்படுத்திவிட்டுப் போன தாக்கத்தை யோசித்துப் பார்க்கிறார். அவருக்கு அவனுடைய நடனம் தூண்டுதலை ஏற்படுத்த அவனையே நாயகனாக்கி, திரைக்கதையொன்றை உத்வேகத்துடன் எழுதுகிறார். அவனையே நாயகனாக்க காதரைத் தேடிப் போகிறார். காதரைக் காணவில்லை. ஏமாற்றத்துடன் டாக்ஸியில் ஏறும்போது, இயக்குநர் சர்மா காரின் கண்ணாடியில் தன்னைப் புலியாகப் பார்க்கிறார்.

கோடம்பாக்கம் சினிமாவுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இக்குறும்படத்தில் கோடம் பாக்கம் சினிமா உலகின் வெளித் தெரியும் ஜொலிஜொலிப்பைத் தாண்டி யதார்த்தம் மற்றும் நடைமுறைகளை மார்டின் ரெப்கா அருமையாகப் பிடித்திருக்கிறார். இயக்குநர் சர்மாவாக வரும் நாசரின் பந்தா நடிப்பும், கூத்துப்பட்டறை பழனியின் புலியாட்டமும் இந்தப் படத்தையும் அசோகமித்திரனின் அற்புதமான கதையையும் உயிர்ப்பாக்குபவை.

- ஷங்கர், தொடர்புக்கு: sankararamasubramanian.p@thehindutamil.co.in

SCROLL FOR NEXT