இரண்டாம் உலகப் போரால் ஏற்பட்ட இழப்புகளில் உலகம் ஆழ்ந்திருந்த நேரத்தில், நவீன உலகத்தின் தொழிற்சங்கங்கள் இணைந்த கூட்டமைப்பு 1945-ல் உதயமானது. பொதுவுடைமைக் கொள்கையின் பிதாமகன் காரல் மார்க்ஸ், முதலாளித்துவமே அனைத்துப் பிரச்சினைகளுக்குமான ஊற்றுக்கண் என்பதை விளக்கியதுடன், அதைத் தகர்ப்பதற்கான வழியாக 1864-ல் 'முதலாம் அகிலம்' என்ற தொழிற்சங்கக் கூட்டமைப்பை நிறுவியிருந்தார்.
அதன் மேம்பட்ட வடிவத்தை முன்மொழிந்த எங்கல்ஸ் 'உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்!' என்ற உத்வேகமிக்க வாசகத்தை அதன் அடிப்படைக் கோட்பாடாக முன்வைத்தார். இந்த வாசகமும் முதலாம் அகிலமும் உலகத் தொழிலாளர்களை இன்றுவரை ஈர்த்து ஒன்றிணைந்து போராட வைத்துக்கொண்டிருக்கின்றன. உலகத் தொழிற்சங்க இயக்கத்தின் இந்த நீண்ட, நெடிய வரலாற்றை 'சர்வதேச பாட்டாளி வர்க்க இயக்கம்' என்ற நூலின் மூலம் முதன்முதலாக விரிவாகப் பதிவு செய்துள்ளார் மேற்குவங்கத்தைச் சேர்ந்த சுகுமால் சென். தொழிலாளர்கள் நடத்திய புரட்சியால், ரஷ்யாவில் உலகின் முதல் பொதுவுடைமை ஆட்சி அமைக்கப்பட்ட நூற்றாண்டில் இந்த நூல் வெளியாகியிருப்பது பொருத்தமானது.
-ஆதி