இலக்கியம்

விசித்திர வாசகர்கள்!- கதிரேசனின் கடைசி அத்தியாயம்

செய்திப்பிரிவு

கதிரேசனின் வாசிப்புப் பழக்கம் அவனுடைய வாழ்க்கையுடன் விளையாடிவிட்டது. அதைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்னால் கதிரேசன் பற்றிய சிறு குறிப்பு.

அறுபதுகளின் இறுதியில் கதிரேசனை தஞ்சை ப்ரகாஷின் இலக்கிய வட்டத்தில் பார்த்தேன். ஒடிசலான தேகம்.சோடாபுட்டிக் கண்ணாடி. எங்களுடைய இலக்கியப் பேச்சில் கலந்துகொள்ள மாட்டான். அவனுக்குத் தேவை ஒரு புத்தகம் அவ்வளவுதான். எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் கடைசி அத்தியாயத்திலிருந்து படிக்கத் தொடங்குவான்.

“ஏன்டா இப்படிப் படிக்கிறாய்?” என்று கேட்டால் நீயும் படிச்சுப்பாரு சுவாரசியமாக இருக்கும் என்பான்.

ஏதோ ஒரு மருந்துக் கம்பெனியில் வேலை. வாங்குகிற சம்பளம் முழுவதையும் புத்தகங்கள் வாங்கவே செலவழிப்பான். வீட்டில் வயதான அப்பா, அம்மா. அவர்களுக்கு ஒரே பிள்ளை இவன். ஒழுங்காகத்தான் இருந்தான். தஞ்சை ப்ரகாஷிடம் சேர்ந்து ‘கெட்டுப்’போய்விட்டான் என்பது அவர்களின் அபிப்பிராயம்.

ஒருநாள் விஷயம் ரொம்பவும் சீரியசாகிவிட்டது. கதிரேசனின் பெற்றோர் பெரிய உறவுக்காரக் கும்பலுடன் வந்துவிட்டார்கள் ப்ரகாஷிடம் முறையிட்டார்கள்.

“இந்தப் புஸ்தகப் பழக்கம் வந்த பிறகு புஸ்தகமே கதியாகக் கிடக்கிறான். நீங்கள்தான் காரணம். கலியாணம்கூட வேண்டாமாம்” என்று ப்ரகாஷ் மீது நேராகக் குற்றம் சாட்டினார்கள்.

இதை நாங்கள் எதிர்த்தோம். ப்ரகாஷ் எங்களை கையமர்த்தினார். எதுவுமே பேசவில்லை. செயலில் இறங்கினார். கதிரேசனுக்குப் பெண்பார்க்கக் கிளம் பினார். மூல அனுமார் கோயில் அருகில் ஒரு சந்து. அங்கேதான் பெண்வீடு இருந்தது. கதிரேசன் விட்டேற்றியாக வந்தான். கையில் வழக்கம்போல் ஒரு புத்தகம்.

பெண், பார்க்க லட்சணமாக இருந்தாள். தாலுகா அலுவலகத்தில் கிளார்க்காக வேலை பார்த்தாள். கதிரேசனுக்கு இதைவிட நல்ல இடம் கிடைக்கப்போவதில்லை. வழக்க விரோதமாக கதிரேசன் பெண்ணோடு பேசப் பிரியப்பட்டான். ஐந்து நிமிடம் அனுமதித்தார்கள். பேசிவிட்டு வந்தான். முகம் சுரத்தாக இல்லை.

“இந்தப் பொண்ணு வேண்டாம் ப்ரகாஷ்” என்றான் ஒரே வரியில்.

“ஏன்டா என்ன ஆச்சு?”

“இந்தப் பொண்ணு ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படிச்சதே இல்லியாம்! ‘பொன்னியின் செல்வ’னைப் படிக்காத பொண்ணைப் பொண்டாட்டியா எப்படி ஏத்துக்கறது?” என்றான்.

இப்படிப் பெண்பார்க்கப் போகிற இடமெல்லாம் பெண்ணிடம் “காண்டேகர் படித்திருக்கிறாயா? பாரதியாரின் ‘சின்ன சங்கரன் கதை’ படித்திருக்கிறாயா என்று கேட்க ஆரம்பித்தான்.

பெண்கள் பயந்து பின்வாங்கினார்கள்.

இப்படியாகக் கதிரேசனுக்குப் பெண் பார்க்கும் வைபவங்கள் தோல்வியில் முடிந்தன. கதிரேசன் வேலைபார்த்த மருந்து கம்பெனி கர்நாடகத்துக்குப் போய்விட்டது. கூடவே கதிரேசனும் போய்விட்டான்.

அடடா! கதிரேசனுக்குக் கலியாணம் ஆயிற்றா இல்லையா? அவன் புத்தக ரசனைக்கு ஏற்ற பெண் கிடைத்திருப்பாளா?- என்று கேள்விகள் என் மனசுக்குள் சில சமயம் எழும்.

“கதிரேசன் புத்தகப் பிரியன். அவன் மனைவியும் வாசிப்பு ஆர்வம் உடையவளாக இருக்க ஆசைப்படுவதில் என்ன தவறு?” என்று ப்ரகாஷிடம் கேட்டோம்.

ப்ரகாஷ் சிரித்தபடி சொன்னார்: “ஒருவேளை கதிரேசன் புத்தகங்களைக் கடைசி அத்தியாயத்திலிருந்து படிப்பது மாதிரி வாழ்க்கையையும் கடைசி அத்தியாயத்திலிருந்து படிக்க ஆரம்பித்துவிட்டான் போல!”

ப்ரகாஷ் சொன்னது புரியவில்லை. ஆனால் ரசிக்கும்படி இருந்தது.

-கோபாலி, தொடர்புக்கு:- thanjavurkavirayar@gmail.com

SCROLL FOR NEXT