பாரதி பிறந்தநாளுக்காக பல்வேறு விழாக்களை அரசு புதன்கிழமை நடத்த திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில் புதுச்சேரியிலுள்ள பாரதி வசித்த இல்லம், நிதி ஒதுக்கி பணிகள் தொடங்காததால், இடிந்து விழும் நிலையிலுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த இல்லம் மூடிக்கிடப்பதுதான் சோகம்.
பாரதி, புதுவையில் பத்து ஆண்டுகளாக தங்கியிருந்த வீடு, ஐந்து ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. இந்த வீடு புதுச்சேரி, ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ளது.
தற்போது இந்த வீட்டின் முன்புறம் வெடிப்பு மிகுந்த தூண்கள்தான் காணப்படுகிறது. அறிவிப்பு பலகையில் எழுத்துகள் விழுந்துவிட்டன. மேல்தளம் விழும் நிலையில் இருப்பதால் கம்புகள் வைத்து முட்டு தரப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தமிழ் ஆர்வலர்கள் கூறுகையில், “பாரதியின் கையெழுத்து பிரதிகள், ஆவணங்கள், அரிய பொக்கி ஷங்கள் இங்குதான் இருந்தன. வீட்டின் பல இடங்களில் விரிசல் விழுந்ததால், புதுப்பிக்க முடிவு எடுத்து 2009ல் தற்காலிகமாக மூடப்பட்டது. முக்கிய ஆவணங்களில் பல, பாரதியார் அருங்காட்சியகத்துக்கும், பின்னர் சுப்பையா நினைவு நூலகத்திலும் மாற்றி வைக்கப்பட்டன. பாரதியார் இல்லத்தில் இருந்த 17 ஆயிரம் புத்தகங்கள், கையெழுத்து பிரதிகளில் 3 ஆயிரம் மட்டுமே மாற்றி வைக்கப்பட்டன. வீடே தற்போது மோசமான நிலையில் புத்தகங்கள், கையெழுத்து பிரதியெல்லாம் என்னவாகியிருக்கும் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை.
பாரதி இல்லத்தை இடிக்காமல் அப்படியே செப்பனிடுமாறு புதுச்சேரி இன்டாக் (பழமையான கட்டிடங்களைப் பாதுகாக்கும் அமைப்பு) குறிப்பிட்டது. ஆனால் பொதுப்பணித்துறையோ இடித்துவிட்டு அதேபோல் கட்டலாம் என்றனர். இதனால் முதலில் காலதாமதம் ஏற்பட்டது. பாரதிக்கு அரசு விழா எடுக்கும் அதேநேரத்தில் அரசு கட்டிடம் ஒன்றில் பாரதியின் இல்லத்திலிருந்த அனைத்து பொக்கிஷ படைப்புகளை பார்வைக்கு வைக்க முதலில் அரசு முயற்சிக்க வேண்டும். பாரதி இல்லத்தை அரசு சீரமைக்கும் என்ற நம்பிக்கை குறைய தொடங்கிவிட்டது. அவர் வாழ்ந்த இல்லத்தையும், படைப்புகளையும் பாது காப்பதும் முக்கியம்தானே” என்கின்றனர். அரசு தரப்பில் விசாரித்தபோது, “பாரதி இல்லத்தை ரூ. 99 லட்சம் செலவில் பழமை மாறாமல் சீரமைக்க உள்ளோம்” என்று குறிப்பிட்டனர்.