எம்.எஸ். சுப்புலட்சுமிக்கும் சதாசிவத்துக்கும் ரசிகமணி எழுதிய கடிதங்கள் அடங்கிய ‘எப்போ வருவாரோ’ புத்தகத்தின் ஒரு கடிதத்திலிருந்து…
அருமைப் புதல்வி குஞ்சம்மாளுக்கு
வெகுநாளாகக் கேட்காத தங்கக் குரலை நேற்று இரவு பத்து மணிக்கு ரேடியோவில் கேட்டோம்...
முன்னும் பின்னும் சங்கீதம் இருக்கத்தான் செய்தது. ஆனால், அதெல்லாம் காதில் விழவில்லை. உள்ளத்தில் இறங்கவே இல்லை. ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’ என்று வரவும் நடனத்தைப் பார்த்துக்கொண்டிருப்பதாகவே தோன்றியது… உடல் உயிர் எல்லாவற்றையும் உருக்கிவிட்டது... மேல்நாட்டார் இந்த விஷயத்தை இன்னும் அறிந்ததாகத் தெரியவில்லை. தமிழும் ராகமும் சேர்ந்து செய்கிற வேலை அபாரம் என்பதைத் தெரிந்துகொண்டால் நம்முடைய ராகங்களையும் தமிழையுமே கற்க ஆரம்பித்துவிடுவார்கள்.
நேற்றைய கச்சேரியை எலெக்ட்ரிக் ரிக்கார்டு செய்துவிட்டு எல்லாருமாகப் பதினைந்து நாளுக்கு முன்னதாகவே குற்றாலத்துக்கு வந்திருக்கலாம். எல்லாருமாகவே சேர்ந்து உட்கார்ந்துகொண்டு அவ்வளவையும் கேட்டிருக்கலாம்... குற்றாலம் இந்த வருஷம் வெகு சுகமாய் இருக்கிறது. அருவியும் காற்றும் இடைவிடாது இதம் செய்துகொண்டிருக்கின்றன... எத்தனைபேர் வந்து குளித்துப்போய் என்ன செய்ய. நாம் அனுபவியாத காற்று காற்றா, குளிக்காத அருவி அருவியா?
அன்புள்ள,
டி.கே. சிதம்பரநாதன்
(16.08.1948 அன்று எழுதிய கடிதம்)
எப்போ வருவாரோ…
தொகுப்பு: திருமதி. வள்ளி முத்தையா
வெளியீடு: தோழமை வெளியீடு, சென்னை-78.
தொடர்புக்கு: 99401 65767